உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் பலமான நாடுகளின் புலனாய்வுக் குழுக்களுக்கு வழங்கியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் முன்னிலையில் கூறப்பட்ட அறிக்கைகளை தமக்கு வழங்குமாறு இலங்கை கத்தோலிக்க தலைமைத்துவம் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஒக்டோபர் 6ஆம் திகதி அனுப்பிய கடிதத்தில், ஜேர்மன் ஊடக நிறுவனமான ‘Deutsche Welle’இல் தகவல் வெளிவரும் வரையில் தாமோ அல்லது நாட்டு மக்களோ இது பற்றி அறிந்திருக்கவில்லை என இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை தெரிவித்துள்ளது.
“மத்திய புலனாய்வு பணியகம் (FBI), பிரித்தானிய பொலிஸார், அவுஸ்திரேலிய, இந்திய, சீனா மற்றும் பாகிஸ்தான் இரகசிய விசாரணை குழுக்கள் தாக்குதல் குறித்து அறிக்கைகளை வழங்கியுள்ளன,” என அவர் செவ்வியில் கூறியிருந்தார்.
சர்வதேச ஆய்வு அறிக்கைகளின் நகல்களை தங்களுடன் பகிர்ந்து கொண்டால் பாராட்டுவோம் எனக் குறிப்பிட்டு, 12 ஆயர்கள் மற்றும் இரண்டு உதவி ஆயர்களின் கையொப்பத்துடன் இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை அனுப்பியுள்ள கடிதத்தில், உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து தொகுதிகளையும் கத்தோலிக்க ஆயர்கள் பேரவைக்கு வழங்கியமைக்காக ஜனாதிபதிக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“கத்தோலிக்க ஆயர்கள் பேரவையின் தலைவர் அருட்தந்தை ஹெரால்ட் அந்தனியின் வேண்டுகோளுக்கு அமைய, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அனைத்து 88 தொகுதிகளும் 48,909 பக்கங்களும் ஏப்ரல் 20, 2023 அன்று பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸினால், அருட்தந்தை ஹெரால்ட் அந்தனியிடம் ஒப்படைக்கப்பட்டன.”
அந்த தொகுதிகள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாக ஆயர்கள் பேரவை கூறுகிறது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜேர்மனியின் ‘Deutsche Welle’ ஊடக நிறுவனத்துடனான செவ்வியில், தான் கர்தினாலுடன் தொடர்பு கொள்ளப்போவதில்லை எனவும், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையுடன் கலந்துரையாடியதாகவும் தெரிவித்திருந்தார்.
திருச்சபையின் தலைமைத்துவத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதை சுட்டிக்காட்டும் அந்த கருத்துக்கு பதிலளித்த இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவை, பேராயர் கர்தினால் ஒரு தனிமைப்படுத்தப்பட்ட நபர் அல்ல எனவும், இலங்கை கத்தோலிக்க ஆயர்கள் பேரவையுடன் முழுமையாக இணைந்த மற்றும் மிக முக்கியமான உறுப்பினர் எனவும் குறிப்பிட்டிருந்தது.
“கர்தினால் கொழும்பு பேராயர் என்ற வகையில் தனிமைப்படுத்தப்பட்ட நபர் அல்ல, இலங்கையின் கத்தோலிக்க ஆயர் பேரவையுடன் முழுமையாக தொடர்புடைய மிக முக்கியமான உறுப்பினர் என்பதை இங்கு குறிப்பிட வேண்டும். எனவே, கர்தினால் குறித்து நீங்கள் கூறும் எந்தக் குறிப்பும் கத்தோலிக்க ஆயர் பேரவையின் ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்கும்.”