மே தினத்தில் ஜனாதிபதியின் அழைப்பை வடக்கு அதே தினத்தில் நிராகரித்தது

0
Ivory Agency Sri Lanka

தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தில் அங்கம் வகிக்குமாறு உலக தொழிலாளர் தினத்தில் தமிழ் கட்சிகளுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்திருந்த நிலையில், ஒற்றையாட்சியில் தீர்வு காணும் முயற்சி வீண் செயற்பாடு என வடக்கின் தமிழ் கட்சியொன்று நிராகரித்துள்ளது.

“இனப்பிரச்சினை விடயத்தில் தூரமாகிச் செல்வதால் எந்தப் பயனும் இல்லை என்று நான் தமிழ்க் கட்சிகளிடம் கூறுகிறேன். இந்த நாட்டில் உள்ள தமிழ் மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டுமாயின், தயவுசெய்து இந்த பொறிமுறைக்குள் வந்து விசேடமாக நாடாளுமன்றத்தில் ஒரு அரசாங்கமாக நாம் அனைவரும் இணைந்து செயல்படுவோம்.” என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் மே தினக் கொண்டாட்ட உரையில் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் பின்னர் நடைபெற்ற முதலாவது மே தினத்தில் இலத்திரனியல் தொழில்நுட்பத்தின் ஊடாக ரணில் விக்ரமசிங்க கலந்துகொண்டார்.

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி அரசாங்கத்துடன் இணைந்து தேசிய பிரச்சினைக்கு தீர்வைக் காண முற்றாக மறுத்துள்ளது.

“தமிழ்த் தேசியப் பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்கும் தீர்வு இல்லை” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கூறியுள்ளார்.

தமிழ் மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்ற தமிழ்த் தேச அங்கீகாரத்தையும், அதனுடைய தனித்துவமான இறைமையையும், சுயநிர்ணய உரிமையையும் முழுமையாக அனுபவிக்கக் கூடிய ‘சமஸ்டி’ அடிப்படையிலான தீர்வை அடைய இந்திய அரசும் ஏனைய நட்பு நாடுகளும் இலங்கையை வலியுறுத்த வேண்டும் என்றும் கோருவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மேதின பிரகடனத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்துடனான ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளதால், அதனை தொடர்ந்தும் தொடர நம்புவதாக கூறும் ஜனாதிபதி, அதற்காக இந்த நாட்டில் இனப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டுமென மே தினத்தில் தெரிவித்திருந்தார்.

சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தம் அங்கீக்கப்பட்டுள்ள நிலையில், அதனை முன்னெடுத்துச் செல்ல எண்ணியுள்ளதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி அதற்கு, இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“இதுகுறித்து பேச்சு நடத்தி வருகிறோம். இந்த வருட இறுதிக்குள் ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்கு எதிர்பார்த்துள்ளேன். யாருக்கும் பாதிப்பு ஏற்படக் கூடாது. பெரும்பான்மை சிங்கள மக்களையும், சிறுபான்மை தமிழ், முஸ்லிம் மக்களையும் பாதுகாத்துக் கொண்டு முன்நோக்கிச் செல்ல வேண்டும். இதற்காக நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.”

2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4ஆம் திகதி முன்னதாக தேசியப் பிரச்சினை தீர்க்கப்படும் என உறுதியளித்து, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உள்ளிட்ட கட்சிகளுடன் ஜனாதிபதி முன்னெடுத்த பேச்சுவார்த்தை எவ்வித முன்னேற்றமும் இன்றி இவ்வருட முற்பகுதியில் முடிவுக்கு வந்தது.

நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார அமைப்பில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டும் என இளைஞர்கள் முன்வைக்கும் கோரிக்கைக்கு செவிசாய்க்க வேண்டும் என தெரிவித்த ஜனாதிபதி, நாடாளுமன்றத்தில் ஆட்சியமைக்க தமிழ் அரசியல் கட்சிகளுக்கு மேலதிகமாக எதிர்க்கட்சிகள், இடதுசாரி கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் ஏனைய அமைப்புகளை ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

இனவழிப்பு யுத்தத்தால் அழிக்கப்பட்ட வடக்கு கிழக்கு ஈழத் தமிழ்த் தேசத்தை, போரால் பாதிக்கப்பட்ட பிராந்தியமாக பிரகடனம் செய்து, அத்தேசத்தின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கான விசேட நிதியேற்பாடுகள் செய்யப்படவேண்டுமென, நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மே தின பிரகடனத்தின் ஊடாக நாட்டு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

குறித்த செயற்றிட்டத்தில் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள், முன்னாள் போராளிகள், பெண் தலைமைத்துவக் குடும்பங்கள், பெற்றோரை இழந்த பிள்ளைகள் போன்றோர் உள்வாங்கப்பட்டு அவர்களின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்பட வேண்டுமெனக் கூறியுள்ள அவர், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகள் வழங்கப்பட வேண்டுமெனவும் வலியுறுத்தியுள்ளார்.

வடக்கு கிழக்கு தாயகத்தின் சுதந்திரம், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை ஆகியவற்றை வலியுறுத்தியும், இனப்படுகொலை மற்றும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் ஆகிய விவகாரங்களுக்கு நீதி கோரியும், சிங்கள பௌத்த மயமாக்கல், புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் ஆகியவற்றுக்கு எதிர்ப்பு வெளியிட்டும், இலங்கை தமிழ் அரசு கட்சி கிளிநொச்சி டிப்போ சந்தியில் உள்ள பசுமை பூங்காவில் மே தின நிகழ்வை நடத்தியது.

Facebook Comments