பொருளாதார நெருக்கடியை தீர்க்காமல் பாடசாலை நேரத்தை நீட்டிக்க எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

புத்தாண்டு விடுமுறையின் பின்னர் நாளாந்த பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலயத்தினால் நீடிக்க கல்வி அமைச்சின் தீர்மானத்திற்கு தமிழ் ஆசிரியர் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடியில் இந்த தீர்மானம் சரியானதல்ல என இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள கல்வியாண்டுக்கான நாளாந்த பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் பாடசாலை மாணவர்களுக்காக வழங்கப்படும் உணவுகள் இல்லாமல் செய்யப்பட்டுள்ள இவ்வேளையில் மாணவர்களை மேலும் ஒரு மணித்தியாலம் பாடசாலையில் தங்க வைப்பது மிகவும் கடினமான விடயம் என இலங்கைத் தமிழ் ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் புவனேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

நாட்டில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் மற்றும் பொருட்களின் விலைகள் சடுதியாக உயர்ந்துள்ள இவ்வேளையில் பிள்ளைகளின் போசாக்கு விடயத்தில் பெற்றோர்கள் அதிக அக்கறை காட்ட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலமாக நீடிப்பதன் மூலம் பிள்ளைகள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் ஆகியோரின் அன்றாட வாழ்க்கை முறையே மாறுவதுடன் போக்குவரத்துச் சிக்கலுக்கும் வழிவகுக்கும் என ஆசிரியர் சங்கத் தலைவர் சுட்டிக்காட்டினார்.

போக்குவரத்துச் செலவுகளும் அதிகரித்துள்ள இவ்வேளையில், மேலதிக செலவை ஏற்படுத்த முடியாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சிறுவர்களின் கல்வியில் அக்கறை காட்டுவது போல நடிக்க வேண்டாம்” என புவனேஸ்வரன் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.

ஏப்ரல் 18 முதல்

கொவிட் தொற்றுநோய் காரணமாக இவ்வருடம் பாடசாலைக் கற்கைகள் தாமதமாக ஆரம்பிக்கப்படுவதால் பாடத்திட்டத்தை நிறைவு செய்யும் நோக்கத்துடன் ஏப்ரல் 18 ஆம் திகதி ஆரம்பமாகும் கல்வியாண்டுக்கான நாளாந்த பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.

இதற்கமைய, 2022 ஆம் ஆண்டு கல்வியாண்டில் ஏப்ரல் 18 ஆம் திகதி முதல் டிசம்பர் 23 ஆம் திகதி வரையில் பாடசாலை நேரத்தை ஒரு மணிநேரம் நீடிக்குமாறு அரசாங்க பாடசாலைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், சனிக்கிழமைகளில் பாடசாலைகளை நடத்துவது குறித்தும் கல்வி அமைச்சு கவனம் செலுத்தி வருவதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Facebook Comments