அமரகீர்த்திக்கு செய்த ‘நல்ல செயலை’ காணாமல் போனவர்களுக்கும் செய்யுங்கள்

0
Ivory Agency Sri Lanka

படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் குடும்ப உறுப்பினர்களுக்கு ஒரு கோடி ரூபாவிற்கும் அதிகமான நிதியை வழங்க அரசாங்கம் எடுத்த தீர்மானத்தை நியாயப்படுத்தியுள்ள நாட்டின் முன்னணி மனித உரிமை செயற்பாட்டாளர் ஒருவர், அதேபோல் காணாமல் போனவர்களின் குடும்பங்களுக்கும் அரசாங்கம் இழப்பீடு வழங்க வேண்டுமென கோரியுள்ளார்.

காணாமற்போனோருக்கான நட்டஈடு வழங்குவதற்கு முதலில் அனுமதி வழங்கிய நல்லாட்சி அரசாங்கத்தின் பிரதமர் இன்று ஜனாதிபதி என்ற வகையில் அது தொடர்பில் ஆராய்வதாக உறுதியளித்ததாக, நாட்டில் இரண்டாவது அதிக எண்ணிக்கையிலான பாரிய சடலங்கள் கண்டெடுக்கப்பட்ட மாவட்டத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.

“கொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்திக்கு ஒரு கோடியை நாடாளுமன்றம் வழங்குகின்றது. நாடாளுமன்றத்தில் 80 இலட்சத்தை சேர்த்து கையளிக்கின்றார்கள். இது உண்மையில் வரவேற்க வேண்டிய விடயம். வீட்டில் வருமானத்தை உழைப்பவர்கள் இல்லாமல் போனபின்னர் குடும்பத்தை நடத்திச் செல்ல ஒரு கோடியாவது அவசியம் என்பதை இந்த அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளமை நல்ல விடயம். எனினும் 89இலிருந்து மனதளவில் கவலையடைந்துள்ள, என்ன நடந்தது எனத் தெரியாத, உண்மையை அறியாதவர்களுக்கு அரசாங்கம் அமரகீர்த்தியின் குடும்பத்திற்கு உதவியதுபோல் இவர்களுக்கும் உதவ வேண்டுமென்ற செய்தியை நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக நாம் அறிவிக்கின்றோம்.”

நீதியமைச்சின் வரவு செலவுத் திட்டம் மீதான விவாதம் இடம்பெற்ற தினமான நேற்றைய தினம் காணாமற்போனோரின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ நாடாளுமன்றம் செல்லும் வழியில் மௌனப் போராட்டத்தை நடத்தியதுடன் காணாமற்போனோருக்கான கொடுப்பனவுகளை வழங்குவதற்காக அரசாங்கம் பல தடவைகள் நிதி ஒதுக்கீடு செய்த போதிலும் அது உரிய முறையில் வழங்கப்படவில்லை என ஊடகங்களிடம் தெரிவித்தார்.

காணாமல் போன ஒருவருக்கு 200,000 ரூபா நட்டஈடு வழங்குமாறு நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி விஜயதாச ராஜபக்சவினால் கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி முன்வைக்கப்பட்ட யோசனையை நடைமுறைப்படுத்தும் வகையில் இந்த வருட வரவு செலவுத் திட்ட முன்மொழிவு இடம்பெற வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.

காணாமற்போனோரின் குடும்பங்களுக்கு நட்டஈடு” என்ற தலைப்பில் கடந்த நவம்பர் 30ஆம் திகதி காணாமற்போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ, அமைச்சர் விஜேதாச ராஜபக்விற்கு அனுப்பிய கடிதத்தில் படுகொலை செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவுக்கு நட்டஈடு வழங்குவதற்கு நியாயமான தீர்மானத்தை எடுத்த தற்போதைய அமைச்சரவை, 1971 மற்றும் 1989களில் தென்னிலங்கை களவரம் மற்றும் வடக்கில் இடம்பெற்ற யுத்தத்தில் உயிரிழந்த மற்றும் காணாமல்போனவர்களின் குடும்பங்கள் குறித்தும் அனுதாபத்துடன் அவதானம் செலுத்துவது அத்தியாவசியமான விடயம் எனக் குறிப்பிட்டார்.

நாடாளுமன்றம் நோக்கிச் சென்ற ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன, மௌனப் போராட்டம் நடைபெற்ற இடத்தில் வாகனத்தை நிறுத்தி, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் உரையாடியதுடன், அவர்களின் கோரிக்கையை நீதி அமைச்சரிடம் அறிவிப்பதாக உறுதியளித்தார்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கு மாதாந்தம் 6,000 ரூபா கொடுப்பனவை இரண்டு வருட காலத்திற்கு வழங்குவதை முதலில் ஏற்றுக்கொண்டது தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக இருந்த நல்லாட்சி அரசாங்கமே.

“உண்மையில், இது பற்றி நான் அறிந்ததும் நான் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினேன். “இது குறித்து ஏதாவது செய்ய முடியுமானால், அது பற்றி விவாதம் நடத்த தயாராக இருப்பதாக அவர் கூறினார்,” என நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி விஜேரத்ன மேலும் தெரிவித்தார்.

88-90 ஆகிய இரண்டு வருட காலப்பகுதியில், 700ற்கும் மேற்பட்ட இளம் பெண்களும், சிறுமிகளும் காணாமல் போன மாத்தளை மாவட்டத்தை அப்போதைய அரைசாங்கத்தின் கலாசார விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சர் விஜேரத்னவின் மாமனாரான புஞ்சி பண்டா கவிரத்ன பிரதிநிதித்துவப்படுத்தினார். அவரது கட்சித் தலைவரின் தந்தை அந்த அரசாங்கத்தின் தலைவராக இருந்தார். தற்போதைய ஜனாதிபதி அந்த அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தவர்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராணுவ ஜெனரலாக மாத்தளை மாவட்டத்தின் ஒருங்கிணைப்பு அதிகாரியாக இருந்த சமயத்தில் காணாமல் போன சம்பவங்கள் அதிகம் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments