நாட்டில் சுகாதார சேவைகளுக்காக அரசாங்கம் செலவிடும் பணத்தில் பாதியளவு கூட அதன் சரியான இலக்குகளை எட்டவில்லை என சுகாதார ஊழியர் சங்கம் ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கு முக்கிய காரணம் சுகாதார ஊழியர்களின் அல்லது சுகாதார சேவையின் தவறு அல்ல, மாறாக சுகாதார முகாமைத்துவம் மற்றும் அரசியல் தலைமையின் தவறே என சுகாதார நிபுணர்கள் சங்கம் கூறியுள்ளது.
“அரசு 100 உள்ளீட்டுகளை சுகாதாரப் பாதுகாப்புக்கு செலவழித்தால், 50 சதவிகிதம் கூட சுகாதாரப் பாதுகாப்பின் இலக்குகளை எட்டாது.”
சுகாதார நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ், கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
சுகாதார சேவைக்கு மேற்கொள்ளப்படும் இடையூறுகளை உடனடியாக நிறுத்துமாறு அரசாங்கத்திடம் தொழில் நிபுணர் வலியுறுத்தியுள்ளார்.
“சுகாதாரம் விற்கப்படுகிறதா, இலாபமா இல்லையா, போதுமான ஊழியர்கள் இருக்கின்றார்களா இல்லையா என்பது முக்கியமல்ல. அரசியல்வாதிகள் என்ற ரீதியிலும் அரசு என்ற ரீதியிலும் சுகாதாரம் போன்ற சேவைகளில் தலையிடுவதை நிறுத்துங்கள். அரசியல் நோக்கங்களுக்காக நபர்களை இதில் உள்நுழைக்கின்றார்கள். அவர்களின் சொந்த தேவைகளுக்காக பதவி உயர்வுகளை வழங்குவதை நிறுத்துங்கள். தமக்குத் தேவையானவர்களை சுகாதார செயலாளராக ஆக்குவதை நிறுத்துங்கள்.”
அரசியல் சார்பு அடிப்படையில் சுகாதார சேவைக்கு நியமிப்பதை அனுமதிப்பதை நிறுத்தி சுகாதார சேவைக்கு ஒரு முறைமையை வழங்கினால், சுகாதார சேவைக்கு ஆகும் செலவில் ஐம்பது சதவீதத்தை சேமிக்க முடியும் என தொழிற்சங்க தலைவர் ரவி குமுதேஷ் மேலும் தெரிவித்தார். .
இலங்கை அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனம் இலங்கையில் சுமார் 200 மருந்துகளை உற்பத்தி செய்த போதிலும், அதே 200 மருந்துகளை அரசாங்கம் போட்டி விலையில், கூடுதல் விலையில் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்து வருவதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.