கடற்படையின் சோதனைச் சாவடியை விரிவுபடுத்துவதற்காக வடக்கில் தமிழ் மக்களுக்கு சொந்தமான தனியார் காணியை சுவீகரிப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட முயற்சியை அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளுடன் தமிழ் மக்கள் ஒன்றிணைந்து பின்வாங்க வைப்பதில் வெற்றி பெற்றுள்ளனர்.
யாழ்ப்பாணம், வலிகாமம் மேற்கு, சுழிபுரம், காட்டுப்புலம் பிரதேசத்தில் உள்ள தமிழர்களுக்குச் சொந்தமான காணியை அளவீடு செய்ய நில அளவைத் திணைக்கள அதிகாரிகள் இன்று (மே 30) வந்தபோது, அவர்களின் வாகனத்தை நிறுத்திய, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேசவாசிகள் நில அளவை செய்வதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
தமக்கு கிடைத்துள்ள அறிவுறுத்தல்களின் பிரகாரம் காணி அளவீடு செய்வதை நிறுத்த முடியாது எனவும், காணி அளவீடு தொடர்பில் உள்ள ஆட்சேபனையை தமது மேலதிகாரிகளுக்கு அறிவிக்குமாறும் அளவீடு திணைக்கள அதிகாரி தமிழ் மக்களின் பிரதிநிதிகளுக்கு அறிவித்துள்ளார்.
இதன்போது இலங்கைத் தமிழ் அரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன், நில அளவைத் திணைக்கள அதிகாரிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நில அளவீடு தொடர்பாக மக்களின் எதிர்ப்பைத் தெரிவித்தார்.
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பேச்சாளர், சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ், காணி அளவீட்டிற்கு எதிர்ப்பை தெரிவிக்கும் கடிதத்தையும் அங்கு வந்திருந்த நில அளவை திணைக்கள அதிகாரியிடம் கையளித்துள்ளார்.
மக்களின் எதிர்ப்பினால் காணியை அளவீடு செய்யாமல் திரும்பிச் செல்லுமாறு நில அளவை திணைக்களத் தலைவர் காணியில் இருந்த அளவீடு அதிகாரிக்கு அறிவித்ததையடுத்து அவ்விடத்தை விட்டுச் சென்றதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வடக்கு, கிழக்கு ஆகிய இரு மாகாணங்களிலும் தமிழ் மக்களின் காணிகள் திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படுவதாக சட்டத்தரணி கனகரத்தினம் சுகாஸ் ஊடகவியலாளர்களிடம் தெரிவித்தார்.
“தமிழ் மக்கள் விழிப்பாக இருந்தால் மாத்திரமே, நாங்கள் போராடினால் மாத்திரம் தான் எங்கள் காணிகளை பாதுகாக்கலாம். தமிழர் தாயகத்தை பாதுகாக்கலாம். ஆகவே தமிழ் மக்கள் இந்த விடயத்தில் விழிப்போடு இருக்க வேண்டும். இந்த காணி ஆக்கிரமிப்பு யாழ்ப்பாணத்தில் மாத்திரமல்ல, கிளிநொச்சி, மன்னார், அம்பாறை, திருகோணமலை, முல்லைத்தீவு என எட்டு மாவட்டங்களிலும் திட்டமிட்டு மேற்கொள்ளப்படுகிறது. இன்றைய தினம் தற்காலிகமாக தடுத்து நிறுத்தியிருகின்றோம். தொடர்ந்து விழிப்போடு இருந்தால்தான் எமது மண்ணை பாதுகாக்கலாம்.”