கொவிட் சடலங்களை வலுக்கட்டாயமாக எரித்தமை குறித்து அவசர விசாரணைக்கு கோரிக்கை

0
Photo - Shehan Gunasekara
Ivory Agency Sri Lanka

கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது கட்டாயமாக்கப்பட வேண்டும் என அரசாங்கத்திற்கு தவறான ஆலோசனை வழங்கியது யார் என்பது குறித்து உடனடியாக விசாரணை நடத்துமாறு இலங்கை சுகாதார அமைச்சரிடம் எதிர்க்கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.

“கடந்த காலங்களில் சுகாதார அமைச்சை சேர்ந்த சிலர், கொவிட் உயிரிழப்புகளின்போது தகனம் செய்வதா அல்லது புதைப்பதா என்பது குறித்து தமக்கு தவறான ஆலோசனைகள் வழங்கப்பட்டதாகவும், புதைக்குமாறு வலியுறுத்தப்பட்டதாகவும் அவர் கூறினார்.”

சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி நாடாளுமன்றத்தில் விடுத்த கருத்தின் அடிப்படையில் அண்மையில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் நாடாளுமன்றத்தில் இந்த கோரிக்கையை விடுத்தார்.

தொற்றுநோயின்போது சில நிபுணர்களின் அறிக்கைகள் இனங்களுக்கிடையில் சமத்துவமின்மை மற்றும் முரண்பாடுகளை ஏற்படுத்தியதாக இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்திருந்தார்.

“சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கு நாங்கள் நன்றி கூறுகிறோம். ஆனால் சில நிபுணர்களின் தவறான ஆலோசனையால், இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட ஆரம்பித்தன.”

சுதேச வைத்திய இராஜாங்க அமைச்சரின் கருத்தின் அடிப்படையில் விசாரணைக்கு அழைப்பு விடுக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், உலக சுகாதார நிறுவனம் சடலங்களை புதைக்க அனுமதிக்குமாறு பரிந்துரைகளை வழங்கிய போதிலும், ஒரு மதப் பிரிவினருக்கு மாத்திரம் அநியாயத்தை இழைக்கும் வகையில் தற்போதைய அரசாங்கம் தகனம் செய்வதற்கு கட்டாயப்படுத்தியதாக அவர் மேலும் குற்றம் சாட்டினார்.

வெளிவிவகார அமைச்சரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான அலி சப்ரியும் கொவிட் காரணமாக சடலங்களை தகனம் செய்யும் கொள்கை தொடர்பான கோட்டாபய ராஜபக்ச அரசாங்கத்தின் பொறுப்பைத் தட்டிக்கழிக்க முயற்சிப்பதைக் காணமுடிந்தது.

அந்த அறிவியலற்ற முடிவின் பொறுப்பை விசேட வைத்தியர்கள் மீது சுமத்தியிருந்தார்.

“சன்ன பெரேரா என்ற வைத்தியர் அவரது குழுவில் இருந்த மெத்திகா விதானகே, ஊடகங்கள் ஊடாக உடல்களை புதைத்தால், மில்லியன் கணக்கான ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வைரஸ் வெடித்து நாட்டை அழிக்கக்கூடும் எனக் கூறினார்.”

இவ்வாறான பொய்ப் பிரச்சாரங்களை சில ஊடகங்கள் பரப்பியதாக குற்றஞ்சாட்டப்பட்ட அப்போதைய அரசாங்கத்தின் நீதியமைச்சராக இருந்த தற்போதைய வெளிவிவகார அமைச்சர், அந்தக் கொள்கையினால் இலங்கை சர்வதேச ரீதியில் புறக்கணிக்கப்பட்டதாகவும் சுட்டிக்காட்டினார்.

தொற்றுநோய்களின் போது எதிரிகளை அடக்குவதற்கு காலனித்துவ காலத்தின் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்கள் பயன்படுத்தப்பட்டமை தொடர்பாக அப்போதைய நீதி அமைச்சராக அவர் என்ன பொறுப்பை நிறைவேற்றினார் என்பதை ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி விளக்கவில்லை.

