தோட்டத் தொழிலாளர்களை மேலும் நெருக்கடிக்குள் தள்ளிய ரணிலின் வரவு செலவுத் திட்டம்

0
Ivory Agency Sri Lanka

வரவு செலவுத் திட்டத்தில் எவ்வித நிவாரணமும் கிடைக்காத தோட்டத் தொழிலாளர்களின் குடும்பங்கள் தொடர்ந்தும் பட்டினியில் வாடுவதாக மலையக மக்களின் உரிமைகளுக்காகப் போராடும் அமைப்பு ஒன்று சுட்டிக்காட்டியுள்ளது.

“பல தசாப்தங்களாக நாட்டின் அன்னியச் செலாவணியைக் கொண்டு வருவதற்காக கடுமையாக உழைத்து வரும் தோட்டத் தொழிலாளர்களும் அவர்களது பிள்ளைகளும் இன்னும் பட்டினியில் வாடுகின்றனர். 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் பட்டினியில் வாடும் அந்த மக்களுக்கு எதுவும் குறிப்பிடப்படவில்லை.” என மலையக மக்களின் மாண்பை பாதுகாக்கும் அமைப்பின் ஆலோசகர் அருட்தந்தை மாரிமுத்து சத்திவேல் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு தோட்டத் தொழிலாளர்களை இலங்கைக்கு அழைத்து வந்து 200 வருடங்கள் ஆகின்ற போதிலும் அவர்களின் வாழ்வை மேம்படுத்த அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையில் அருட்தந்தை வலியுறுத்தியுள்ளார்.

வறுமைக் குறிகாட்டிகளுக்கு அமைய 51 சதவீதமானோர் பெருந்தோட்டப் பகுதிகளிலேயே காணப்படுகின்றனர்.

நகர்ப்புற மக்களில் 43 சதவீதம் பேரும், கிராமப்புற மக்களில் 33 சதவீதம் பேரும் வறுமையில் வாடுவதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டாவின் கூற்றுப்படி, நாட்டின் உணவு நெருக்கடி பற்றிய குடும்ப மட்ட ஆய்வுகளுக்கு அமைய, 51 வீதமான பெருந்தோட்ட மக்கள் வறுமையால் பாதிக்கப்பட்டுள்ளமை பதிவாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

1948ஆம் ஆண்டு பிரித்தானிய காலனித்துவவாதிகளிடம் இருந்து விடுதலை பெற்று 100 வருடங்கள் பூர்த்தியாகும்போது நாட்டின் சுபீட்சத்தை இலக்காகக் கொண்டு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நிதியமைச்சராக வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளை முன்வைத்த போதிலும், இருநூறு வருடங்களாக நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்திய தோட்டத் தொழிலாளர்கள் மீது அக்கறை இல்லாத அரசாங்கத்தின் கொள்கையை வெளிப்படுத்துவதாக அருட்தந்தை குற்றஞ்சாட்டியுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களின் வாக்குகளாலும் அங்கத்துவக் கட்டணங்களாலும் அதிகாரத்தைப் பெற்ற பிரிவினர் தொழிலாளர்களுக்கு நல்வாழ்வை பெற்றுத்தரவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“இதன் பின்னரும் மலையகத் தோட்டத் தொழிலாளர்களை ஏமாற்றாமல் அவர்களுக்கு நியாயத்தை வழங்க ஜனாதிபதி செயற்பட வேண்டும்.”

இலங்கையின் உணவு நெருக்கடியின் மதிப்பீடு குறித்த ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் உலக உணவு அமைப்பு ஆகியவற்றின் விசேட கூட்டு அறிக்கை, உலக உணவு அமைப்பின் கண்காணிப்பு அறிக்கை, இலங்கை மற்றும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் பொருளாதார மீளாய்வு, நவீன அடிமைத்தனம் தொடர்பான ஐ.நா.வின் விசேட அறிக்கையாளர் டொமோயா ஒபோகாட்டா மனித உரிமைகள் ஆணைக்குழுவில் வழங்கிய அறிக்கை உட்பட நான்கு சர்வதேச அமைப்புக்கள் தோட்டத் தொழிலாளர்களின் அவல நிலையை எடுத்துரைத்துள்ளன.

Facebook Comments