முன்னாள் பிரதமர் அவன்கார்ட் நிறுவனத் தலைவரிடம் கோடிக் கணக்கில் பணம் பெற்றதாக சம்பிக்க தெரிவிப்பு

0
Ivory Agency Sri Lanka

கடந்த ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் முன்னாள் பிரதமர், அவன்கார்ட் நிறுவனத் தலைவர் நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணம் பெற்றமை தொடர்பிலான தகவலை நல்லாட்சி அரசாங்கத்தின் பலமிக்க முன்னாள் அமைச்சர் பகிரங்கப்படுத்தியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலுக்கான செலவீனங்களுக்காக ரணில் விக்ரமசிங்க பணத்தைப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

”தேர்தலுக்கு செலவு செய்ய பணம் இல்லை என எனது தலைவர் என்னிடம் கூறினார். ஜனாதிபதி தேர்தலில்.எங்களின் அமைப்பாளர்களுக்கு செலுத்துவதற்கு பணம் இருக்கவில்லை.அதன்படி நான் அவன்கார்ட் நபரை அறிமுகப்படுத்தினேன்.அவர் கொடுத்த அவர் கொடுத்த சுமார் 5 இலட்சம் ரூபா பிரித்து வழங்கப்பட்டது. நானும் தெரியாதது போல் சென்று ஐந்து இலட்சம் ரூபா பணத்தை எடுத்து வந்தேன் என கூறினார்.120 பேருக்கு அதனை கொடுத்ததாக கூறினார்.”

தாம் பிரதிநிதித்துவப்படுத்திய அமைச்சரவையில் அங்கம் வகித்த வஜிர அபேவர்தன இந்த தகவலைத் தெரிவித்தார் என காலியில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய போது பாட்டலி சம்பிக்க ரணவக்க குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலில் மாத்திரம் அல்லாது கடந்த பொதுத் தேர்தல் காலப் பகுதியிலும் ரணில் விக்ரமசிங்க, நிஸ்ஸங்க சேனாதிபதியிடம் இருந்து பணத்தைப் பெற்றதாக முன்னாள் அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அவன்கார்ட் நிறுவனம் ஊடாக மிகத் தெளிவாக சட்டவிரோத ஆயுதச் செயற்பாடு இடம்பெறுவதாக குற்றஞ்சாட்டிய முன்னாள் அமைச்சர், அந்தக் குழுவினரை கைதுசெய்யுமாறு சட்ட அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த நிலையில் அவன்கார்ட் நிறுவனத்தின் பணத்திற்கு அடிமையாகி, 62 இலட்சம் மக்கள் வழங்கிய ஆணையை ஐக்கிய தேசிய கட்சி காட்டிக்கொடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

”எமது எந்தவொரு தொடர்பும் இன்றி, பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழும் ஆயுதங்கள் கட்டளைச் சட்டத்தின் கீழும் இந்தக் குழுவினரைக் கைதுசெய்யப்படுவார்கள் என இது தொடர்பில் விசாரணை செய்வதற்கு வந்த சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பண்டார கூறியிருந்தார். இந்தக் குழுவினர் கைதுசெய்யப்படுவார்கள் என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் சுஹத கம்லத் எங்கள் முன்னிலையில் ரணில் விக்ரமசிங்கவிடம் கூறினார். வாரங்கள், மாதங்கள் கடந்துவிட்டனர். அவர்கள் கைதுசெய்யப்படவில்லை.அதற்கான காரணம் தற்போது எமக்கு விளங்கிவிட்டது.”

முன்னாள் அமைச்சர் மற்றும் நிஸ்ஸங்க சேனாதிபதி ஆகியோருக்கு இடையில் இருந்த தொடர்புகளை ஏற்படுத்தி, திருடர்கள் மூலம் அரசாங்கத்தை கைப்பற்றும் முயற்சி குறித்து முன்னாள் அமைச்சர் வஜிர அபேவர்தன முழுமையாக பொறுப்புக் கூற வேண்டும் என முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

சட்டவிரோதமாக மிதக்கும் ஆயுதக் களஞ்சியத்தை நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ள அவன்கார்ட் கடற்சேவை நிறுவனத்தின் தலைவர் யாப்பா ஹெட்டி பத்திரன்னாஹலாஹே யாப்பா சேனாதிபதி உள்ளிட்ட 13 பேருக்கு எதிராக 7573 குற்றச்சாட்டுக்களின் கீழ் முன்னெடுக்கப்படும் வழக்கு கொழும்பு உச்ச நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணை செய்யப்பட்டுவருகின்றது.

எனினும் அரசியல் பழிவாங்கலுக்காக கடந்த அரசாங்கத்தின் காலப் பகுதியில் தமக்கு எதிராக நடவடிக்கை எடுத்தார்கள் என தெரிவித்து, நிஸ்ஸங்க சேனாதிபதி ஜனாதிபதி ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments