தனிப்பட்ட பி.சி.ஆர் தவறு காரணமாகவா புதிய கொரோனா வகைகள் நாட்டிற்குள் வந்தன? (VIDEO)

0
Ivory Agency Sri Lanka

சீனாவால் தடைசெய்யப்பட்ட இலங்கையில் உள்ள ஒரு பிரபலமான தனியார் வைத்தியசாலையின் கொரோனா தொற்றை கண்டறியும், தவறான ஆய்வக சோதனைகள் நாட்டில் கொடிய தொற்றுநோய்கள் பரவ வழிவகுக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அறிக்கைகளின் துல்லியத்தை கேள்விக்குள்ளாக்கி, ஜூலை 13 முதல், நவலோக வைத்தியசாலையினால் வழங்கப்படும் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை அறிக்கைகளை இனி ஏற்றுக்கொள்ளப் போவதில்லையென சீனா அறிவித்திருந்தது.

குறித்த வைத்தியசாலையினால் எதிர்மறை என வழங்கப்பட்டிருந்த பலர் சீனாவில் வைத்து மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் தொற்றுக்குள்ளாகிய நிலையில், சீனா இந்த தீர்மானத்தை எடுத்திருந்தது.

சீனா இந்த விடயத்தை அறிவிக்கும் வரை, இந்த தவறு குறித்து இலங்கை சுகாதார அதிகாரிகள் அறியாமல் இருந்தமை ஆச்சரியமளிப்பதாகவும், இது தொடர்பில் அலட்சியமாக செயற்பட்ட இலங்கை கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கும் அரச சுகாதார பிரதிநிதிகளுக்கு எதிராக உடனடியாக விசாரணை நடத்தப்பட வேண்டுமெனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நவலோக வைத்தியசாலையில் இருந்து பெறப்பட்ட பி.சி.ஆர் மற்றும் ஐ.ஜி.எம் பிறபொருளெதிரி பரிசோதனை அறிக்கைக்கு அமைய, எதிர்மறையான அறிக்கைகளுடன் அண்மையில் இலங்கைக்குள் நுழைந்தவர்கள், பின்னர் சீனாவிற்கு திரும்பியதும் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளில் கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டதாக கொழும்பிலுள்ள சீன தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றின் ஊடாக அறிவித்திருந்தது.

எவ்வாறெனினும் ஏனைய ஆறு தனியார் ஆய்வகங்களின் பி.சி.ஆர் அறிக்கைகளை தொடர்ந்து ஏற்றுக்கொள்வதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.

அரச ஆய்வகங்களை புறக்கணித்துவிட்டு, தனியார் நிறுவனங்களுக்கு பி.சி.ஆர் சோதனைகளை மேற்கொள்வதற்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி “பணம் சம்பாதிக்கும் நடவடிக்கை” என்பதால், நாட்டை விட்டு வெளியேறுபவர்களிடையே மாத்திரமன்றி, நாட்டிற்குள் நுழையும் நபர்களிடமும் தொற்றுநோயின் அபாயத்தை அதிகரித்துள்ளதாக, இலங்கையில் ஆய்வக நிபுணர்களை உள்ளடக்கிய முன்னணி அமைப்பு எச்சரித்துள்ளது.

“வெளிநாட்டிலிருந்து வருபவர்கள் அல்லது வெளிநாட்டில் இருந்து வரும் எவருடைய மாதிரிகளும் இலங்கையில் உள்ள அரச ஆய்வகங்களுக்கு அனுப்பப்படுவதில்லை, இந்த சோதனைகளில் பெரும்பாலானவை அந்த ஆய்வகத்தாலேயே மேற்கொள்ளப்படுகின்றன. குறைந்தது பி.சி.ஆர் சோதனைகளையேனும் சரியாக மேற்கொள்ளாமல் மாறுபாடுகளை எவ்வாறு அடையாளம் காண முடியும்?” என அரச ஆய்வு கூட அதிகாரிகள் சங்க தலைவர் ரவி குமுதேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.

நவலோக வைத்தியசாலைக்கு சீனா விதித்த தடை இலங்கையின் முழு வைத்திய ஆய்வக சேவையையும் பாதிக்கும் ஒரு “கரும்புள்ளி” என அவர் வலியுறுத்தியுள்ளார்.

“சீனா போன்ற நாடுகளுக்கு இலங்கையின் ‘நவலோக’ என்றால் என்ன என்று தெரியுமா? வைத்திய ஆய்வு நிலையம் என்றால் என்ன? தேசிய வைத்தியசாலை என்றால் என்ன? என அவர்களுக்குத் தெரியாது. இலங்கையில் உள்ள ஆய்வக சேவையில் இதுபோன்ற தவறுகள் இடம்பெறுவதை அவர்கள் இப்போது உறுதிப்படுத்தியுள்ளனர். இலங்கையில் உள்ள முழு வைத்திய ஆய்வக சேவையிலும் இது ஒரு கருப்பு அடையாளமாகும்.”

அரசாங்கமே பொறுப்பு

நவலோக வைத்தியசாலையின் ஆய்வகம் மாத்திரம் இந்த நிலைமைக்கு பொறுப்பல்ல எனவும், ஆய்வக சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் ஆகியோரும் இதற்கு பொறுப்புக்கூற வேண்டுமென, வைத்திய நிபுணர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனா இந்த தவறை கண்டறியும் வரை இதனை கண்டறிய முடியாமல் போனமை குறித்து, தனியார் வைத்திய நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பணிப்பாளர், வெட்கப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

பி.சி.ஆர் சோதனையின் துல்லியத்தை சான்றளிப்பதற்காக கையொப்பமிடுவது நிபுணத்துவ அறிவுள்ள ஒருவரால் சரியான முறையில் மேற்கொள்ளப்படவில்லை என்பதை வெளிப்படுத்தியுள்ள, ரவி குமுதேஷ், சரிசெய்யுமாறு கேட்கப்பட்ட தவறை, “தரகுப் பணத்திற்காக மூடிமறைத்த” அதிகாரிகள் இந்த தவறுக்கு பொறுப்புக்கூற வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

“இவை அனைத்தும் தரகுப் பணத்தால் மூடிமறைக்கப்பட்டுள்ளன. ஆய்வக சேவைகள் பிரதி பணிப்பாளர் நாயகம் மற்றும் தனியார் வைத்திய நிறுவனங்களை ஒழுங்குபடுத்தும் பணிப்பாளர் தொடர்பில், கறும்புள்ளியை உருவாக்கியமை குறித்து ஒழுக்காற்று விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.

எதிர்காலத்தில் பி.சி.ஆர் சோதனை அறிக்கைகளை ஒரு வைத்திய ஆய்வக தொழில்நுட் நிபுணர் நேரடியாக கையொப்பமிட வேண்டுமென அவர் பரிந்துரைக்கிறார்.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் உள்ள ஆய்வகத்தில் சோதனைகள் மேற்கொள்ளப்படாமல் பயணிகளின் பி.சி.ஆர் சோதனைகள் தரகு பணத்திற்காக ஒரு தனியார் வைத்தியசாலைக்கு வழங்கப்பட்டுள்ளதாக, அரச ஆய்வுகூட அதிகாரிகள் சங்க தலைவர் ரவி குமுதேஷ் பலமுறை குற்றம் சாட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments