சமூக ஆர்வலரான முஸ்லிம் எழுத்தாளருக்கு அரசு ஒரு மில்லியன் இழப்பீடு வழங்க உத்தரவு

0
Ivory Agency Sri Lanka

நாடுகளுக்கிடையே ஒற்றுமையை வளர்க்க மேற்கொள்ளப்பட்ட சட்டத்தை தவறாகப் பயன்படுத்தி ஐந்து மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்ட முஸ்லிம் எழுத்தாளரின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அவருக்கு இழப்பீடும் நீதிமன்றக் கட்டணமும் வழங்குமாறு அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

நவம்பர் 14ஆம் திகதியான இன்றைய தினம், உயர் நீதிமன்றம், குற்றவியல் விசாரணைப் பிரிவின் தலைமைப் பரிசோதகர் B.M.A.S.K. சேனாரத்ன மற்றும் குற்றவியல் விசாரணைப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் W. திலகரத்ன ஆகியோருக்கு சுதந்திர சிந்தனையுடைய எழுத்தாளரும் ஓய்வுபெற்ற அரசாங்க அதிகாரியுமான ரம்சி ராசிக்கிற்கு அவர்களின் தனிப்பட்ட நிதியிலிருந்து இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு ஊழியர்கள் செய்யும் தவறுகளுக்கு அரசும் பொறுப்பு என்பதால் ரம்சி ராசிக்கிற்கு ஒரு மில்லியன் ரூபாய் இழப்பீடு வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

“சட்ட மீறல்களைத் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன என்பதை அரசு உறுதிப்படுத்தவில்லை என்றால், அரசு ஊழியர்கள் தங்கள் அலுவலகத்தைப் பயன்படுத்தி எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அரசே பொறுப்பேற்க வேண்டும்” என நீதிபதிகள் யசந்த கோதேகொட, குமுதுனி விக்ரமசிங்க, ஜனக் டி சில்வா ஆகிய நீதிபதிகள் அமர்வு வழங்கிய தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சமூக ஊடகங்களில் ரம்சி ராசிக் இட்ட பதிவின் அடிப்படையில் ICCPR சட்டத்தின் பிரிவு 3 (1),
குற்றவியல் சட்டம் பிரிவு 120 மற்றும் கணினி குற்றச் சட்டத்தின் கீழ் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து கைது செய்யப்பட்டதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட SCFR 135/20 என்ற அடிப்படை உரிமை மனுவிற்கு அமைய, ரம்சி ராசிக் சார்பில் சட்டத்தரணி துர வெத்தசிங்க மற்றும் சட்டத்தரணி நுவான் போபகே ஆகியோர் நீதிமன்றத்தில் முன்னிலையாகினர்.

ஏப்ரல் 9, 2020 அன்று, முஸ்லிம் சமூகத்தை ஒடுக்கும் பரவலான இனவெறிக்கு முற்றுப்புள்ளி வைக்க பேனா மற்றும் விசைப்பலகையுடன் “சித்தாந்த ஜிஹாத் (போராட்டம்)” செய்ய வேண்டும் என அவர் வெளியிட்ட பேஸ்புக் பதிவின் அடிப்படையில் ரம்சி ராசிக்கை இரகசிய பொலிஸ் கைது செய்தது.

அந்த பதிவிற்கு இரண்டு நாட்களுக்குப் பின்னர், அவர் மீண்டும் வெளியிட்ட ஒரு பதிவில், அவருக்கு தொடர் கொலை அச்சுறுத்தல்கள் இருப்பதாகவும், முன்பு எழுதிய அறிக்கையை தவறாகப் புரிந்து கொண்ட பலர், இனவாதக் கருத்துக்களை விதைத்ததாகக் குற்றம் சாட்டி அவரை சிறையில் அடைக்க வேண்டும் என கிளர்ந்தெழுந்துள்ளதாக குறிப்பிட்டிருந்தார்.

ஆனால் அவரை கைது செய்து தடுத்து வைத்த பொலிஸார், எழுத்தாளர் “ஜிஹாத் போரைப் பிரகடனப்படுத்தினார்.” என தெரிவித்த விடயமானது, உயர் நீதிமன்றத்தின் கவனத்தை ஈர்த்தது.

சமூக ஊடகங்கள் மற்றும் வெகுஜன ஊடகங்களில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் தனது கருத்துக்களை வெளிப்படுத்தி சமூக செயற்பாட்டாளராக செயற்பட்ட ரம்சி ராசிக்கிற்கு, சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் (ICCPR) கீழ் 161 நாட்கள் சிறையில் இருந்த பின்னர், செப்டம்பர் 17, 2020 அன்று பிணை வழங்கிய கொழும்பு மேல் நீதிமன்றம், ஒரு நாட்டின் சட்டங்கள் தனிநபர்கள் சுதந்திரமாக கருத்துக்களை வெளியிடும் உரிமையை பாதுகாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியிருந்தது.

ஏப்ரல் 9, 2020 அன்று, பொல்கஸ்தெனியவில் உள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்ட ரம்சி ராசிக்கிற்கு பிணை வழங்க சிபாரிசு செய்த மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெதிகே, தனிப்பட்ட சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையிலான சட்டத்தின் ஏற்பாடுகள் குறித்தும் கவனம் செலுத்தினார். சட்டமா அதிபர் திணைக்களத்தை பிரதிநிதித்துவப்படுத்திய சட்டத்தரணியின் கவனமும் தனிநபர் சுதந்திரத்தை கட்டுப்படுத்தும் வகையில் சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தியமை குறித்தும் ஈர்க்கப்பட்டது.

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் எதிர்ப்பு

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் சட்டத்தின் (ICCPR) சர்வதேச உடன்படிக்கையைப் பயன்படுத்தி சிறையில் அடைக்கப்பட்ட ரம்சி ராசிக்கின் விடுதலைக்காக, உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள பல மனித உரிமை அமைப்புகள் அவர் சிறையில் இருந்த ஐந்து மாதங்களுக்கும் மேலாக குரல் கொடுத்தன.

2020 செப்டெம்பர் மாதம், மனித உரிமைகள் ஆணைக்குழுவும் இலங்கை பொலிஸாருக்கு எழுதிய கடிதத்தில் சட்டத் தெளிவின்றி ICCPR சட்டத்தைப் பயன்படுத்துவது தொடர்பாக சுட்டிக்காட்டியிருந்தது.

ICCPR சட்டத்தை இலங்கை தவறாகப் பயன்படுத்துவது குறித்து ஐக்கிய நாடுகள் சபை உள்ளிட்ட சர்வதேச மனித உரிமை அமைப்புகள் இதற்கு முன்னரும் பலமுறை எச்சரித்திருந்தன.

Facebook Comments