புதிய தொழிலாளர் சட்டம் குறித்து பொதுசன அபிப்பிராயம் அவசியம்

0
Ivory Agency Sri Lanka

அரசாங்கம் கொண்டுவரவுள்ள தொழிலாளர் திருத்த சட்டமூலம் குறித்து பொதுமக்களின் கருத்துக்களை கேட்டறிய வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில் அமைச்சரினால் அதிலிருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் பங்கேற்ற கொழும்பில் நேற் இடம்பெற்ற கூட்டத்தில் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

தொழிலாளர் சட்ட திருத்த சட்ட வரைபை தேசிய தொழிலாளர் ஆலோசனை சபைக்கு வழங்கிய பின்னர் அதனை பகிரங்கப்படுத்த வேண்டும் என தொழிற்சங்கங்கள் தொழில் அமைச்சர் மனுஷ நாணயக்காரவிடம் தெரிவிக்கவுள்ளன.

மேலும், தொழிலாளர் ஆலோசனைக் சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றும் அதிலிருந்து நீக்கப்பட்ட தொழிற்சங்கப் பிரதிநிதிகள், மக்களின் கருத்துகளையும் ஆலோசனைகளையும் பெறுவதற்கு ஒரு சுயாதீனமான மற்றும் வெளிப்படையான ஆணைக்குழு நிறுவப்பட வேண்டும் எனக் கூறியுள்ளனர்.

தொழிலாளர் வர்க்க இயக்கத்தை அழிவுக்கு கொண்டுச் செல்லும் அரசின் திட்டங்களை முறியடிக்கும் வகையில் தொழிற்சங்கங்கள் வேறுபாடுகள் மற்றும் பேதங்களை மறந்து ஒன்றிணைய வேண்டும் எனவும் இதன்போது தீர்மானிக்கப்பட்டது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்க்ஸ் இந்த கூட்டின் அழைப்பாளராக ஏகமனதாக நியமிக்கப்பட்டுள்ளார்.

பணியிடத்தில் தொழில் அமைதியை நிலைநாட்டும் நோக்கில் அரசாங்கம், முதலாளிகள் மற்றும் தொழிற்சங்கங்களால் பராமரிக்கப்படும் முத்தரப்பு சங்கமாக கருதப்படும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் சபையில் இருந்து நான்கு முக்கிய தொழிற்சங்கங்களை நீக்குவதற்கு தொழில் அமைச்சர் நடவடிக்கை எடுத்திருந்தார்.

வருடாந்தக் கூட்டங்கள், கிளைச் சங்கங்கள் மற்றும் வருடாந்த மற்றும் மாதாந்த அறிக்கைகளை முறையாகப் பராமரிக்காத மற்றும் உறுப்பினர்கள் ஆயிரத்தை எட்டாத தொழிற்சங்கங்கள் ஆலோசனை சபையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக தொழில் அமைச்சு அறிவித்திருந்தது.

சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தகம், கைத்தொழில் மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கம், இலங்கை தோட்ட சேவையாளர் சங்கம் மற்றும் ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம் ஆகியன, தொழில் அமைச்சரின் ஆலோசனைக்கு அமைய அகற்றப்பட்டன.

தொழில் அமைச்சரை பிரதான பிரதிவாதியாக குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் அமைச்சரின் தீர்மானத்தை இரத்து செய்யுமாறு சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவை ஊழியர் சங்கம் கோருகின்றது.

Facebook Comments