இலங்கை ஜனாதிகதி ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் ஜனநாயக ரீதியிலான போராட்டக்காரர்கள் மீதான அடக்குமுறைகள் மற்றும் கைதுகளுக்கு தென்னிலங்கையின் மகளிர் அமைப்பு ஒன்று தமது கடும் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளது.
சட்டத்தை முறையாக செயற்படுத்தமாறும், அமைதியான போராட்டக்கார்கள் மீதான தாக்குதல்களுக்கு காரணமானவர்களை கண்டறிந்து நியாயத்தை நிலைநாட்டுமாறும் ஜனநாயக போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தின் அவசரகால நிலை பிரகடனத்தையும், கோட்டா கோ கம உள்ளிட்ட போராட்டக்காரர்களை போதைக்கு அடிமையானவர்கள், தீவிரவாதிகள் என முத்திரை குத்துவதையும் சந்தேகத்திற்கு இடமின்றி கண்டிப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
இலங்கையில் மோதல் இடம்பெற்ற காலத்தில் வடக்கு கிழக்கு வாழ் தமிழர்களின் உரிமைக்காக குரல் கொடுத்த இளைஞர் யுவதிகள் மீதும் இவ்வாறே பயங்கரவாத அல்லது பாசிசவாத முத்திரை குத்தப்பட்டதாக, ஜனநாயக போராட்டங்களுக்கான பெண்கள் அமைப்பின் உறுப்பினராக சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
“வடக்கு கிழக்கில் தமிழர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்த இளைஞர் யுவதிகள், சிவில் சமூக செயற்பாட்டாளர்களை கட்டுப்படுத்த அடக்குமுறையை கையாண்ட நிறைவேற்றதிகாரம் இன்று அதே பாணியிலான செயற்பாடுகளை தென்னிலங்கையில் முன்னெடுக்கிறது” என சட்டத்தரணி ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
ஜனநாயக போராட்டங்கள் மீதான அடக்குமுறைகள் இலங்கையில் புதியவை அல்லவெனவும், கடந்த 74 வருடங்களாக இதுவே இலங்கையில் இடம்பெற்று வருவதாகவும் அந்த அமைப்பின் மற்றுமொரு உறுப்பினராக ஷமிலா துசாரி தெரிவிக்கின்றார்.
”நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் இருந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கின்றோம். அடக்குமுறை தொடர்கிறது. அவசரகால ஒழுங்கு வீதிகள் ஊடாக இடம்பெறும் அடக்குமுறைகள், போராட்டக்காரர்களை வேட்டையாடும் செயற்பாடுகள் புதிய ஒன்று அல்ல” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஜனநாயக ரீதியில் தமது உரிமைகளுக்காக அமைதியாக போராடுவோரை அடக்குவது மற்றும் கைது செய்யும் செயற்பாடுகள் ஜிஎஸ்பி பிலஸ் வரிச்சலுகையை இலங்கைக்கு இல்லாமல் செய்யும் அபாயத்தை தோற்றுவித்துள்ளதாகவும் ஷமிலா துசாரி எச்சரித்துள்ளார்.
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழித்து மக்கள் பேரவையை நிறுவ வேண்டுமென்பதோடு, தற்போதைய நாடாளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தி புதிய மக்கள் ஆணையை பெற வேண்டுமெனவும் ஜனநாயக போராட்டங்களுக்கா பெண்கள் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.