ராஜபக்சக்களை ஆட்சியில் இருந்து விரட்டியடிக்கும் மக்கள் போராட்டத்தை அடுத்து வெளிநாடு சென்ற நிலையில் நாடு திரும்பிய ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரை வரவேற்க தேசிய ஆணைக்குழுவின் தலைவர் பிரசன்னமாகியிருப்பது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது.
இரண்டு மாதங்களுக்கும் மேலாக அமெரிக்காவில் இருந்த பசில் ரோஹன ராஜபக்ச, டுபாயில் இருந்து இந்நாட்டிற்கு வந்த எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான E.K-650 என்ற விமானத்தில் நவம்பர் 20ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை இலங்கை வந்தடைந்தார்.
அவரை வரவேற்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பிரதிநிதிகளில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோவும் அடங்குவது ஊடகவியலாளர்களின் கமெராக்களில் பதிவாகியுள்ளது.
இந்த நிகழ்வில் தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் தலைவர் சந்திரா பெர்னாண்டோ கலந்து கொண்டமையினால், அந்த ஆணைக்குழுவின் சுயாதீனத் தன்மை குறித்து சமூக ஊடகங்களில் விவாதங்கள் எழுந்துள்ளன.
இரட்டைக் குடியுரிமையைக் கொண்ட பசில் ராஜபக்ச, முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு போராட்டம் காரணமாக கடந்த செப்டெம்பர் மாதம் 9ஆம் திகதி நாட்டை விட்டு வெளியேறியிருந்தார்.
ஜூன் 9ஆம் திகதி தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்தார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி சாகர காரியவசம், எதிர்வரும் தேர்தல்களுக்கான கட்சியின் திட்டங்கள் பசில் ராஜபக்சவின் வருகையுடன் ஆரம்பமாகும் என எதிர்பார்ப்பதாக ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார்.
மொட்டு உறுப்பினர்களின் வாக்குகளினால் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானமையால், சந்திரா பெர்னாண்டோ அதியுச்ச அங்கீகாரத்துடன் பசிலை சந்திக்க சென்றாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.