நாடாளுமன்ற உறுப்பினர் நீதிபதியை தாக்கியமைக்கு பெண்கள் அமைப்புகள் கண்டனம்

0
Ivory Agency Sri Lanka

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டத்தை நிர்வகிக்கும் நீதித்துறை நிறுவனமான காதி நீதிமன்றத்தின் நீதிபதி மீது நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியதற்கு மகளிர் அமைப்புக்களின் கூட்டு கண்டனம் தெரிவித்துள்ளது.

புத்தளம் குவாசி (காதி) கலாநிதி மொஹமட் ரஹ்மத்துல்லாஹ் மொஹமட் மீதான தாக்குதல் தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையின் அவசியத்தை வலியுறுத்தியுள்ள, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இயங்கும் எட்டு மகளிர் அமைப்புகளின் கூட்டமைப்பான “பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு”, நீதித்துறை அதிகாரி மீது வன்முறையில் ஈடுபட்டவர்கள் பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 26ஆம் திகதி புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமின் புதல்வியின் வீட்டில் வீட்டில் வைத்து தான் தாக்கப்பட்டதாக காதி நீதிபதி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

காதி நீதிமன்ற நீதிபதி பதவியில் இருந்து விலகுமாறு புத்தளம் ஜும்மா பள்ளிவாசல் நிர்வாக சபையின் ஊடாக நாடாளுமன்ற உறுப்பினர் தமக்கு அழுத்தம் கொடுத்ததாகவும் அந்த அழுத்தத்தை தாம் நிராகரித்ததாகவும் தாக்குதலுக்கு உள்ளான காதி நீதிபதி பொலிஸாரிடம் தெரிவித்தார்.

புத்தளம் பகுதியில் மாத்திரம் குவாசி ஒருவர் தாக்கப்படுவது இது மூன்றாவது தடவை என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

கடந்த காலங்களில், முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டங்களை நிர்வகிக்கும் நீதித்துறை நிறுவனமான குவாசி நீதிமன்றங்கள் குறித்து முஸ்லிம் பெண்கள் முறைப்பாடு செய்திருந்தனர். குறித்த நீதிமன்றங்கள் ஆணாதிக்கத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு நிறுவனம் எனவும் பெண்களுக்கு எந்த நீதியையும் வழங்கவில்லை எனவும் விமர்சிக்கப்பட்டது.

அண்மையில் கலாநிதி மொஹமட் றஹ்மத்துல்லாஹ்வை நீதிச்சேவை ஆணைக்குழுவினால் காதி நீதிபதியாக நியமித்ததன் பின்னர், அவர் புத்தளம் பிரதேசத்தில் கடமையாற்றுவதாகவும், அவரது நியமனத்தில் சிலர் மகிழ்ச்சியடையவில்லை எனவும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இந்த நியமனத்திற்கு உள்ளூர் பள்ளிவாசல் எதிர்ப்பினை வெளியிட்டுள்ளதாகவும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

புத்தளம் பள்ளிவாசல், நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீமுக்கு இந்த நியமனம் தொடர்பில் அதிருப்தி தெரிவித்து, தாங்கள் பரிந்துரைத்த நபர் நியமிக்கப்படவில்லை எனவும், அவர் தலையிட்டு நியமனத்தை மீளாய்வு செய்யுமாறும் கோரிய கடிதத்தில், அவர் புத்தளத்தைச் சேர்ந்தவர் அல்லவெனக் குறிப்பிட்டு “’பிராந்தியவாதத்தை’ எழுப்புவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.”

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்து சட்டம்

மத ஸ்தாபனங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் ஆலோசனைகள் பின்பற்றப்படாமையால், காதி நீதிபதிகளுக்கு சமூகத்தின் அச்சுறுத்தல்களுக்கு முகம் கொடுக்க நேரிட்டதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

“பெண்களை இலக்காகக் கொண்டு முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்து சட்டத்தில் முன்மொழியப்பட்ட சீர்திருத்தங்களுக்கு எதிராக 2023 ஜனவரி 13 அன்று புத்தளம் பள்ளிவாசல் ஏற்பாடு செய்த ஆர்ப்பாட்டத்தை முன்னிலைப்படுத்துவது அவசியம். முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்த வேண்டியதன் அவசியத்தை எப்போதும் எழுப்பும் சட்ட மற்றும் மத அறிஞர்கள், ஆர்வலர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களை தாக்குவதற்கு பள்ளிவாசல்களும் அவற்றின் உறுப்பினர்களும் கடந்த காலங்களில் எவ்வாறு செயற்பட்டார்கள் என்பதை நாங்கள் நன்கு அறிவோம்.”

காதி நீதிபதி மீதான தாக்குதல் அதன் நான்கு தசாப்தங்களுக்கும் மேலான கோரிக்கையை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் அத்தியாயத்துடன் முழுமையாக இணங்க முஸ்லிம் திருமணம் மற்றும் விவாகரத்துச் சட்டத்தை சீர்திருத்துவதற்கான அவசரத் தேவையை மீண்டும் வலியுறுத்துவதாகவும் பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு கூறுகிறது.

பிரதான நீதி அமைப்புக்குள் தீவின் அனைத்து பகுதிகளிலும் குவாசிகளின் சுதந்திரத்தை உறுதி செய்வதோடு, முறையான நீதி நிர்வாகத்தின் ஒரு பகுதியாக இந்த அமைப்பை சீர்திருத்துவதற்கான அவசரத் தேவை ஏற்பட்டுள்ளதாக பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு தெரிவித்துள்ளது.

“அனைத்து நீதித்துறை நிறுவனங்களும் பள்ளிவாசல்களின் நிர்வாகம் உட்பட அனைத்து பலம்வாய்ந்த நபர்கள் அல்லது நிறுவனங்களால் அச்சுறுத்தப்படாமல் பாதுகாக்கப்பட வேண்டும். காதியை நியமிப்பதற்கும் ஒழுங்குபடுத்துவதற்கும் அதிகாரம் பெற்ற நீதிச் சேவை ஆணைக்குழு மற்றும் நீதி அமைச்சும் இதை அவசரமாக கருதி அனைத்து குவாசிகளுக்கும் பாதுகாப்பை வழங்க வேண்டும்.” என பெண்கள் செயற்பாட்டு வலையமைப்பு மேலும் தெரிவித்துள்ளது.

Facebook Comments