தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான துன்புறுத்தலை நிறுத்துமாறு சர்வதேச அழுத்தம்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையில் பணியாற்றும் தமிழ் ஊடகவியலாளர்கள் அரச அடக்குமுறையில் இருந்து விடுபட்டும் அச்சமின்றியும் செயலாற்ற அனுமதிக்கப்பட வேண்டும் என, அமெரிக்காவின் நியூயோர்க்கை தளமாகக் கொண்டு செயற்படும் ஊடகவியலாளர்களுக்கான பாதுகாப்பு அமைப்பு சி பி ஜே ( CPJ) அரசிடம் வலியுறுத்தியுள்ளது.

செய்தி சேகரிப்பில் ஈடுபட்ட இரண்டு தமிழ் ஊடகவியலாளர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக இலங்கை அரசு கைவிட வேண்டும் என்று சி பி ஜே கோரியுள்ளது.

“இலங்கை அதிகாரிகள் உடனடியாக தமிழ் ஊடகவியலாளர்களான சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோர் மீதான அனைத்து அடக்குமுறைகளையும் கைவிட்டு, அவர்கள் சுதந்திரமாக செய்தி சேகரிப்பில் ஈடுபடுவதை உறுதி செய்ய வேண்டும்” என சி பி ஜே அமைப்பின் ஆசிய நிகழ்ச்சித் திட்டங்களுக்கான ஒருங்கிணைப்பாளர் பெஹ் லி யீ தெரிவித்துள்ளார். ”மனித உரிமைகள் விடயங்கள் தொடர்பிலும் அது மீறப்படும் போது தமது சமூகத்தின் மீது ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பிலும் செய்திகளை சேகரித்து வெளியிட்டு வரும் தமிழ் செய்தியாளர்களை இலக்கு வைத்து தொடர்ச்சியாக துன்புறுத்தும் அரசின் நீண்டகால நடவடிக்கைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மட்டக்களப்பிலுள்ள சசிகரன் புண்ணியமூர்த்தி மற்றும் பாலசிங்கம் கிருஷ்ணகுமார் ஆகியோரின் வீடுகளுக்குச் சென்ற பொஸார் அவர்களைத் தனித் தனியாக விசாரித்துள்ளனர். கடந்த ஒக்டோபர் மாதம் 8ஆம் திகதி இடம்பெற்ற போராட்டம் ஒன்று தொடர்பில் செய்தி சேகரித்து வெளியிட்டமை தொடர்பாக அவர்களிடம் விசாரணைகள் நடத்தப்பட்டதாக, செயற்பாட்டுக் குழுவான ஜே டி எஸ் (JDS) அமைப்பை மேற்கோள் காட்டி சி பி ஜே தெரிவித்துள்ளது.

இந்த இரு சுயாதீன ஊடகவியலாளர்களும் மைலத்தமடு, மாதவணைப் பகுதியில் மேய்ச்சல் நிலங்களை அரச ஆதரவுடன் வலிந்து ஆக்கிரமித்துள்ள சிங்கள மக்களால் தமது வாழ்வாதாரங்கள் கடுமையாகப் பாதிக்கப்படுகிறது எனக் கூறி கால்நடை விவசாயிகள் முன்னெடுத்த போரட்டம் குறித்து செய்தி சேகரிக்கச் சென்றிருந்தனர். அவர்களின் போராட்டாம் இப்போது இரண்டு மாதங்களுக்கும் மேலாகத் தொடர்கிறது

சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர் அந்த போராட்டங்களின் போது செய்தி சேகரிக்கச் சென்ற அதேநாளில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் மட்டக்களப்பிற்கு விஜயம் செய்திருந்தார். அந்த இரு நிகழ்வுகள் குறித்த செய்திகளை உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகங்களுக்கு அளிப்பதற்காக அந்த இருவரும் அந்த இடங்களுக்குச் சென்றிருந்தனர். இந்நிலையில், அவர்களது வீடுகளுக்குச் சென்ற பொலிஸ் அதிகாரி அவர்களின் தனிப்பட்ட மற்றும் ஊகத்துறையின் பின்புலம் ஆகியவற்றிற்கு அப்பாற்பட்டு அந்த போராட்டத்தில் என்ன நடந்தது என்பது குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளார் என்கிறது சி பி ஜே அமைப்பு.

