மனித உரிமை ஆர்வலர்கள் மீது ஜனாதிபதி தாக்குதல்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் என அழைக்கப்படுவோர் வெளிநாட்டுப் பணத்தில் தங்கி வாழ்பவர்கள் என ஜனாதிபதி பாரதூரமான குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

“நம்மிடம் இருக்கும் சில டிபெண்டர்கள் டீசலில் ஓடுகின்றன. இந்த டிபெண்டர்களும் டீசலில் ஓடுகிறார்கள். அவர்கள் தம்மை மனித உரிமை டிபெண்டர்கள் எனக் கூறிக்கொண்டு வெளிநாட்டில் இருந்து பணம் வாங்கி வாழ்கிறார்கள். இது உண்மைதானே.”

Human Rights Defenders (HRD) எனப்படும் இலங்கையில் மனித உரிமைப் பாதுகாவலர்கள் துன்புறுத்தப்படுவது குறித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணைக்குழுவும் கவனம் செலுத்தியுள்ளது.

மனித உரிமைகளுக்குள் அராஜகமும் வன்முறையும் நுழைவதில்லை எனவும் அது மனித உரிமைகளுக்கு முற்றிலும் எதிரானது எனவும் கூறும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, மனித உரிமைகளைப் பயன்படுத்தி அராஜகத்தையும் வன்முறையையும் உருவாக்க முடியாது என நவம்பர் 24 வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

மனித உரிமைகள் என்ற பெயரில் வன்முறை செய்தவர்களை பாதுகாக்க முடியாது.

இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களை தாம் பாதுகாத்ததாக தம்பட்டம் அடித்த ஜனாதிபதி, அவர்களே தற்போது தமக்கு எதிராக கூச்சலிடுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

“எனக்கு இவர்களை தெரியும். இவர்களுடன் நான் பணியாற்றியுள்ளேன். நான் அவர்களை பாதுகாத்தேன். இப்போது அவர்கள் என்னை நோக்கி கத்துகிறார்கள்.”

மனித உரிமை செயற்பாட்டாளர்களுக்கு எதிராக ஜனாதிபதி வாய்மொழித் தாக்குதலை ஆரம்பித்த அன்றே முல்லைத்தீவு ஊடக மையத்திற்குள் நுழைந்த இலங்கை இராணுவத்தின் 591ஆவது படைப் பிரிவின் உறுப்பினர்கள் அங்கிருந்த செயற்பாட்டாளர்களின் விபரங்களை கேட்டறிந்தனர்.

நாடு கடும் நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் வேளையில் கல்வி மற்றும் சுகாதாரத்தை விடவும் நாட்டின் பாதுகாப்பிற்காக 410 பில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ள ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, இலங்கையின் மனித உரிமை பாதுகாவலர்களின் நிலைப்பாடு தொடர்பான காணொளியை கீழே காணலாம்.

Facebook Comments