கடும் உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்ளும் இலங்கை: யுனிசெப்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் சுமார் 40 இலட்சம் பேர் உணவு பாதுகாப்பின்மையை எதிர்கொள்வதாக யுனிசெப் எனப்படும் ஐக்கிய நாடுகளின் சர்வதேச குழந்தைகள் சிறுவர்கள் அவசர நிதியம் எச்சரித்துள்ளது.

நாட்டில் பொருளாதாரம் வளர்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டாலும், ஐ.நாவின் ஒரு அங்கமான இந்த அமைப்பின் அறிக்கைக்கு அமைய, இலங்கையில் முப்பது இலட்சம் சிறுவர்களுக்கு மனிதநேய உதவி தேவைப்படுகிறது. உயிர்காக்கும் ஊட்டச்சத்து, சுகாதாரம், கல்வி, குடிநீர் மற்றும் மலசலகூட வசதிகள், பாதுகாப்பு மற்றும் சமூக பாதுகாப்பு சேவைகள் ஆகிய விடயங்களிலேயே இந்த உதவி தேவைப்படுகிறது என யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் சமூகத்திலேயே மிக அதிக அளவிலானவர்கள் உணவு பாதுகாப்பு நெருக்கடியை எதிர்கொள்வதாக கண்டறியப்பட்டுள்ளதோடு, இவர்களுக்கு அடுத்ததாக சமுர்த்தி பயனாளிகள், விசேட தேவையுடையவர்கள் மற்றும் அரச உதவிகளை பெரிதும் நம்பியிருக்கும் குடும்பங்களே பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் நிலவும் அரசியல் நெருக்கடியுடன் ஸ்திரமற்ற அரச நிர்வாகம் ஆகியவற்றுடன் பரந்துபட்டளவில் உள்நாட்டில் இடம்பெற்ற அமைதியின்மை, அதிகரிக்கும் பணவீக்கம் மற்றும் வாழ்க்கைச் செலவுகள் ஆகியவையே உணவு பாதுகாப்பின்மைக்கு முக்கிய காரணங்களாக அமைந்துள்ளதாக யுனிசெப்பின் அறிக்கை கூறுகிறது.

இவற்றின் காரணமாக தேசிய அளவில் வறுமை இரட்டிப்பாக அதிகரித்து அது தற்போது 25 வீதமாக உள்ளதாகவும், நகர்ப்புறங்களில் அது மும்மடங்காக அதிகரித்து 15 வீதமாக காணப்படுவதாகவும், இலங்கையில் நிலவும் உணவுப் பிரச்சினை குறித்த தனது ஆய்வறிக்கையில் யுனிசெப் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த 2022ஆம் ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 7.8 வீதத்தால் வீழ்ச்சியடைந்தது. இதன் காரணமாக வேலையிழப்புகள் மற்றும் வாழ்வாதார பாதிப்புகள் ஏற்பட்டன. சர்வதேச நாணய நிதியம் (IMF) இலங்கையில் பொருளாதார ஸ்திரத்தன்மை ஏற்படும் நோக்கில் கடனுதவியை அளித்தாலும், இந்த ஆண்டு நாட்டின் பொருளாதாரம் மேலும் வீழ்ச்சியடையும் என சர்வதேச நாணய நிதியம் மற்றும் உலக வங்கி ஆகியவை எதிர்வு கூறியுள்ளன.

“பலவீனமான ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தொடர்ந்தும் உணவு பாதுகாப்பின்மை, ஊட்டசத்து, வேலையிழப்பு மற்றும் சார்புநிலை குறித்த சவால்களை எதிர்கொள்கின்றன. இவை எதிர்மறையான தாக்கங்களை ஏற்படுத்துகின்றன” என்று யுனிசெப் அமைப்பின் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் மூன்றில் இரண்டு பங்கு மக்கள் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொள்வதாக கூறும் அந்த அறிக்கை இந்த நெருக்கடி மேலும் அதிகரிக்கக் கூடும் என எச்சரித்துள்ளது. நாட்டில் 62 வீதமான மக்கள் தமது உணவு பாதுகாப்பிற்காக தமது சேமிப்பிலிருந்து பணம் எடுப்பது, கடன் வாங்குவது அல்லது கடனிற்கு உணவு கொள்வனவு செய்வது ஆகிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை இலங்கையில் தாமதமடைந்துள்ளதால் மழை பொழிவு குறைந்துள்ளதாகவும், இதன் காரணமாக நாட்டின் 7 மாவட்டங்களில் வறட்சியும் குடிநீர் தட்டுப்பாடும் நிலவுவதாக யுனிசெப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நாட்டில் விவசாய உற்பத்தி பாதிப்படைந்து உணவு பாதுகாப்பின்மை நெருக்கடி மேலும் அதிகரிக்கலாம் எனவும் அந்த அறிக்கை எச்சரிக்கிறது.

வறட்சியின் காரணமாக நெற் பயிர்ச்செய்கை பாதிப்படைந்து உற்பத்தி குறையும் எனவும், இதன் காரணமாக சந்தையில் அரிசியின் விலை மேலும் அதிகரிக்கும் எனவும், அப்படி ஏற்பட்டால் மக்கள் மேலும் நெருக்கடியை சந்திப்பார்கள் எனவும் அந்த அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Facebook Comments