வடக்கில் மாவீரர் தின அனுஷ்டிப்பிற்கான ஏற்பாடுகளில் இராணுவத் தலையீடு

0
Ivory Agency Sri Lanka

போரில் கொல்லப்பட்ட தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்களின் புதைக்கப்பட்ட வடக்கில் உள்ள மயானம் ஒன்றின் முன்னால் அமைந்துள்ள வீதியை சுத்திகரித்து மாவீரர் தினத்தை அனுஷ்டிக்கத் தயாராகி வரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயற்பாட்டாளர்கள் குழுவிற்கு இராணுவம் இடையூறு விளைவித்துள்ளது.

யாழ்ப்பாணம், கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லம் முன்பாக உள்ள வீதி, நவம்பர் 27ஆம் திகதி அனுஷ்டிக்கப்படும் மாவீரர் தினத்தை முன்னிட்டு, நவம்பர் 2ஆம் திகதி புதன்கிழமை சுத்தப்படுத்தப்பட்டதாக மாகாண செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதித் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் மழைக்கு மத்தியிலும் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்விடத்திற்கு வந்த இராணுவத்தினர் துப்புரவுப் பணிகளை நிறுத்துமாறு கோரியுள்ளனர்.

மேலும் குறித்த துயிலும் இல்லத்திற்கு முன்பாக உள்ள வீதியில் இராணுவ வீரர்கள் பௌத்தக் கொடிகளை ஏற்ற முற்பட்டதை யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்களின் கமராக்களில் பதிவாகியுள்ளது.

அதன்போது இராணுவத்தினரின் குறுக்கீடு தொடர்பில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் கோப்பாய் பொலிஸில் முறைப்பாடு செய்ததையடுத்து பொலிஸ் அதிகாரிகள் அவ்விடத்திற்கு வந்ததும் இராணுவ முகாம் அதிகாரிகளும் அவ்விடத்திற்கு வந்து படையினரை அவ்விடத்தை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில வருடங்களுக்கு முன்னர் கோப்பாய் மாவீரர் இல்லத்தை அரச படையினர் அழித்து அதில் பிரமாண்டமான இராணுவத் தளத்தை அமைக்க ராஜபக்ச அரசாங்கம் தீர்மானித்தது.

அதன் பின்னர் ஒவ்வொரு வருடமும் கோப்பாய் இராணுவ முகாமிற்கு முன்பாக உள்ள தனியார் காணியில் மாவீரர் தின நிகழ்வு இடம்பெற்று வருகின்றது. கடந்த வருடமும் கோப்பாய் மாவீரர் தினத்திற்கு தயாராகிக்கொண்டிருந்த குழுவினரை அரச பாதுகாப்பு தரப்பினர் தடுத்திருந்தனர்.

சிரமதானத்தை மேற்கொண்டவர்களை கையடக்கத் தொலைபேசியில் படம் பிடித்து இராணுவ வீரர்கள் அச்சுறுத்த முயற்சித்ததாகவும் சிரமதானத்தில் கலந்துகொண்ட மக்கள் தெரிவித்தனர்.

கொல்லப்பட்ட சுமார் 7,000 முன்னாள் புலிகள் புதைக்கப்பட்ட தேராவில் மாவீரர் இல்லத்தில் குடும்ப உறுப்பினர்களும் கிராம மக்களும் ஒன்று கூடி கடந்த வாரம் சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்த போது, காணொளி பதிவு செய்தும் சத்தமிட்டும் இராணுவத்தினர் தம்மை அச்சுறுத்தியதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

Facebook Comments