வடக்கிலுள்ள மத ஸ்தலங்கள் தொடர்பில் அடிப்படைவாத அரசியல் கட்சியொன்று செய்யக்கூடாத விடயங்களை செய்து வருவதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் குற்றம் சுமத்தியுள்ளார்.
“அடிப்படைவாத அரசியல் கட்சியின் குழுவொன்று வடக்கில் மதஸ்தலங்களை குறிவைத்து தேவையற்ற விடயங்களை செய்து வருகின்றது. ஆனால் அவை ஒரு நாட்டில் இடம்பெறக்கூடாத விடயங்கள்.”
“நிலையான நாட்டிற்கு ஒரு வழி” என்ற தொனிப்பொருளில் ஜூலை 6 ஆம் திகதி ஜனாதிபதி ஊடக மையத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.
வடக்கு கிழக்கில் காணிகளை வழங்கும் போது யாரையும் மகிழ்விக்கும் நோக்கில் காணி வழங்கப்படுவதில்லை. அவை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன என இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
“இது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட அரசாங்கம் ஒரு குழுவையும் நியமித்துள்ளது. இதுவரை வடக்கில் 80% வீதமான காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. யாரையும் மகிழ்விப்பதற்காக இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதில்லை. ஆனால் ஒரு அரசாங்கம் என்ற வகையில் முறையான விசாரணைக்குப் பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.”
ஒவ்வொரு ஆண்டும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் தயாரிக்கப்படுவதாக தெரிவித்த இராஜாங்க அமைச்சர், இதன்போது பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் குற்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுவதாக சுட்டிக்காட்டினார்.
“இந்த மதிப்பீட்டின் அடிப்படையில், தேசிய பாதுகாப்பு தொடர்பான அடுத்த நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்கும்.”
2009 ஆம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த பின்னர், பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் எண்ணிக்கையில் மாற்றங்களைச் செய்ததாகவும், கடந்த காலங்களில் பாதுகாப்புப் படைகளுக்கு புதிய ஆட்சேர்ப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை என்றாலும், எதிர்காலத்தில் குறிப்பிட்ட வரம்புகளுக்குள் ஆட்சேர்ப்பு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.
வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேசிய மாணவர் படையணிக்கு 20% உறுப்பினர்களை சேர்த்துக்கொள்ளும் அரசாங்கத்தின் திட்டம் தொடர்பிலும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் வெளிப்படுத்தியுள்ளார்.
“சமூக பாதுகாப்புக்காக அவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு பகுதியிலும் சமூக புலனாய்வு பிரிவாக அவர்களை பணியமர்த்துவதற்கான பிரிவுகளை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.”