இருபது இலட்சம் தொழிலாளர்களின் உரிமைகளுக்கான புதிய பரிந்துரைகள்

0
Ivory Agency Sri Lanka

“மனித வள” தொழிலாளர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் வகையில், அவர்கள் அனைவரையும் தொழில் ஆணையாளரின் கீழ் பதிவு செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பியகம, கட்டுநாயக்க மற்றும் வத்துப்பிட்டிவல ஆகிய சுதந்திர வர்த்தக வலய பணியாளர்கள் மத்தியில், “அநீதியின் இழைகள் – Threads of Injustice” என்ற தலைப்பில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் “மனித வளம்” தொழிலாளர்களின் உரிமைகள் வேலைவாய்ப்பு நிறுவனங்களால் மீறப்படுவது தெரியவந்துள்ளது.

“போரம் ஏசியா” என்ற சர்வதேச அரசு சார அமைப்பின் உள்ளூர் பிரதிநிதியான சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை நடத்திய இந்த ஆய்வின் ஊடாக “மனித வள”’ தொழிலாளர்களின் சேவை உரிமைகளை பாதுகாக்கும் வகையில், அரசு மற்றும் தொழிற்சாலை முகாமையாளர்களுக்கு பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆடைத் துறையில் பணிபுரியும் “மனித வள” தொழிலாளர்களின் எண்ணிக்கை மாத்திரம் இரண்டு மில்லியன். கடினமான பணிச்சூழல்கள் இருந்தபோதிலும், தொழிலாளர்கள் விடுப்பு எடுப்பதற்கான சுதந்திரத்திற்காக “மனித வளத்தை” நாடுகிறார்கள் என குறித்த ஆய்வு அறிக்கை காட்டுகிறது.

தொழிற்சாலைகளில் நிரந்தரத் தொழிலாளர்கள் ஈடுபட மறுக்கும் அபாயகரமான வேலைகளில் இந்த “மனித வள” தொழிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

வேலைவாய்ப்பு முகவர்கள் தங்கள் நாளாந்த ஊதியத்தில் இருபத்தைந்து முதல் முப்பது வீதத்தை எடுத்துக்கொள்வதோடு, மேலதிக நேர ஊதியம் உட்பட வேறு எந்த சலுகைகளும் “மனித வள” தொழிலாளர்களுக்குக் கிடைப்பதில்லை.

மேலும் பரிந்துரைகள்

சுதந்திர வர்த்தக வலய தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக, தொழிலாளர் தனி தலைமைச் செயலகத்தை நிறுவுதல், ஒவ்வொரு சுதந்திர வர்த்தக வலயத்திற்குஅருகிலும் தொழிலாளர் திணைக்களத்தின் அலுவலகத்தை நிறுவுதல் மற்றும் “மனித வள” பதிவு ஆகியவற்றை அந்த அமைப்பு அரசாங்கத்திற்கு முன்மொழிவதோடு, அனைத்து தொழிலாளர்களின் உரிமைகளுக்கும் மதிப்பளித்து பொருளாதார மற்றும் பணவீக்கத்திற்கு ஏற்ப ஊதியத்தை வழங்குமாறு ஆடைத் தொழில்துறை உரிமையாளர்களை கோரியுள்ளது.

சட்டம் மற்றும் சமூக அறக்கட்டளை வெளியிட்டுள்ள ஆய்வு அறிக்கையில் ஆடைத் தொழிலில் நிரந்தரத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பணியிடங்களில் பாலியல் துன்புறுத்தல், பணிப் பாதுகாப்பு, உற்பத்தி இலக்குகளை வழங்குவதில் முன்வைக்கப்படும் கடினமான பணிச்சூழல், தொழிலாளர்கள் அமைதியாக ஒன்றுகூடுவதற்கான சுதந்திரம் மற்றும் தொழிற்சங்கங்களுக்குத் திரும்புவதற்கான வாய்ப்புகள் ஆகியவை ஆடைத் தொழிற்துறை நிர்வாகத்தினரால் மறுக்கப்பட்டுள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

Facebook Comments