தமிழர்களிடம் இருந்து பலவந்தமாக கையகப்படுத்தப்பட்ட வன்னி நிலங்களை விடுவிக்காத அரசாங்கம் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் அரச காணிகளை தனியார் நிறுவனத்திற்கு வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
வவுனியா, கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 30,000 ஏக்கர் அரச காணியை கரும்புச் செய்கைக்காக தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில் முன்மொழிந்துள்ளார்.
ஜூன் 26ஆம் திகதி அமைச்சரவையின் அனுமதியைப் பெற்ற இந்தத் திட்டம் முதலீட்டுச் சபையின் கீழ் நடைமுறைப்படுத்தப்படுகிறது. இதற்கு மேலதிகமாக, வவுனியா நயினாமடு பிரதேசத்தில் சீனி தொழிற்சாலையை நிறுவுவதற்கு ஜனாதிபதி முன்மொழிந்துள்ளார். அதற்காக 492 ஏக்கர் காணி வழங்கப்படவுள்ளது.
1983ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வவுனியா வடக்கு மற்றும் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் பிரதேசங்களில் இருந்து பலவந்தமாக வெளியேற்றப்பட்ட தமிழர்கள் இன்னும் தமது சொந்த கிராமங்களுக்கு செல்லமுடியாத நிலைமை காணப்படுவதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அண்மையில் நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
1983-84 காலப்பகுதியில் முல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மேற்கு, சின்னக்குளம், முந்திரிகைக்குளம், அமையன்குளம், சாம்பன்குளம், தட்டாமலைக்குளம், சாம்பன்குளம், தட்டாமலைக்குளம், பறையனாறு வயல் நிலங்கள், சூரியநாராயனாறு வயல் நிலங்கள், வவுனியா வடக்கில் கொக்கச்சான்குளம், கச்சல் சமனல்குளம் ஆகிய பிரதேசங்களில் இருந்து மக்களை வெளியேறுமாறு இராணுவத்தினர் கூறினர். மோதல் இடம்பெறும் பகுதிaான உருவாக்கப்போவதாக இராணுவம் அறிவித்தது. தாம் வசித்த இடங்களை தமிழ் மக்கள் இழந்தனர்.”
தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருந்த மக்களை மீளக் குடியமர்த்துமாறு ராஜபக்ச அரசுக்கு சர்வதேச அழுத்தம் கொடுத்ததன் காரணமாகவே இந்த இடம்பெயர்ந்த மக்கள் முதல் முறையாக தமது கிராமங்களுக்குச் செல்ல முடிந்தது.
“இந்த மக்கள் தமது காணிகளுக்குச் சென்ற போது அந்த காணிகள் மாவட்டத்திற்கு வெளியே உள்ள சிங்கள மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டிருந்தன. பல தசாப்தங்களாக பரம்பரை பரம்பரையாக பயிரிடப்பட்ட நிலங்கள் சட்டவிரோதமாக கையகப்படுத்தப்பட்டு மற்றவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.
“இன்றும் இந்த காணிகளுக்கான உரிமம் அவர்களிடம் காணப்படுகிறது” என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.