இலங்கையின் வடக்கடலில் கடற்படைக்கு சொந்தமான கப்பல் இந்தியக் கப்பலுடன் விபத்துக்குள்ளானதில் கடலில் விழுந்த தென்னிந்திய மீனவர் ஒருவரின் சடலத்தை தோண்டியெடுத்து மீண்டும் பிரேத பரிசோதனை மேற்கொள்ளுமாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
ஒரு மாதத்திற்கு முன் உயிரிழந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த ஆர். ராஜ்கிரணின் பிரேத பரிசோதனை அறிக்கை நவம்பர் 24 ஆம் திகதி நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.
முதலில் இலங்கை அதிகாரிகளால் சுடப்பட்டதோடு, பின்னர் வேண்டுமென்றேத தமது கணவரின் படகு இலங்கை கடற்படை கப்பலால் தாக்கப்பட்டதாகவும் குற்றம்சாட்டி, முப்பது வயதான மீனவரின் மனைவி ஆர். பிருந்தா தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன், உடலை தோண்டி அதே இடத்தில் பிரேத பரிசோதனை செய்ய புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டார்.
மனுதாரர் நியாயமான சந்தேகத்தை எழுப்பும்போது அதுத் தொடர்பில் அவதானம் செலுத்துவது அரசின் கடமை என நீதிபதி குறிப்பிட்டார்.
சடலத்தை தோண்டும்போதும், பிரேதப் பரிசோதனையின் போதும் மனுதாரர் சார்பில் முன்னிலையாக, ஓய்வுபெற்ற தடயவியல் வைத்திய பேராசிரியர் ஒருவரை நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
வழக்கை நவம்பர் 24ஆம் திகதிக்கு ஒத்திவைத்த நீதிமன்றம், நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்து அதன் நகலை மனுதாரர் தரப்பு சட்டத்தரணியிடம் ஒப்படைக்க உத்தரவிட்டது.
மனுதாரர் தனது கணவரின் மரணம் குறித்து விசாரணை நடத்தவும் எதிர்பார்க்கிறார். இவரது கணவர் ராஜ்கிரண், எஸ். சுகந்தன் மற்றும் ஆரோக்கியம் சேவியரும் ஒக்டோபர் 18ஆம் திகதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான படகில் கடலுக்குச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
சர்வதேச கடல் எல்லையை தாண்டி இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசித்ததாக கூறி இலங்கை கடற்படையின் கப்பலினால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அதிகாரிகளிடம் இருந்து மீனவர்கள் தப்ப முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைப் பெருங்கடலுக்குள் நுழைந்த இந்தியக் கப்பல் கோவிலான் கலங்கரை விளக்கத்திற்கு வடமேற்கே கடற்படைக் கப்பல்களை கண்டு அஞ்சி தப்பிச் சென்றதாகவும், இலங்கைக் கடற்பரப்பில் கடற்படை கப்பல் ஒன்றுடன் மோதி மூழ்கியதாகவும் இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
ஆனால் ராஜ் கிரனை சுட்டதாகவும், படகில் அவர் மயங்கி விழுந்ததாகவும், , சம்பவ இடத்திலிருந்து இரண்டு கடல் மைல் தொலைவில் இருந்த பல மீனவர்கள் தெரிவித்ததாக கிரணின் மனைவி பிருந்தா கூறியுள்ளார். ஏனைய இரண்டு மீனவர்களும் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ராஜ் கிரணின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. பின்னர், உடல் இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஆனால் பிரேத பரிசோதனை சான்றிதழ் இன்னும் ஒப்படைக்கப்படவில்லை.
இந்திய அதிகாரிகளால் சடலம் கோட்டைப்பட்டினம் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆனால், உடலை வீட்டுக்கு எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதி அளிக்காததால், மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது.
சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் வழங்கப்பட்ட தனது கணவரின் சடலத்தின் பல புகைப்படங்களை ஆராய்ந்ததாகவும், உடலில் காயங்கள் இருப்பதை உறுதி செய்ததாகவும் ஆர்.பிருந்தா நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்திய மீன்பிடிக் கப்பலின் மீது இலங்கை கடற்படையின் படகு மோதியதில், தங்களின் இளம் தொழில்முறை சக ஊழியர் கொல்லப்பட்டதாகக் கூறி, தாக்குதலைத் தடுக்க இந்திய அரசு தலையிடக் கோரி கடந்த மாதம் தமிழக மீனவர் சங்கங்கள் போராட்டம் நடத்தின.