பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளிப்பதற்கு நீதவான்களுக்கு அதிகாரம்

0
Ivory Agency Sri Lanka

சந்தேகநபர்களைக் கண்காணிக்க பொலிஸ் நிலையங்களுக்குச் செல்ல நீதவான்களுக்கு அதிகாரமளிக்கும் வகையில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் திருத்தம் செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

ஒரு சில நீதிமன்றப் பிரிவுகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள நீதவான் நீதிமன்ற நீதிபதிகளுக்கு பொலிஸாரின் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை கண்காணிப்பதற்காக குறித்த பொலிஸ் நிலையத்திற்கு குறைந்தது மாதத்திற்கு ஒரு தடவையேனும் சமூகமளிப்பதற்கு நீதவான் நீதிமன்ற நீதிபதிக்கு அதிகாரம் வழங்கும் வகையில் 1979 ஆம் ஆண்டு 15 ஆம் இலக்க குற்றவியல் வழக்குச் சட்டக் கோவையை திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெற்றுள்ளது.

இதுவரைக் காலமும், சிறையில் அடைக்கப்பட்டவர்களைக் கண்காணிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு மற்றும் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்திற்கு வழங்கப்பட்டிருந்தது.

இது கைது செய்யப்படுபவர்கள் சித்திரவதைக்குள்ளாவதை தடுப்பதற்கான ஒரு வழிமுறையாக நம்பப்படுகிறது.

கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் 17ஆம் திகதி முன்னைய அரசாங்கம், சித்திரவதைக்கு எதிரான ஐ.நா. சாசனத்தின் மாற்று மூல ஆவணத்தில் இணைத்துக்கொள்ளப்பட்டன் ஊடாக, மனித உரிமை ஆணைக்குழு மனித உரிமை மீறல்களைத் தடுப்பதற்கான தேசிய வழிமுறையாக நிறுவப்பட்டது.

அதேவேளை, கைதிகள் சுதந்திரமாக பேசுவதற்கும் அவர்களின் தடுப்புக்காவலை ஆய்வு செய்வதற்கும் இது அனுமதிக்கிறது. இது பரிந்துரைகளை வழங்க அரசாங்கத்திற்கு உத்தியோகபூர்வ அதிகாரத்தை வழங்கும் என ஆணைக்குழு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், புதிய திருத்தம் ஆணைக்குழுவிற்கும், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்திற்கும் கைதிகளை சந்திக்கும் அதிகாரங்களில் எவ்வாறான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பதை அரசாங்கம் வெளியிடவில்லை.

பொலிஸார் உள்ளிட்ட அரசாங்க பாதுகாப்புப் படையினரால் சித்திரவதை செய்யப்படுவது குறித்த தகவல்கள் அண்மைய காலங்களில் தமக்கு கிடைக்கப்பெறுவதாக மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் இலங்கை குறித்த சமீபத்திய அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். பொலிஸ் காவலில் உள்ளவர்கள் உயிரிழப்பதற்கு சித்திரவதையே காரணம் எனவும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

அதற்கமைய, சட்டவரைஞர்களால் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், குறித்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் நாடாளுமன்றத்திற்கு சமர்ப்பிப்பதற்கும் நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Facebook Comments