விசாரணையின் முடிவில் அவர்கள் தெரிவித்த விடயங்களை வாக்குமூலமாக எழுதி அதில் கையெழுத்திடுமாறு அந்த பொலிஸ் அதிகாரி வலியுறுத்தியுள்ளார். மேலும், அவர்கள் இருவரும் கால்நடை விவசாயிகள், அரசியல்வாதிகள், செயற்பாட்டாளர்கள் ஆகியோருடன் அந்த போராட்டம் தொடர்பிலான குற்ற விசாரணையில் அவர்களுடன் பெயரிடப்பட்டுள்ளனர் என்று கூறி, இருவரும் நவம்பர் மாதம் 17ஆம் திகதி ஏறாவூர் நீதவான் நீதிமன்றத்தில் பிரசன்னமாக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

எனினும், சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமாருக்கு எழுத்துமூலமான அழைப்பாணையோ அல்லது அவர்கள் மீதான குறிப்பிட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்த பொலிஸ் அறிக்கையோ அளிக்கப்படவில்லை என்று சி பி ஜே கூறியுள்ளது.

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போர் முடிவிற்கு வந்தாலும் பெரும்பான்மை சிங்கள மற்றும் சிறுபான்மை தமிழ் மக்களிடையே இன முரண்பாடுகள் தொடர்வதாக தனது அறிக்கையில் சி பி ஜே சுட்டிக்காட்டியுள்ளது.

“நாட்டில் தமிழர்கள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுவதை எதிர்கொள்கின்றனர்”.

கடந்த நவம்பர் 4ஆம் திகதி அன்று அந்த இரு ஊடகவியலாளர்களும் பௌத்த பிக்கு ஒருவரின் “தமிழர்களை துண்டு துண்டாக வெட்டுவேன் என்று அச்சுறுத்தும் காணொளி தொடர்பில் தம்மிடம் இருக்கும் ‘மூலாதார காணொளிகளை’ தம்மிடம் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிமன்றம் ஒன்று கட்டளையிட்டிருந்தது. மேலும் அந்த பிக்குவின் நடவடிக்கைகள் குறித்து சுயாதீனமாக அந்த செய்தியாளர்கள் முன்னெடுத்த புலன் விசாரணை குறித்து தனியாக ஒரு வாக்குமூலத்தை அளிக்க வேண்டுமெனவும் பொலிஸார் உத்தரவிட்டுள்ளதாக அறிய முடிகிறது.

இதையடுத்து நவம்பர் மாதம் 7ஆம் திகதி, சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமார் ஆகியோர், மட்டக்களப்பிலுள்ள பிரதேச குற்றப் புலனாய்வு அலுவலகத்திற்குச் சென்று தம்மிடமிருந்து காணொளி ஆதாரங்களை பொலிஸாரிடம் அளித்தனர். பின்னர் பொலிஸார் அவர்களிடம் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாக விசாரணையை முன்னெடுத்தனர். அதில் அவர்களின் செய்தி சேகரிப்பு மற்றும் எந்தெந்த ஊடகங்களுடன் அந்த காணொளியை பகிர்ந்து கொண்டார்கள் போன்றா கேள்விகள் கேட்கப்பட்டன என தனது அறிக்கையில் கூறியுள்ள சி பி ஜே, அவர்கள் மீதான விசாரணைகளை உடனடியாக அரசு கைவிட வேண்டும் எனவும் கோரியுள்ளது. சசிகரன் மற்றும் கிருஷ்ணகுமார் இருவரும், அண்மைய இந்த சம்பவமானது, கால்நடை விவசாயிகள் மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலையில் இருக்கும் மக்கள் குறித்த செய்திகளை தாங்கள் வெளியிடாதவாறு நசுக்கும் நடவடிக்கையின் மற்றொரு வடிவமே என சி பி ஜேயிடம் கூறியுள்ளனர்.

