அதிகாரத்தை பகிராமல் ஜனநாயகத்தை வலுப்படுத்த முடியும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய சட்டத்தரணி சாகர காரியவசம், ஜனாதிபதியிடம் இருந்து அதிகாரப் பகிர்வை நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை என தெரிவித்தார்.
நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்துவதையும், நாட்டின் ஜனநாயகத்தை பலப்படுத்துவதையுமே நாட்டு மக்கள் ஜனாதிபதியிடம் எதிர்பார்ப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இந்த நேரத்தில் நீங்கள் அதிகாரத்தை பகிர்வீர்கள் என இந்நாட்டு மக்கள் எதிர்பார்க்கவில்லை. இந்த நாட்டு மக்கள் உங்களிடமிருந்து எதிர்பார்ப்பது ஒன்றே ஒன்றுதான். அதுதான் இந்த நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி இந்த நாட்டின் ஜனநாயகத்தை வலுப்படுத்துவீர்கள் என்ற விடயம் மாத்திரமே”
நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தினால் நாட்டின் ஜனநாயகம் எவ்வாறு வலுப்பெறும் என்பதை அவர் விளக்கவில்லை.
ஓகஸ்ட் 9 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்வை சந்தித்து அதிகாரப் பகிர்வு தொடர்பில் தீர்மானம் எடுக்குமாறு சவால் விடுத்திருந்தார்.
“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் உள்ள அனைவரும் – இந்தப் பக்கத்தில் உள்ளவர்கள் மாத்திரமல்ல, அந்தப் பட்டியலில் உள்ளவர்களும் மஹிந்த ராஜபக்ச தலைமையில் கூடி தீர்மானம் எடுக்க வேண்டும்”
நாடு பொருளாதார ரீதியாக வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், அதிகாரப் பகிர்வு போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாட வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் ஜனாதிபதியிடம் மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.
“நாங்கள் அவற்றைப் பற்றி விவாதிப்பதற்கு முன், நாடு பொருளாதார ரீதியாக வலுவாகவும் நிலையானதாகவும் ஆனபின்னர், ஒரு நாடு என்ற வகையில் ஏனைய விடயங்கள் பற்றி விவாதிக்க முடியும்.”