இறந்தவர்களை நினைவுகூறுவதற்கு தடையாக இருந்த அதிகாரிகளுக்கு எதிராக விசாரணை நடத்த கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

அண்மையில் ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிரான அரச எதிர்ப்புப் போராட்டத்தின் போது உயிரிழந்த தென்னிலங்கைப் போராளிகளை நினைவு கூறுவதற்காக காலி முகக்திடலில் ஒன்றுகூடிய அமைதியான போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியமைக்கு காரணமான பொலிஸ் உத்தியோகத்தர்களை கைது செய்யுமாறு ஊடக அமைப்பு ஒன்று பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முள்ளிவாய்க்கால் உள்ளிட்ட வடகிழக்கு தமிழ் மக்களின் நினைவேந்தல்களை சீர்குலைக்கும் வகையில் பல வருடங்களாக பாதுகாப்புப் படையினருடன் இணைந்து செயற்பட்ட பொலிஸார், கடந்த ஒக்டோபர் 9ஆம் திகதி தென்னிலங்கையில் போராட்டத்தின்போது உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்காக கொழும்பு காலி முகத்திடல் மைதானத்திற்கு வந்த பெண்கள், சிறுவர்கள் உள்ளிட்ட மக்களை துன்புறுத்தியதைக் காணமுடிந்தது.

காலி முகத்திடலில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு உதவி பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் உள்ளிட்டோரை கைது செய்து விசாரணை நடத்தப்பட வேண்டும் என பொலிஸ் மா அதிபர் சந்தன விக்ரமரத்னவுக்கு கடிதம் மூலம் இளம் ஊடகவியலாளர் ஒன்றியம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோட்டை பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகார சாகர லியனகே, உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளீன் தில்ருக், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரொஷான் டயஸ் மற்றும் ஏனையோரின் நடத்தை தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணைகளை பொலிஸ் விசேட புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்குவதற்காக, அவர்களைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தவும், அவர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கவும் அவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தவும் கேட்டுக்கொள்கிறோம்.”

கடந்த ஒக்டோபர் மாதம் 9ஆம் திகதி கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற மரண நினைவேந்தல் மற்றும் அமைதிப் போராட்டத்தில் நுழைந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் குழுவொன்று இடையூறு விளைவித்ததோடு, கலந்து கொண்டவர்களை கொடூரமான, மனிதாபிமானமற்ற மற்றும் இழிவான முறையில் நடத்தியதாக இளம் ஊடகவியலாளர்கள் சங்கத்தின் தலைவர் தரிந்து ஜயவர்தன பொலிஸ் மா அதிபரிடம் சுட்டிக்காட்டியுள்ளார்.

பேச்சுரிமை அரசியல் அமைப்பினால் பாதுகாக்கப்பட்டுள்ள நிலையில், பொலிஸார் அதற்கு சந்தர்ப்பம் வழங்காதது மாத்திரமன்றி, அமைதியான குழுவினர் மீது தாக்குதல் நடத்தியதுடன் பாடசாலை மாணவர் உள்ளிட்ட குழுவினரை கைது செய்துள்ளதாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒரு குழந்தையுடன் தம்பதியரை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நளின் தில்ருக் உட்பட பொலிஸ் அதிகாரிகள் துன்புறுத்தியுள்ளனர், சிறுமியுடன் இருந்த தாயையும் துன்புறுத்தினார். மேலும், இந்த சம்பவத்தை சமூக ஊடகங்களில் நேரடியாக ஒளிபரப்பிய ஒரு பாடசாலை மாணவர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டார். மேலும் அமைதியான போராட்டக்காரர்களின் மற்றொரு குழுவும் கைது செய்யப்பட்டது.”

பொலிஸாரின் கெடுபிடியால் ஒரு வயது குழந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், அந்த குழந்தையின் தந்தையும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் அடிப்படை உரிமைகளை மட்டும் மீறவில்லை என பொலிஸ் மா அதிபருக்கு நினைவூட்டும் இளம் ஊடகவியலாளர் சங்கம், பொலிஸ் அதிகாரிகள் அடிப்படை உரிமைகளை மீறியது மாத்திரமன்றி சித்திரவதை மற்றும் பிற கொடூரமான, மனிதாபிமானமற்ற அல்லது இழிவான நடத்தை அல்லது தண்டனைக்கு எதிரான மாநாட்டு சட்டத்தின் கீழும், தண்டனைச் சட்டக் கோவையின் கீழுள்ள குற்றங்களும் எவ்வாறு மேற்கொள்ளப்பட்டன என்பதை காணொளி காட்சிகள் தெளிவாகக் காட்டுகின்றன.

பொலிஸ் உத்தியோகத்தர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்குமாறும், ஒழுக்காற்று விசாரணைகளை மேற்கொள்ளுமாறும் பொலிஸ் மா அதிபரிடம் கோரும் ஊடகவியலாளர் தரிந்து ஜயவர்தன, விசாரணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் தேவையான சாட்சியங்களை வழங்க முடியுமெனவும் மேலும் வலியுறுத்தியுள்ளார்.

Facebook Comments