இலங்கைக்கு அவமானம்

உள்நாட்டில் இருந்தும் வெளிநாட்டில் இருந்தும் விமர்சனங்கள் எழுந்தபோதிலும் ஒரு வருடமாக வலுக்கட்டாயமாக நடைமுறைபடுத்தப்பட்டு வந்த அனைத்து கொவிட் பிணங்களையும் எரிக்கும் கொள்கையானது இனவாத கொள்கையாக மாறியதோடு மார்ச் 2021இல் இந்த கொள்கையில் மாற்றம் ஏற்பட்டது.

உலக சுகாதார ஸ்தாபனத்தின் வழிகாட்டுதல்களுக்கு மாறாக, 2020ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் இருந்து கோட்டாபய ராஜபக்ச நிர்வாகம் கொவிட்டால் இறந்த உடல்களை தகனம் செய்ய உத்தரவிட்டது.

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட சடலங்களை புதைப்பது நிலத்தடி நீர்நிலைகளை மாசுபடுத்துகிறது என அதை நியாயப்படுத்த அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட நிபுணர் குழு கருத்து தெரிவித்தது. உலகப் புகழ்பெற்ற வைரஸ் குறித்த பேராசிரியர் மலிக் பீரிஸ் உள்ளிட்ட நிபுணர்களால் இது ஒரு அடிப்படையற்ற மற்றும் விஞ்ஞானமற்ற விடயம் என நிராகரிக்கப்பட்டாலும், அரசாங்கம் அதை ஏற்கவில்லை.

கொவிட்டால் உயிரிழக்கும் இஸ்லாமியர்களின் உடல்களை தகனம் செய்வது உலக சுகாதார அமைப்பின் பரிந்துரைகள் மற்றும் இஸ்லாமிய நடைமுறைகளுக்கு முரணானது என்பதோடு, பிரதான ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் இந்த விடயமானது முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்பைத் தூண்டும் இனவாத கொள்கையைப் பேணுவதாக செய்திகள் வெளியான நிலையில், ஐக்கிய நாடுகள் சபை உட்பட சர்வதேச மற்றும் உள்ளூர் மனித உரிமை அமைப்புகளின் இலங்கை குறித்த எதிர்மாறான விமர்சனத்திற்கு காரணமாக அமைந்தது.

கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட இறந்தவர்களை கட்டாயமாக தகனம் செய்யும் அரசாங்கத்தின் தீர்மானம் ஒரு இனம் சார்ந்த கொள்கை எனக் கண்டித்து ஐக்கிய நாடுகளின் மனித உரிமை நிபுணர்கள் குழு அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருந்தது.

கோட்டாபய ராஜபக்ச ஆட்சிக்கு எதிராக முதன்முதலில், 2021 பெப்ரவரி ஆரம்பத்தில் முன்னெடுக்கப்பட்ட மாபெரும் மக்கள் போராட்டமான பொத்துவிலில் இருந்து பொலிகண்டி வரையிலான 700 கிலோமீற்றர் P2P பாத யாத்திரையின் போது, தமிழ் அரசியல் தலைமைகள் முஸ்லிம்களின் உடல்கள் பலவந்தமாக தகனம் செய்யப்படுவதற்கு எதிராக பலத்த எதிர்ப்பை வெளிப்படுத்தியது.

சில நாட்களுக்குப் பின்னர், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இலங்கைக்கு விஜயம் செய்த பின்னர், அரசாங்கம் காரணம் கூறாமல் ஓட்டமாவடி மயானத்தில் மாத்திரம் கொவிட் தொற்றுக்குள்ளான சடலங்களை அடக்கம் செய்ய அனுமதித்தது.

அறிவியல் பூர்வமற்ற பலவந்த தகனக் கொள்கையால் பெரிதும் பாதிக்கப்பட்ட இலங்கை முஸ்லிம்களுக்கு என்ன மாதிரியான நிவாரணம் வழங்கப்படும் என்பதை அரசாங்கம் இன்னும் அறிவிக்கவில்லை.

Facebook Comments