பாதீடு குறித்து மீனவர் சங்கத்தினர் அதிருப்தி

0
Ivory Agency Sri Lanka

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் முன்வைக்கப்பட்ட அடுத்த வருடத்திற்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகளில் மீன்பிடித் தொழில் தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

“ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவுத் திட்டத்தில் உப்பு நீர் மீன்பிடித் தொழிலுக்கு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. நன்னீர் மீன்களை வளர்ப்பதற்குப் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. ஆனால் நாடு முழுவதிலும் உள்ள பெரும்பான்மையான மீனவர்களுக்கு ஒரு சதமேனும் ஒதுக்கப்படவில்லை,” என வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் ஊடகப் பேச்சாளரும், மன்னார் மாவட்ட கடற்றொழில் கூட்டுறவுச் சங்கத்தின் தலைவருமான என்.எம்.ஆலம் தெரிவித்துள்ளார்.

எல்லைத் தாண்டி வந்து நாட்டின் கடல் வளங்களை கொள்ளையடிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல், எரிபொருள் விலையேற்றம், எரிபொருளை மீனவர்களுக்கு வழங்குவதற்கான உரிய விநியோக முறை இன்மை, வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, பிடிபட்ட மீன்களை சந்தைப்படுத்துவதில் உள்ள சிரமங்கள் ஆகிய காரணங்களால் மீன்பிடி தொழில் வீழ்ச்சியடைந்துள்ளதாக மீனவர் சங்க தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

“மீனவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த இந்த அரசிடம் எந்த திட்டமும் இல்லை.”

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் வடக்கு விஜயத்தின் போது மன்னாருக்கு சென்ற சமயத்தில், வடமாகாண கடற்றொழிலாளர் சங்கப் பிரதிநிதிகளைச் சந்திக்காமைக்கு கவலை வெளியிட்டுள்ள வடமாகாண கடற்றொழிலாளர் சங்கத்தின் பேச்சாளர், தமக்கு சந்தர்ப்பம் கிடைத்தால் வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை நேரடியாக முன்வைப்பதாக தெரிவித்துள்ளார்.

“இந்திய மீனவர்கள் வந்து எங்கள் கடலை நாசம் செய்வதை யாரிடம் சொல்வது? மக்கள் நலனை தேடிப் பார்க்கின்றார்கள் எனின் மக்களைச் சந்திக்க ஏன் அச்சம்.”

“ஜனாதிபதியின் மன்னார் விஜயமானது மக்களின் பிரச்சினைகளை ஆராய்வதை விட
இங்குள்ள வளங்களை அரசாங்கம் எவ்வாறு பெற முடியும்? அல்லது யாருக்காவது எப்படி இதனை விற்பனை செய்ய முடியும் என்பதை ஆராயும் வகையிலேயே அமைந்துள்ளது.”

மன்னாரில் ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிட்ட மீனவத் தலைவர், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவும் இதே சிந்தனையுடனேயே நடுக்குடா பகுதிக்கு வந்ததாகவும், ஆனால் சில நாட்களில் காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்களின் எதிர்ப்பினால் நாட்டை விட்டு வெளியேற நேரிட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

“தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அரசியல் இலக்குகளுடன் மன்னாருக்கு வந்துள்ளார்.”

Facebook Comments