பாடசாலை மாணவர்களை பலவந்தமாக, உணவு தாள்கள் (Lunch sheets) மற்றும் செய்தித்தாள்களை உண்ணச் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ள, கண்டி பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையின் அதிபரை வலயக் கல்வி அலுவலகத்துடன் இணைக்க கல்வி அதிகாரிகள் ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளனர். .
நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை விடுத்த கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த, விசாரணையின் வசதிக்காகவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவித்தார்.
“மாகாண அதிகாரிகள் ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தின் அதிபரை கம்பளை வலயக் கல்வி அலுவலகத்திற்கு உடனடியாக நியமிக்க ஏற்பாடு செய்துள்ளனர் இது விசாரணைகளை எளிதாக்கும்.”
கண்டி, கம்பளை, ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தின் பாடசாலை வளாகம் பொலித்தீன் அற்ற பிரதேசமாக பராமரிக்கப்படுவதால், அதன் அதிபர், மதிய உணவை உணவுத்தாளில் சுற்றி எடுத்துவந்த தரம் 11 மாணவர்கள் குழுவிற்கு மதிய உணவுத் தாள்கள் மற்றும் செய்தித்தாள்களை பலவந்தமாக ஊட்ட முயற்சித்ததாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
“இந்த சம்பவம் 21 நவம்பர் 2023 அன்று மதிய உணவு நேரத்தில் நடந்தது.”
இது தொடர்பான தகவல் கம்பளை பிராந்திய கல்வி அலுவலகத்திற்கு மறுநாள் தெரிவிக்கப்பட்டதுடன், 22ஆம் திகதி காலை வரை சம்பவத்தை எதிர்கொண்ட ரம்புக்பிட்டிய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 16 வயதுடைய இரு மாணவர்கள் நாவலப்பிட்டி ஆரம்ப வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் நவம்பர் 22ஆம் திகதி நாவலப்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டதை வலியுறுத்திய அமைச்சர், கடந்த 22ஆம் திகதி பஸ்பாகே பிரதேச கல்விப் பணிப்பாளரினால் ஸ்தல பரிசோதனையும் மேற்கொள்ளப்பட்டதாக நாடாளுமன்றத்தில் மேலும் தெரிவித்தார்.
இலங்கையும் அங்கீகரித்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறுவர் உரிமைகள் சமவாயத்தின் அடிப்படையில், பாடசாலையில் ஒழுக்கத்தை பேணுவதில் உடல் ரீதியான தண்டனையிலிருந்து விலகியிருக்க வேண்டுமென்பதோடு,
சிறுவர்களின் மனித மாண்பைப் பாதுகாக்கும் வகையில் பாடசாலை ஒழுக்க நிர்வாகத்தை நடத்துவதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் அறிவிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கடந்த வருடம் கல்வி அமைச்சிடம் வலியுறுத்தியிருந்தது.
கல்வி அமைச்சினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பாடசாலையில் ஒழுக்கத்தைப் பாதுகாப்பதற்கான 12/16 சுற்றறிக்கையை ஆசிரியர்களின் ஓய்வறைகளில் காட்சிப்படுத்த வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.
சிறுவர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பது தொடர்பாக கல்வி அமைச்சினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு மாறாக செயற்படும் பாடசாலை முறைமைக்கு எதிராக பாரிய சமூக எதிர்ப்பு எழுந்துள்ளமை குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினும் பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளார்.
கல்வி அமைச்சின் சுற்றறிக்கைக்கு அமைய, சிறுவர் இம்சை மற்றும் அடிப்படை உரிமை மீறல்களின் கீழ் மாணவர்களை தண்டிக்கும் ஆசிரியர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்து ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியும்.
கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்றத்தில் விளக்கமளிக்கும் காணொளி இனைக்கப்பட்டுள்ளது.