ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு இதுவரை நடைபெற்ற கல்விப் பொதுத் தராதர உயர்தர மற்றும் சாதாரண தரப் பரீட்சைகளின், பரீட்சை கடமைகளுக்கான கொடுப்பனவு செலுத்தப்படாமையால் எதிர்கால பரீட்சை நடவடிக்கைகள் நிச்சயமற்ற நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
பரீட்சை நடத்தப்பட்டு பெறுபேறுகள் வெளியாகியுள்ள போதிலும் விசேடமாக விடைத்தாள் மதிப்பீடு மற்றும் செயன்முறை பரீட்சை கடமைகளில் ஈடுபட்ட ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படாமை பாரிய பிரச்சினையாக உள்ளதாக நாட்டின் முன்னணி ஆசிரியர் சங்கம் ஒன்று கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.
தற்போது, உயர்தரப் பரீட்சை கடமைகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதோடு, விண்ணப்பம் 21.10.2022 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சை கடமைகளுக்காக ஆசிரியர்களுக்கு செலுத்த வேண்டிய தொகை 10 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
“உயர்தரப் பரீட்சை கடமைகளுக்காக சுமார் 10 மில்லியன் ரூபாவும், சாதாரணத் தரப் பரீட்சைக்கான கடமைகளுக்காக சுமார் 50 இலட்ச ரூபாவும் செலுத்தப்பட வேண்டியுள்ள நிலையில், அதற்கான பணம் இதுவரை திறைசேரியால் வழங்கப்படவில்லை.”
நாட்டில் நிலவும் கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கும் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் சொந்த செலவில் பரீட்சை கடமைகளில் ஈடுபட்டிருந்ததாக தெரிவித்துள்ள ஆசிரியர் சங்கத் தலைவர், உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளதுடன், உயர்தரப் பரீட்சைக்கான பணிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளதோடு, விண்ணப்பிக்கும் காலம் எதிர்வரும் ஒக்டோபர் 21ஆம் திகதி நிறைவடையவுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
“இந்நிலையில், உயர்தரப் பரீட்சைக்கான கடமைகளுக்கு விண்ணப்பிக்கக்கூடிய ஒக்டோபர் 21ஆம் திகதிக்கு முன்னர் இந்த கொடுப்பனவை செலுத்துமாறு கேட்டுக்கொள்கின்றோம். இல்லாவிடில், எதிர்காலப் பரீட்சை நடவடிக்கைகள் நிச்சயமற்றதாக மாறுவதைத் தடுக்க முடியாது.” என சிரேஷ்ட ஆசிரியர் சங்கத் தலைவர் ஜோசப் ஸ்டாலின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.