பௌத்தர்களும் இந்துக்களும் உரிமை கொண்டாடும் வன்னியில் உள்ள தொல்பொருள் தளத்தில் மேற்கொள்ளப்படும் மத நடவடிக்கைகளில் பௌத்தர்களுக்கு விதிக்கப்படாத நிபந்தனைகளை இந்துக்களுக்கு விதிக்க தொல்பொருள் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
முல்லைத்தீவு குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் நாளை (18) திகதி நடைபெறவுள்ள பொங்கல் விழா ஏற்பாட்டாளர்களுக்கு வவுனியா, மன்னார், முல்லைத்தீவு பிராந்திய தொல்லியல் உதவிப் பணிப்பாளர் ஆர். ஜி. ஜயதிலக, 7 நிபந்தனைகளை விதித்துள்ளதாகவும், எனினும் மூன்று நாட்கள் நடைபெறவுள்ள பௌத்த மத நடவடிக்கைகளுக்கு அவ்வாறான நிபந்தனைகளை விதிக்கவில்லை என மாகாண ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உதவிப் பணிப்பாளரினால் தாக்கல் செய்யப்பட்ட முறைப்பாட்டிற்கு அமைய, முல்லைத்தீவு பொலிஸார் நீதிமன்றில் தடை உத்தரவு கோரியதை அடுத்து இந்த நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பண்டிகையினால் முரண்பாடுகள் ஏற்படுமென அஞ்சி முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன், அரசியல் செயற்பாட்டாளர் பீற்றர் இளஞ்செழியன், கல்கமுவ சாந்தபோதி தேரர் மற்றும் அருண் சித்தார்த்தன் ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ள போதிலும்
பௌத்த தரப்பினருக்கு எந்த தடையும் விதிக்கப்பட்டதாக தெரியவில்லை.
பொங்கல் பண்டிகைக்கு கூடும் மக்கள் ஏனைய தரப்பினருக்கு இடையூறு விளைவிக்க வேண்டாம் என முல்லைத்தீவு பொலிஸாரின் ஊடாக உதவிப் பணிப்பாளர் ஆர்.ஜி.ஜயதிலக்க பொங்கல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளார்.
ஓகஸ்ட் 18, 19 மற்றும் 20 ஆகிய மூன்று தினங்களில் குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில் மாபெரும் பௌத்த வழிபாட்டு நிகழ்வுகள் நடைபெறவுள்ளதாக கூறும், குருந்தூர்மலை தொல்லியல் தளத்தில், நீதிமன்ற உத்தரவை மீறி பௌத்த விகாரையை நிர்மாணித்து வரும் கல்கமுவ சாந்தபோதி தேரர், நாளைய தினம் (18) குருந்தி சிலையை கோவிலாக மாற்ற பிரிவினைவாதிகள் திட்டமிட்டுள்ளதாக சமூக வலைதளங்கள் மூலம் பௌத்தர்களை அச்சமூட்டியுள்ளார்.
இனவாதத்தை தூண்டும் “பௌத்தர் எழுக!” எனும் வாசகத்துடன் பிரதேசத்தில் சுவரொட்டி ஒட்டப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
சர்ச்சைக்குரிய வகையில் பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டுள்ள குருந்தூர்மலை தொல்பொருள் தளத்தில் இந்து வழிபாடுகளுக்கு தடையில்லை என தொல்பொருள் திணைக்களம் அண்மையில் முல்லைத்தீவு நீதிமன்றத்திற்கு சட்டமா அதிபர் திணைக்களம் சார்பில் முன்னிலையான அரச சட்டத்தரண ஊடாக அறிவித்திருறந்தது.
பொங்கல் விழாவை நடத்துவதற்கு தொல்பொருள் திணைக்களம் தடை ஏற்படுத்தாது என, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக குருந்தூர்மலை ஆதிசிவன் அய்யனார் கோயில் அறங்காவலர் குழு சார்பில் முன்னிலையாகும் சட்டத்தரணி வி.எஸ் தனஞ்சயன் அண்மையில் தெரிவித்திருந்தார்.