ஐந்து வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசாங்கம் நீதி வழங்கவில்லை எனவும் இனவாதத்தையும் மதவாதத்தையும் தூண்டுவதாகவும் நாடாளுமன்றத்தில் பிரதான எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்திய, ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, அரசாங்கத்தின் பிரதான பங்காளியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் அண்மையில் நாடாளுமன்றத்தில் மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டதாக குற்றம் சுமத்தினார்.
“அந்த விவாதத்தில் மொட்டுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அமைச்சர்கள் மிகவும் கேவலமான முறையில் நடந்துகொண்டதை நாம் பார்த்தோம். கத்தோலிக்க மக்கள் இந்த நாட்டில் சிறுபான்மையினராக இருப்பதால், அந்த சிறுபான்மையினரை அவர்கள் விரும்பியதைச் செய்ய அனுமதிக்க முடியாது என்பதைத்தான் அந்த நபர்கள் தங்கள் விரல்களை நீட்டிக் கூறினர்.”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதம் ஏப்ரல் 24, 25 மற்றும் 26ஆம் திகதிகளில் நாடாளுமன்றத்தில் இடம்பெற்றது.
அன்றைய தினம் வெளிநாட்டில் இருந்தமையால் விவாதத்தில் கலந்து கொள்ளாத நாடாளுமன்ற உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை விட தேசத்திற்கு பல விடயங்கள் நடந்துள்ளதால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு தீர்வு காண்பது தொடர்பில் சிறுபான்மை சமூகம் பேசுவதற்கு சந்தர்ப்பம் வழங்க முடியாது என மொட்டுக் கட்சி பிரதிநிதிகள் நாடாளுமன்றத்தில் தெரிவித்ததாக கொழும்பில் நடத்திய ஊடக சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“இந்த நாட்டில் பெரும்பான்மையினருக்கு, அதிகமான விடயங்கள் நடந்துள்ளன. ஆனால் சிறுபான்மையினர் என்ற வகையில் இந்த வாய்ப்பை உங்களுக்கு வழங்க முடியாது, இந்த தீர்வு குறித்து எங்களால் பேச முடியாது, என அவர்கள் சொன்னார்கள்.” என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கத்தோலிக்க திருச்சபை தலைவர்கள் உட்பட நீதி கோருபவர்களுக்கு எதிராக ராஜபக்ச ஆட்சியிலும் இந்த அரசாங்கத்திலும் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அமைச்சர்கள் பௌத்த மதத்தை முன்னிலைப்படுத்தியமை நாடாளுமன்றத்தில் மூன்று நாள் விவாதத்தின் முக்கிய அம்சமாகும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகே, பௌத்த மதத் தலங்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை பௌத்தர்கள் ‘தூக்கிப்பிடிக்கவில்லை’ எனத் தெரிவித்திருந்தார்.
“இந்த விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த 150 மில்லியன் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. இந்த நாட்டில் நடந்த முதல் மதத் தாக்குதல் இதுவல்ல. தலதா மாளிகை தாக்கப்பட்டது. ஸ்ரீ மஹா போதி தாக்கப்பட்டது. அரந்தலாவில் பிக்குகள் கொல்லப்பட்டனர். ஆனால் நமது பௌத்த பக்தர்கள் அந்த சம்பவங்களை தூக்கிப்பிடிக்கவில்லை.”
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து ஏன் பேசுகிறீர்கள் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும், ஆரம்ப கைத்தொழில் இராஜாங்க அமைச்சருமான சாமர சம்பத் தசநாயக்க கேள்வி எழுப்பினார்.
“இந்த நாட்டில் வெடிகுண்டுகள் வெடிக்கவில்லையா? உயிர்த்த ஞாயிறு பற்றியே நாம் ஏன் பேசுகிறோம்? இது நாங்கள் செய்த காரியம் அல்ல. இதைச் செய்தவர்கள்தான் இந்த பிரேரணையை கொண்டு வருகிறார்கள்.”
இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் தசநாயக்க, தாம் எழுப்பிய பிரச்சினையை நியாயப்படுத்தும் வகையில், பௌத்த மத வழிபாட்டுத் தலங்கள் மீதான தொடர் தாக்குதல்களையும் நாடாளுமன்றத்தில் நினைவு கூர்ந்தார்.
நாடாளுமன்ற விவாதத்தின் போது கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித்தின் சமய விவகாரங்கள் விமர்சிக்கப்பட்டதை சுட்டிக்காட்டிய ஹெக்டர் அப்புஹாமி எம்.பி., மக்கள் பிரதிநிதிகளுக்கு அதற்கான தார்மீக உரிமை இல்லை என வலியுறுத்தினார்.
“அது மாத்திரமல்ல. தெளிவாக, கத்தோலிக்க திருச்சபையின் தலைவர் கர்தினாலின் மத நடவடிக்கைகளுக்காக கடுமையாக விமர்சிக்கப்பட்டார். இது எம்.பி.க்களுக்கு உரிமையுள்ள அல்லது அமைச்சர்களுக்கோ, எம்.பி.க்களுக்கோ தார்மீக உரிமையுள்ள விடயமல்ல.”
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்களிடம், மதத்திற்கும் அரசியலுக்கும் உள்ள வேறுபாடுகளை தெளிவாக புரிந்து கொள்ளுமாறு ஊடகங்கள் வாயிலாக அவர் கோரிக்கை விடுத்தார்.
“மதம் தனியான ஒரு இடத்தில், அரசியல் தனியான ஒரு இடத்தில். இது இரண்டு பகுதிகள். இதை தெளிவாகவும் சரியாகவும் அடையாளம் காணுங்கள்.”
2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி பல தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா ஹோட்டல்களை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்தியார் தேவாலயம், கொட்டாஞ்சேனை கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயம் மற்றும் மட்டக்களப்பில் உள்ள சியோன் தேவாலயம் ஆகியன இலக்கு வைக்கப்பட்டன.
ஏப்ரல் 21, 2019 அன்று நடந்த தொடர் குண்டுவெடிப்பில் 250-ற்கும் மேற்பட்ட பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
இராணுவப் புலனாய்வுத் தலைவர்களும், தாக்குதலுக்குப் பின்னர் ஆட்சிக்கு வந்த கோட்டாபய ராஜபக்சவும் இந்த படுகொலையின் மூளையாகச் செயற்பட்டார்கள் என்ற சந்தேகத்தை ஏற்படுத்தும் ஆதாரங்களுடன், பிரித்தானியாவின் சேனல் 4 கடந்த செப்டம்பரில் ஒளிபரப்பிய ஆவணப்படம் தொடர்பில் விசாரணை செய்வதற்கு, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால், உயர் நீதிமன்ற நீதிபதி ஐ.எம். இமாம் தலைமையில், அதே மாதம் நியமிக்கப்பட்ட மூவரடங்கிய குழு இன்னும் விசாரணை நடத்தி வருகிறது.