வடக்கு கிழக்கில் ‘அரச அத்துமீறலுக்கு’ எதிராக சமயத் தலைவர்கள் உண்ணாவிரதம்

0
Ivory Agency Sri Lanka

தமிழ் மக்களின் இன, மத பாரம்பரியத்தை மாற்றியமைக்கும் நோக்கில் வடக்கு கிழக்கில் மேற்கொள்ளப்படும் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு வலியுறுத்தி யாழ்ப்பாணத்தில் அடையாள உண்ணாவிரதப் போராட்டம் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் நல்லை ஆதின முன்றலில் ஏப்ரல் 16ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த போராட்டத்தில், இந்து, கத்தோலிக்க மதகுருமார்கள், அரசியல்வாதிகள் என பலரும் இணைந்து கொண்டனர்.

“தமிழ் பாரம்பரியத்தை காப்போம்” என்ற தொனிப்பொருளில் ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தில், அழிக்கப்பட்ட வெடுக்குநாறி மலையிலுள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் சிவலிங்கம் மற்றும் சிலைகளை உடனடியாக மீள் பிரதிஷ்டை செய்து உரிய விசாரணை நடத்தி குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் திணைக்களத்தின் கட்டுப்பாட்டில் உள்ள வவுனியா வெடுக்குநாறி மலையில் அமைந்துள்ள ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தை சேதப்படுத்தியவர்கள் அதன் உச்சியில் வைக்கப்பட்டிருந்த ஆதி லிங்கேஸ்வரர் சிலையை அகற்றிய புதருக்குள் வீசி எரிந்ததாக கடந்த மார்ச் மாதம் ஆலய நிர்வாகத்தினால் தெரிவிக்கப்பட்து.

மேலும் அந்த இடத்தில் இருந்து பிள்ளையார், அம்மன் மற்றும் வைரவர் ஆகிய மூன்று சிலைகளையும் காணாமல் போயுள்ளன.

முல்லைத்தீவு குருந்தூர்மலை மலையையும், திருகோணமலை கன்னியா வெந்நீரூற்றையும் விரைவில் இந்துக்களுக்கு மீட்டுத் தருமாறும், பௌத்த நிர்மாணங்களை நிறுத்துமாறும், தொல்பொருள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள புதிய வர்த்தமானிகளை இரத்துச் செய்யுமாறும் இந்த உண்ணாவிரதத்தின் இரண்டாவது கோரிக்கையாக அமைந்திருந்தது.

வடபகுதி மக்களால் இந்துக்களின் புனித ஸ்தலமாக கருதப்படும் குருந்தூர்மலை மலையில் சிவன் கோவில் அமைந்துள்ள இடத்தில் புதிய கட்டிடங்களை கட்டுவதற்கு எட்டு மாதங்களுக்கு முன்னர் நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்ட போதிலும், இராணுவத்தினரின் பூரண ஆதரவுடன் தற்போது விகாரை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது.

கின்னியா வெந்நீர் ஊற்று அமைந்துள்ள நிலம் தொல்பொருள் திணைக்களத்திடம் கையளிக்கப்பட்டுள்ளது.தொல்பொருள் திணைக்களம் இந்த கிணற்றை பௌத்த பாரம்பரியத்துடன் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

தமிழர் தாயகத்தின் தொன்மையையும் பாரம்பரியத்தையும் மாற்றி இன, மத நல்லிணக்கத்திற்கு இடையூறு விளைவிக்கும் தொல்பொருள் திணைக்களத்தின் அனைத்து ஆக்கிரமிப்பு நடவடிக்கைகளையும் முற்றாக நிறுத்த வேண்டும் என்பது, நல்லை ஆதினம் முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட உண்ணாவிரதத்தின் மூன்றாவது கோரிக்கையாக அமைந்திருந்தது.

மட்டக்களப்பு மயிலத்தமடு மேய்ச்சல்தரை பிரதேசத்தில் சிங்கள மக்களின் அத்துமீறலை தடுத்து நிறுத்தி தமிழ் விவசாயிகள் தமது பாரம்பரிய மேய்ச்சல்தரையை வாழ்வாதாரத்திற்கு பயன்படுத்துவதற்கான உரிமையை உறுதிப்படுத்த வேண்டும் என்பதே உண்ணாவிரதத்தின் நான்காவது கோரிக்கையாகும்.

மட்டக்களப்பு, மயிலத்தமடு, மாதவனை பிரதேசத்தில் தமிழ்ப் பால் பண்ணையாளர்கள் பல வருடங்களாகப் பயன்படுத்தி வந்த மேய்ச்சல் தரையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் கிழக்கு மாகாண ஆளுநராக நியமிக்கப்பட்ட அனுராதா யஹம்பத்தினால் அண்மையில் குடியேற்றப்பட்ட சிங்களக் குடும்பங்கள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர், இந்த நிலையில் பாரம்பரிய கால்நடை மேய்ப்பவர்களுக்கும், விவசாயிகளுக்கும் இடையே தொடர்ச்சியாக மோதல் ஏற்படுவதாக பிராந்திய செய்தியாளர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.

யுத்தத்தின் பின்னர் இன, மத பாரம்பரியத்தை மாற்றும் திட்டமிட்ட பாரிய குடியேற்றங்கள் உட்பட அனைத்து நடவடிக்கைகளையும் முற்றாக நிறுத்துமாறு போராட்டக்காரர்கள் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளனர்.

பாதுகாப்பு அமைச்சு, மகாவலி அதிகார சபை, சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை, தொல்பொருள் திணைக்களம், வனப் பாதுகாப்பு மற்றும் வனவிலங்கு திணைக்களம், வடக்கு கிழக்கில் தமிழர்களுக்கு சொந்தமான காணிகளை வலுக்கட்டாயமாக சுவீகரிப்பதாக தொடர்ச்சியாக குற்றம் சுமத்தப்பட்டு வருகின்றது.

இப்போராட்டத்தில் நல்லை ஆதீன முதல்வர் சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள், தென்கயிலை ஆதீன முதல்வர் சிவத்திரு அகத்தியர் அடிகளார், சிவகுரு ஆதீன முதல்வர் வேலன் சுவாமிகள், யாழ். மறைமாவட்ட குரு முதல்வர் ஜெபரட்ணம், நாடாளுமன்ற உறுப்பினர்களான க.வி.விக்னேஸ்வரன், சி.சிறிதரன், த.சித்தார்த்தன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை.சேனாதிராஜா, சுரேஸ் பிரேமச்சந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

உண்ணாவிரதத்துடன் தமிழர் தாயகத்தை வென்றெடுப்பதற்காக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கையொப்பங்களை சேகரிக்கும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டது.

Facebook Comments