துறைமுக நகர உத்தேச சட்டமூலம் மதங்களுக்கு விரோதமானது என குற்றச்சாட்டு

0
Ivory Agency Sri Lanka

இலங்கை அரசாங்கம் கொழும்பு துறைமுக நகர விடயத்தில் நாட்டின் சட்டங்களை தீவிரமாக புறக்கணித்துள்ளதோடு, அனைத்து மதங்கள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளதாக பௌத்த அமைப்பு ஒன்று குற்றம் சாட்டியுள்ளது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ச வசம் காணப்படும் புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சில் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர், தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

“உலக மூலதனத்திற்கு, ஏகாதிபத்திய அதிகாரப் போட்டிக்கு மக்களைக் பலியாக்கும் துறைமுக நகர ஆணைக்குழு சட்டத்தை தோற்கடிப்போம்.” என்ற தலைப்பில் முன்னிலை சோசலிஸ கட்சி நேற்றைய தினம், புதுக்கடை நீதிமன்றத்தின் முன்னால் போராட்டத்தை நடத்தியது.

மேலும், பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்திற்கு எதிராக பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வரும் நிலையில் இந்த குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான ஒரு சூழலில் இந்த குற்றச்சாட்டை பௌத்த அமைப்பான, தேசிய புத்திஜீவிகள் சங்க சபை இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டமூலத்தின் மூன்று பிரிவுகள் அரசியலமைப்பிற்கு முரணானது என, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் ஒரு கடிதத்தை கையளித்த பின்னர் தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது.

நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகிய பிரிவுகளுக்கு முரணானது என தேசிய புத்திஜீவிகள் சபையின் தலைவர் ஓமல்பே சோபித தேரர் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

குறிப்பாக, 1815 கண்டிய ஒப்பந்தத்தின் 5ஆவது பிரிவு 1972 அரசியலமைப்பின் ஆறாவது திருத்தத்தால் உருவாக்கப்பட்ட கலாச்சாரம், அடையாளம், பாதுகாப்பு, மத சுதந்திரம் மற்றும் நிலையான அபிவிருத்தி என்பவற்றை இந்த சட்டமூலம் பாதிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புத்தசாசனம் மற்றும் பௌத்த மதத்தை போசிப்பது மற்றும் பாதுகாப்பது தொடர்பில் அரசியலமைப்பில் பல ஏற்பாடுகள் காணப்படுவதாகவும், அந்த ஏற்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் வகையில் துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தின் ஊடாக 1978ஆம் ஆண்டு அரசியலமைப்பின் 9ஆவது அத்தியாயத்தின் 52,53 மற்றும் 73 ஆகியவற்றில் குறிப்பிடப்பட்டுள்ள பௌத்த மத்திற்கான முன்னுரிமை இழக்கப்படுவதோடு, புத்த சாசனத்தை பாதுகாப்பதற்கும் வளர்ப்பதற்குமான அரசாங்கத்தின் பொறுப்பை இல்லாமல் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது”

அரசியலமைப்பின் ஒன்பதாவது பிரிவிற்கு அமைய, குறித்த சட்டமூலமானது பெளத்த மதத்திற்கான முன்னுரிமையை மீறுவவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

“ஒரு நாடு – இரண்டு சட்டங்கள்” என்பதே துறைமுக நகர பொருளாதார வலைய ஆணைக்குழு சட்டத்தின் கருப்பொருள் என சுட்டிக்கட்டியுள்ள தேசிய புத்திஜீவிகள் சங்க சபை, நாட்டின் ஒரு பகுதியில் அமுலில் உள்ள கலால், பந்தயம், சூதாட்ட விடுதிகள் உள்ளிட்ட விடயங்களுக்கு சட்டம் துறைமுக நகரில் அமுல்படுத்தப்படாத ஒரு நிலைமை உருவாகியுள்ளதாக தேரர் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டின் ஒரு பகுதிக்கு அரசியல் அமைப்பின் ஒன்பதாவது பிரிவின் அழுத்தம் காணப்படுகின்ற நிலையில், துறைமுக நகரம் அந்த சட்டத்திற்கு உட்பட்டதாக இல்லயென தேசிய புத்திஜீவிகள் சங்க சபை வலியுறுத்தியுள்ளது.

“அரசியல் அமைப்பின் 9ஆவது பிரிவின் அழுத்தம் துறைமுக நகருக்கு இல்லாமல் போகிறது”

துறைமுக நகரத்தில் கலால் (சிறப்பு ஏற்பாடுகள்) சட்டம், சுங்க பாதுகாப்பு சட்டம், பந்தயம் மற்றும் சூதாட்ட சட்டம், பொழுதுபோக்கு வரி சட்டம், அந்நிய செலாவணி சட்டம், கெசினோ வணிக ஒழுங்குமுறை சட்டம் போன்றவற்றை அமுல்படுத்துவதில் இருந்து துறைமுக நகருக்கு விலக்கு அளிக்ப்பட்டுள்ளது.

இலங்கையின் பௌத்த கலாச்சாரம் மாத்திரன்றி, இது அனைத்து மதங்களுக்கும் எதிரான விடயமாக அமைந்துள்ளதாக தேசியபுத்திஜீவிகளின் சங்க சபை வலியுறுத்தியது.

துறைமுக நகர ஆணைக்குழு சட்டமூலம் குறித்து அவதானம் செலுத்தி, 1978 அரசியலமைப்பின் 9ஆவது பிரிவை பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, புத்த சாசன மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் செயலாளரிடம் கையளித்த கடிதத்தின் பிரதி ஒன்று சட்டமா அதிபருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கொழும்பு துறைமுக நகருக்காக, தற்போதைய அரசாங்கம் சட்டத்தை தீவிரமாக புறக்கணித்து வருவதாக சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம் முன்னதாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோருக்கு அனுப்பி வைத்த கடிதத்தில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments