நாடாளுமன்றில் நீதிமன்ற அவமதிப்புக்கு எதிராக வடக்கு கிழக்கில் போராட்டம் (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

நாடாளுமன்ற சிறப்புரிமை என்ற போர்வையில் நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயற்படும், உயர்மட்ட இலங்கை இராணுவ அதிகாரியும், தலைநகரின் ஆளும் கட்சியின் மக்கள் பிரதிநிதியுமான ஒருவரை கண்டித்து வடக்கு, கிழக்கில் சட்டத்தரணிகள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கப் பிரதிநிதிகள் இன்றைய தினம் ஜூலை 11ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட/நீதவான் நீதிமன்றம் மற்றும் மட்டக்களப்பு நீதிமன்ற வளாகத்திற்கு முன்பாக பதாகைகளை ஏந்தி அமைதியான முறையில் போராட்டம் நடத்திய அதேவேளை வடக்கு, கிழக்கின் ஏனைய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு தமது ஆதரவை வெளிப்பபடுத்தியுள்ளனர்.

சரத் வீரசேகரவின் கூற்று இந்த நாட்டின் நீதித்துறை மற்றும் சமூகத்தின் மீதான அடிப்படையற்ற வெட்கமற்ற தாக்குதல் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்திருந்தது.

கடந்த ஜுலை 4ஆம் திகதி குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் பௌத்த பிக்குகள் குழுவொன்று சமய வழிபாடுகளில் ஈடுபட்டிருந்த போது, நீதிமன்ற விசாரணை இடம்பெறுவதாக தெரிவித்து முல்லைத்தீவு நீதவான் டி.சரவணராஜாவின் உத்தரவின் பேரில் அது நிறுத்தப்பட்டதோடு, முன்னாள் பொது பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் வீரசேகர, இவ்விடயம் தொடர்பில் விசாரிக்க முற்பட்டிருந்தார்.

“கொஞ்சம் சொல்லுங்கள், இங்கே விசாரணை நடக்குது. அப்படி என்றால் எல்லோருக்கும் வாய்யப்பளிக்க வேண்டும். இங்க நீதிமன்ற விசாரணை இருக்கு. அந்த தேரருக்கு சொல்லுங்கள். நான் அங்கே திரும்பிப் போனால் பிரச்சினை ஏற்படும். விசாரணை நடக்கிறது. நீதிமன்றத்தின் அனுமதி இல்லாமல் யாரும் எதுவும் செய்ய முடியாது.” நீதவான் டி.சரவணராஜா பொலிஸ் அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிப்பதை அப்பகுதி ஊடகவியலாளர்கள் காணொளி பதிவு செய்துள்ளனர்.

நீதிபதியின் உத்தரவுக்குப் பின்னர், தேசிய பாதுகாப்பு குறித்த கண்காணிப்புக் குழுவின் தலைவரான சரத் வீரசேகர, நீதவானின் விவகாரங்களில் தலையிட முயன்றார்.

ஜூலை 7 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் சம்பவம் தொடர்பில் உண்மைகளை விளக்கி உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர, இது பௌத்த நாடு என்பதை நீதவானுக்கு ஞாபகப்படுத்துவதாக குறிப்பிட்டிருந்தார்.

“விசாரணை இருக்கிறது. விசாரணையின் போது வழிபாட்டில் ஈடுபட்டமைக்காக, இது ஒரு பௌத்த நாடு என்பதை இந்த நீதிபதிக்கு நினைவுபடுத்த வேண்டும். பௌத்த தேரர், துறவிகளுடன் சேர்ந்து குருந்தி விகாரையில் மலர் வைத்து வழிபட்டால், அது விசாரணைக்கு எப்படித் தடையாக இருக்கும் என நான் கேட்க விரும்புகிறேன்.”.”

நீதித்துறையின் சுதந்திரத்திற்கு மதிப்பளித்து அதனை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தினதும் ஏனைய அனைத்து நிறுவனங்களினதும் பொறுப்பாகும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

“எந்தக் காரணத்திற்காகவும், நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ, எந்தத் தரப்பினரிடமிருந்தும், எந்தத் தடையும், தேவையற்ற செல்வாக்கு, தூண்டுதல், அச்சுறுத்தல்கள் அல்லது குறுக்கீடுகளும் இன்றி, உண்மைகளின் அடிப்படையில், பாரபட்சமின்றி, சட்டத்தின்படி, நீதிமன்றம் தன் முன் இருக்கும் விடயங்களை பாரபட்சமின்றி தீர்மானிக்க வேண்டும்,” என சங்கத்தின் தலைவர் கௌசல்யா நவரத்ன மற்றும் செயலாளர் இசுரு பாலபபெந்தி ஆகியோரின் கையொப்பத்துடன் ஜூலை 10 ஆம் திகதி வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, நீதித்துறையின் சுதந்திரத்தை மதித்து, அதற்கு அமைய செயற்பட வேண்டியது அரசு மற்றும் எதிர்க்கட்சிகளின் பொறுப்பாகும், மேலும் நீதித்துறையில் தலையிடுவது வன்மையாகக் கண்டிக்கப்பட வேண்டிய ஆபத்தான முன்னுதாரணமாகும் என சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ரியர் அட்மிரல் வீரசேகரவின் கூற்றைக் கண்டித்து ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றிய முல்லைத்தீவு சட்டத்தரணிகள் சங்கம், ஜூலை 11ஆம் திகதியான இன்று முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியதோடு, இதில் யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், கிளிநொச்சி, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் பங்கேற்றனர்.

“நீதித்துறைக்கு அரசியல் அச்சுறுத்தல் வேண்டாம், நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாப்போம், நீதித்துறையின் விவகாரங்களில் தலையிடாதே, நீதித்துறையின் சுதந்திரமே ஜனநாயகத்தின் தூண், நீதிபதிகளின் கடமைகளில் தலையிடாதே, துஷ்பிரயோகம் செய்யாதே. நாடாளுமன்றத்தின் சிறப்புரிமைகளை தவறாக பயன்படுத்தாதே,” போன்ற வாசகங்கள், சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு மௌனப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Facebook Comments