இந்த விடயங்கள் தொடர்பில், சி பி ஜே பொலிஸார் தரப்பு கருத்துக்களைப் பெற முயன்ற போதும் அது கிடைக்கப்பெறவில்லை என தெரிவித்துள்ளனர்.

கடந்த ஓகஸ்ட் 22 அன்று, அரச ஆதரவில் மட்டக்களப்பில் நில ஆக்கிரமிப்பில் பெரும்பான்மையின மக்கள் ஈடுபடுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்தபோது, அது தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற போது சுமார் 50 சிங்கள மக்கள் அவர்களை சூழ்ந்து கொண்டு அவர்களை தடுத்து நிறுத்தி பிடித்து வைத்திருந்தனர் என சி பி ஜே அறிக்கை கூறுகிறது.

“இந்த சம்பவம் தொடர்பில் சந்தேகத்திற்குரிய நபர்கள் யாரும் நவம்பர் 8 ஆம் திகதி வரை விசாரிக்கப்படவில்லை” என்று கிருஷ்ணகுமார் சி பி ஜேவிடம் கூறியுள்ளார்.

இதேவேளை நவம்பர் மாதம் 9ஆம் திகதி அங்குள்ள கால்நடை விவசாயிகளை நேரில் சந்தித்து நிலப்பிரச்சினை தொடர்பாக அவர்களுடன் உரையாடுவதற்காக சென்ற ஊடகவியலாளர்கள் குழு ஒன்று காலை 10 மணி அளவில் மயிலத்தமடுவில் பொலிஸாரால் தடுத்து நிறுத்தப்பட்டதாக, ஊடகவியலாளர் குழு ஒன்று பொலிஸ் மா அதிபருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளனர். எனினும் வேறு சிலர் அங்கு செல்வதற்கு அனுமதிக்கப்பட்டனர் எனவும் அவர்களது கடிதம் கூறுகிறது.

“கிழக்கு மாகாணத்தின் சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரை தொடர்பு கொள்ள முயன்ற போதும் பதிலேதும் இல்லை” என அந்த ஊடகவியலாளர்கள் தமது கடிதத்தில் தெரிவித்துள்ளனர். எனினும் கிழக்கு மாகாண சிரேஸ்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் உத்தற்கு அமைய தாங்கள் மயிலத்தமடுவிற்கு செல்ல அனுமதிக்க முடியாது என்று என ஹேரத் (60073) மறும் எச் எம் எம் வித்யாரட்ண (36739) ஆகியோர் மயிலத்தமடு சோதனைச் சாவடியில் மறித்து தெரிவித்ததாக அந்த ஊடகவியலாளர்கள் கூறியுள்ளனர்.

இதையே இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைகளுக்கான பணிப்பாளராக இருக்கும் லால் அவர்களும் கூறினார் என்கிறார்கள் அங்கு பயணித்த அந்த செய்தியாளர்கள், ஆனால் இருவருமே அதற்கான காரணத்தை விளக்கவில்லை எனவும் அவர்கள் பொலிஸ் மா அதிபருக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளனர்.

“இது அரசியல் யாப்பில் எமக்கு அளிக்கப்பட்டுள்ள கருத்துச் சுதந்திரத்தை மீறும் செயலாகும் என்று நாங்கள் நம்புகிறோம். சட்ட ரீதியாக ஒன்றுகூடி பயணிப்பதற்கு இருக்கும் உரிமையை மீறும் நடவடிக்கையாகும். மேலும் எமது அரசியல் யாப்பின்படி சட்டத்தில் அனைவருக்கும் பாதுகாப்பு மற்றும் புறக்கணிப்பின்மையும் அளிக்கப்பட்டுள்ளது. இவை மட்டுமின்றி எம்மை சட்ட விரோதமாக தடுப்பதும் அரசியல் யாப்பிற்கு எதிரானதாகும்”.

இந்த கடிதத்தில் ஊடகவியலாளர்கள் ருக்‌ஷன் ஃபெர்ணாண்டோ, காமந்தி விக்ரமசிங்க, ரேகா நிலுக்‌ஷி, கணேசன் ஜெகன், மெலனி மனேல் பெரேரா ஆகியோர் கையொப்பம் இட்டுள்ளனர்.

Facebook Comments