கொடிய கொவிட் தொற்று நாடு முழுவதும் மிகமோசமாக பரவிக்கொண்டிருந்த நேரத்தில், சிறையில் 11 பேரைக் கொன்று குவித்த வழக்கில் நீதிக்காக அரசின் அடக்குமுறைகளை எதிர்கொண்டு தொடர்ந்து போராடிய கைதிகளின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாட்டின் முன்னணி அமைப்பு வெற்றி பெற்றுள்ளது.
“நீதிமன்றம் வழங்கிய இந்த தீர்ப்பு குறித்து, இந்த நேரத்தில் நீதிமன்றத்தை மதிக்கிறோம், ஏனென்றால் இந்த வழக்கில் நீதி கிடைக்கும் என்று நாங்கள் நம்பினோம். இன்று அந்த நீதி நிலைநாட்டப்பட்டுள்ளது.”
மூன்று வருடங்களுக்கு முன்னர் மஹர சிறைச்சாலையில் 11 கைதிகளைக் கொன்ற குற்றத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் அனைவரையும் உடனடியாக கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்துமாறு கடந்த ஏப்ரல் 26ஆம் திகதி வெலிசர நீதவான் துசித தம்மிக்க உடிவவிதான குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.
கைதிகளைக் கொன்றது குற்றம் என்று தீர்ப்பளித்த வெலிசர நீதவான், இறந்தவர்கள் சுடப்பட்ட விதத்தைப் பார்க்கையில் கிளர்ச்சியை அடக்குவதற்காகவோ அல்லது மனிதாபிமான நடவடிக்கைக்காகவோ துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகத் தெரியவில்லை எனவும் தீர்ப்பளித்ததாக வெகுஜன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
உடலில் துப்பாக்கியால் சுடப்பட்ட காயங்கள் காரணமாக கொல்லப்பட்டமை, 11 கைதிகளின் மரணம் குறித்த நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் தெரியவந்துள்ளதாக, மஹர படுகொலைச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுடன் ஒன்றிணைந்து போராடிய கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் சுதேஷ் நந்திமால் சில்வா தெரிவித்துள்ளார்.
“இது கலவரத்தை அடக்குவதற்காக நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூடு என்றால், முழங்காலுக்கு கீழ் சுடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் வயிற்றுக்கு மேல் சுட்டு இந்த 11 பேரையும் கொன்றுள்ளமையாலேயே நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது, அவர்களை கைது செய்யுமாறு, ஏனெனில் மார்பு பகுதி மற்றும் தலை பகுதியில் இவர்கள் சுடப்பட்டுள்ளனர்.”
அதிகாரப் போட்டிக்காக உயர் பதவிகளில் இருப்பவர்கள் விதித்துள்ள சட்ட விரோத உத்தரவுகளை நடைமுறைப்படுத்தி சிறை அதிகாரிகள் தமது உயிருக்கு ஆபத்தை விளைவிக்க வேண்டாம் என ஊடக சந்திப்பில் சிறைக் கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழுவின் பொதுச் செயலாளர் அறிவுரை வழங்கினார்.
“எதிர்காலத்தில் உங்கள் வேலையை உங்கள் வேலையாகத் தொடருங்கள். ஒவ்வொரு ஒப்பந்தத்திற்கும், கொலைகார ஒப்பந்தக்காரர்களாக மாறாதீர்கள். அப்படி நடந்தால் வாழ்நாள் முழுவதும் சிறையில் கழிக்க வேண்டியிருக்கும்.”
2020 நவம்பர் 30 மற்றும் டிசம்பர் முதலாம் திகதிகளில் மஹர சிறைச்சாலையில் மேற்கொள்ளப்பட்ட படுகொலைத் தாக்குதலில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். உயிரிழந்த 11 பேரின் உறவினர்களுக்கு மரணச் சான்றிதழ் வழங்கவும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ஏ.எச். மஹிந்த (25), அலங்கார தேவகே அமித் சுபசிங்க (30), வெலிகல விதானலாகே கவிந்து சுலக்ஷன விதானகே (21), யாகுபிட்டிய ரசிக ஹர்ஷன காரியவசம் (33), மார்லன் கிரேக் (27), விதானகே அவிஷ்க மல்ஷான் (18), ஹெட்டியாராச்சி லஹிரு நிமந்த (29), சிங்கக்கார லியனகே சம்பத் புஸ்பகுமார (29), சுது தேவகே பிரதீப் அதுல குமார (41), இந்திக்க புஷ்ப குமார, சரணபிரிய ஜயசேகர படபெதிகே சுமித் குமார ஆகியோர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
சாட்சிகளுக்கு சித்திரவதை
மஹர சிறைச்சாலை படுகொலையை நேரில் கண்ட சாட்சிகளை சிறைச்சாலை அதிகாரிகள் சித்திரவதை செய்து சிறைச்சாலையில் பலவந்தமாக அடைத்து வைத்துள்ளதாக கைதிகளின் உரிமைகளை பாதுகாக்கும் குழு அண்மையில் குற்றம் சுமத்தியது.
மஹர சிறைச்சாலையில் ஏற்பட்ட மோதலால் பரபரப்பிற்கு, கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட கைதிகள் குழுவை வெலிக்கடை சிறைச்சாலையில் இருந்து மஹர சிறைக்கு மாற்றியமையே இதற்குக் காரணம் என தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு 2020 டிசம்பர் தொடக்கத்தில் தெரிவித்திருந்தது.
கூட்ட நெரிசல் உள்ளிட்ட மூன்று காரணிகள் கைதிகளின் போராட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து ஏற்பட்ட மோதலுக்கும் முக்கியக் காரணம் என்பது ஆணைக்குழுவின் அப்போதைய முதற்கட்ட முடிவாக அமைந்திருந்தது.
11 பேர் கொல்லப்பட்ட மற்றும் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்த மஹர சிறைச்சாலை படுகொலை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளை அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் என சட்டமா அதிபர் திணைக்களம் கண்டித்துள்ளது.
பாதிக்கப்பட்ட நபர்களுக்காக முன்னிலையான சட்டத்தரணிகள் அரச சார்பற்ற நிறுவனங்களின் நலன்களுக்காக செயற்படுவதாக அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன திறந்த நீதிமன்றில் குற்றஞ்சாட்டியதாக மனித உரிமைகள் சட்டத்தரணி சேனக பெரேரா 2020 டிசம்பரில் வெளிப்படுத்தியிருந்தார்.
மஹர சிறைச்சாலைத் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் சட்டத்தரணிகளான சேனக பெரேரா, கே.எஸ்.ரத்னவேல், பாலித பண்டாரநாயக்க, அச்சலா செனவிரத்ன, சூல அதிகாரி, தம்பையா ஜே ரத்னராஜா, நாமல் ராஜபக்ச, லுதீப் சயினுல் ஆகியோர் முன்னிலையாகினர்.
இதேவேளை, பாதிக்கப்பட்டவர்களுக்காக இந்த சட்டத்தரணிகள் குழுவை முன்னிலையாக அங்கீகாரம் வழங்கியது யார் என சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரணி நிஷாரா ஜயரத்ன நீதிமன்றில் வினவியபோது, குறித்த சட்டத்தரணிகள் குழுவை தமக்காக முன்னிலையாவதற்கு அனுமதித்ததாக, மஹர தாக்குதலில் பாதிக்கப்பட்ட நான்கு பேர் குறிப்பிட்டனர்.