மே தினத்தில் சுத்திகரிப்பு தொழிலாளர்கள் உரிமைகளுக்காக குரல் எழுப்புகிறார்கள்

0
Ivory Agency Sri Lanka

 

குப்பையில்லா தூய்மையான நாட்டை உருவாக்க கடுமையாக உழைத்து வரும் சுத்திகரிப்பு பணியாளர்களின் உரிமைகளுக்கு பொறுப்பானவர்கள் அக்கறையின்மையால் தொழிலாளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.

உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, அதற்கு முன்தினம் யாழ்ப்பாணம் ஊடக அமையத்தில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடாத்திய வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன், தொழிற்சங்க இயக்கங்களின் ஆதரவுடன் நாட்டின் உயரிய கதிரைக்கு வந்தவர்களும் கூட பின்னர் தொழிலாளர் உரிமைகளை மறுப்பதாக சுட்டிக்காட்டினார்.

“நாங்கள் தோல்விடைந்துள்ளோம். எங்களது உரிமைகள் மறுக்கப்படுகின்றன. எங்களது உரிமைகள் குறித்து மகஜராக கையளித்தாலும் அது நிராகரிக்கப்படுகிறது. இந்த நாட்டின் ஒவ்வொரு ஜனாதிபதிகளும் தொழிற்சங்கத்தில் இருந்துதான் வந்திருக்கின்றார்கள். எனினும் அவர்கள் நாட்டின் தலைவர்களாக வந்த பின்னர் தொழிலாளர்களின் உரிமைகளை மறுக்கின்ற சூழல் உருவாகிறது.” என்றார்.

பணியில் இருக்கும் சுத்திகரிப்பு தொழிலாளர்களுக்கு போதிய பாதுகாப்பு அங்கிகள் மற்றும் உபகரணங்களை அதிகாரிகள் வழங்காததால், எதிர்காலத்தில் தொழிலாளர்கள் நோய்வாய்ப்படும் அபாயம் இருப்பதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.

“தொழிலாளிகள் தமது வேலைகளை செய்கின்ற போது அவர்கள் பாதுகாப்பு அங்கிகளை பயன்படுத்த வேண்டும். எனினும் அது குறைவாக காணப்படுகிறது. எதிர்காலத்தில் தொழிலாளிகள் நோய்வாய்ப்படும் நிலைமை உருவாகிறது. வேலைகளை செய்கின்றபோது சீருடை, பாதணி, கையுறை அணிந்திருக்க வேண்டும். இதற்கான ஏற்பாடுகள் குறித்து அந்தந்த பிரதேசத்தில் பொறுப்பாளர்களாக செயற்படுபவர்கள் மற்றும் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.” என்றார்.

தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டியவற்றை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமாகாண சுத்திகரிப்பு தொழிலாளர்கள் சங்கத்தின் முன்னாள் தலைவர் ஆசிர்வாதம் ஜோன்சன் இந்த ஊடக சந்திப்பில் மேலும் தெரிவித்தார்.

“வீதிகளில் பணியாற்றும் மற்றும் பல இடங்களில் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் காணப்படுகின்றோம். ஒன்று அரச ஊழியர்கள், ஒன்று தனியார் ஊழியர்கள். அரசாங்கம் எமக்குத் தர வேண்டியதை தர வேண்டும். எங்கள் சம்பளம் உயர வேண்டும். பொருளாதார நெருக்கடியிலும் நாங்கள் தொழிலை முன்னெடுக்கின்றோம் எனினும் எங்கள் சம்பளம் உயரவில்லை.”

Facebook Comments