பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் புதிய விதிமுறைகளுக்கு நீதிமன்றம் தடை

0
Ivory Agency Sri Lanka

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் பிறப்பிக்கப்பட்ட ”கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” அமுல்படுத்துவதை இடைநிறுத்தும் வகையில் உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜனாதிபதியின் உத்தரவு அமுல்படுத்தப்படுவதனை தடுக்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு ஊடகவியலளார்கள் சிலரும், மனித உரிமை செயற்பாட்டாளர்களும் நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்திருந்தனர்.

மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் கலாநிதி பாக்கியசோதி சரவணமுத்து, ஊடகவியலாளர்களான லக்னாத் ஜயகொடி, காவிந்தியா கிறிஸ்டோபர் தோமஸ் மற்றும் செயற்பாட்டாளர் ஷ்ரின் சரூர் ஆகியோர் தாக்கல் செய்த மனு நேற்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதோடு, இந்த தடை உத்தரவு எதிர்வரும் 24ம் திகதி வரையில் அமுலில் இருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மர்து பெர்னாண்டோ, யசந்த கோட்கொட மற்றும் அசல வெங்கப்புலி ஆகிய மூவர் அடங்கிய நீதியரசர்கள் குழாம் இந்த மனுவை பரிசீலனை செய்தது.

1979 ஆம் ஆண்டின் 48ஆம் இலக்க பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் மார்ச் 12 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவினால் வெளியிடப்பட்ட 2218/68 / 2021 இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக, சட்டத்தின் பத்தி 27 இன் கீழ், “கடும் அடிப்படைவாத கொள்கைகளிலிருந்து மீட்கும் உத்தரவு” என்ற தலைப்பில் ஒரு விதிமுறை அறிவிக்கப்பட்டது.

அந்த விதிமுறைகளின் கீழ், எந்தவொரு நீதித்துறை செயன்முறை அல்லது சான்றுகள் இல்லாமல் எவரையும் கைது செய்து புனர்வாழ்வு என்ற பெயரில் தடுத்து வைக்க முடியுமென மனுதாரர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

மேலும், தனிநபர் சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உரிமை மற்றும் அடிப்படை மனித உரிமைகளுக்கு கடுமையாக அச்சுறுத்தலாக அமைந்துள்ளதாக மனுதாரர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

அந்த விதிமுறைகள் அரசியலமைப்பின் பிரிவு 10, 11, 12.1, 12.2, 13.1, 13.2, 13.4, 13.5, 13.6, 13.1 (பி), 14.1 (ஈ) மற்றும் 17 ஆகியவற்றை நேடியாக மீறுவதால், இந்த மனுவை விசாரணைக்கு எடுப்பதோடு, தொடர்புடைய விதிமுறைகள், தங்களின் மற்றும் நாட்டின் மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாக அமைந்துள்ளதால், இந்த விதிமுறைகள் அமுல்படுத்தப்படுவதை தடுக்கும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட வேண்டும் என மனுதாரர்கள் கோரியுள்ளனர்.

புதிய விதிமுறைகள் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு முறையாக நிறைவேற்றப்பட்டதா என்றும் மனுவில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மனுதாரர்கள் சார்பில் விரான் கொரெயா, சுரேன் பெர்னாண்டோ, புலஸ்தி ஹேவமான்ன மற்றும் மஞ்சுள பாலசூரிய ஆகியோர் முன்னிலையாகினர், மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் நெரின் புல்லே மற்றும் அரச தரப்பு சட்டத்தரணி அவந்தி பெரேரா ஆகியோர் சட்டமா அதிபர் சார்பில் முன்னிலையாகினர்.

Facebook Comments