“பெரிய பொலிஸ் படையை பயன்படுத்தி அடக்குமுறை” இதுவே அரசின் தீர்மானம்

0
Ivory Agency Sri Lanka

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை ஒத்திவைப்பதற்கு எதிராக தேசிய மக்கள் சக்தியினால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு தொழிற்சங்கங்கள் கண்டனம் தெரிவித்துள்ளன.

பெரிய பொலிஸ் படையைப் பயன்படுத்தி மக்கள் போராட்டங்களை ஒடுக்குவதில் அரசாங்கம் தெளிவான நிலையில் உள்ளதாக, தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் அறிக்கை ஒன்றின் ஊடாக சுட்டிக்காட்டியுள்ளன.

நீக்கப்பட வேண்டிய கட்டாயத்தில் உள்ள பயங்கரவாதச் சட்டத்தைப் பயன்படுத்தி, பொதுச் சொத்துக்களைப் பாதுகாப்பதற்காகவென தெரிவித்து நீதிமன்ற உத்தரவுகளைப் பெறுவதும் அரசாங்கத்தின் அடக்குமுறையின் புதிய அம்சம் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் சமூகத்தில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்பட்டாலும், அதை ஒத்திவைப்பதற்கு எதிரான போராட்டங்களைத் தடை செய்வது அல்லது ஒடுக்குவது அடிப்படை மனித உரிமையை மீறுவதாகவும் என, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம், இலங்கை சுதந்திர சேவையாளர் சங்கம், இலங்கை தொழிற்சங்க சம்மேளனம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம், இலங்கை வங்கி ஊழியர் சங்கம், நிறுவனங்களுக்கு இடையிலான ஊழியர் சங்கம் உள்ளிட்ட பல தொழிற்சங்கங்கள் கூட்டாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளன.

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அரசாங்கம் இவ்வாறு கருத்து வெளியிடும் உரிமை மற்றும் போராட்டங்களை ஒடுக்க நினைத்தால், சமூகம் ஸ்திரமற்றதாகி பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் வாக்குறுதிகள் வெறும் வாக்குறுதிகளாவே மாறிவிடும் என தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.

கண்ணீர் புகை மற்றும் தண்ணீர் பீரங்கிகளை பயன்படுத்தி ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது பொலிஸார் நடத்திய தாக்குதலில் காயமடைந்த தேசிய மக்கள் சக்தியின் நிவித்திகல பிரதேச சபைக்கான வேட்பாளர் நிமல் அமரசிறி, கண்ணீர்ப்புகை காரணமாக சுவாசப் பிரச்சினைகளால் உயிரிழந்தார்.

பொலிஸாரின் தாக்குதலில் படுகாயமடைந்த 46 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையான அஜித் கமகே கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருவதாக, இலங்கை ஜனநாயகத்திற்கான ஊடகவியலாளர்கள் அமைப்பு (JDS) ட்விட்டர் பதிவொன்றின் மூலம் தெரிவித்துள்ளது.

Facebook Comments