வடக்கின் போர்க்குற்றங்கள் தொடர்பிலான நேரடி சாட்சிகளை பிரித்தானிய பொலிஸ் கோருகின்றது

0
Ivory Agency Sri Lanka

 

இரண்டு தசாப்தங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற இரு கொலைகள் மற்றும் தமிழ் ஊடகவியலாளர் ஒருவரின் படுகொலை தொடர்பான விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்களிடம் பிரித்தானியாவின் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார் (Counter Terrorism Policing) உதவி கோரியுள்ளனர்.

2000களின் முற்பகுதியில் இலங்கை உள்நாட்டுப் போருடன் தொடர்புடைய போர்க்குற்றங்கள் பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் பயங்கரவாத எதிர்ப்பு பொலிஸார், தங்கள் விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்கள் தம்மை தொடர்பு கொள்ளுமாறு கோரியுள்ளனர்.

2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் இரண்டு பொது மக்கள் கொல்லப்பட்ட சம்பவம் மற்றும் ஊடகவிலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பிலேயே இந்த தகவல் உதவி கோரப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்தில் எம். கே. சிவாஜிலிங்கம் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகிய இரு நாடாளுமன்ற உறுப்பினர்களும் காயமடைந்தனர்.

இந்த சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பேரணியின் போது நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் 21 நவம்பர், 2023 அன்று தெற்கு லண்டனில் கைது செய்யப்பட்ட 60 வயது நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜன் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில், 2022 பெப்ரவரியில் கைது செய்யப்பட்ட 48 வயது நபரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு விசாரணைகளுக்கு நேரடி சாட்சியங்கள் அவசியம் எனத் தெரிவித்துள்ள கமாண்டர் டொமினிக் மர்பி (Dominic Murphy) அவ்வாறு தகவல்களை வழங்குபவர்களின் தனிப்பட்ட விபரங்கள் பாதுகாக்கப்படும் உறுதியளித்துள்ளார்.

“வழக்கைத் தொடர்ந்து கட்டமைக்க முடிந்தவரை நேரில் பார்த்த சாட்சியங்கள் தேவை. இலங்கையில் உள்நாட்டுப் போரின் போது நடந்த இச்சம்பவங்கள் குறித்து இதுவரை வெளிப்படுத்தப்படாத தகவல்களை அறிந்தவர்கள் இருக்கின்றமையை நாம் அறிவோம். அவர்கள் பொலிஸாரை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம். நாங்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு வழங்குவோம். உங்கள் தகவல் மிகவும் நம்பிக்கையுடன் கையாளப்படும்.”

குறிப்பாக 2000-களின் முற்பகுதியில் இலங்கையில் வாழ்ந்தவர்கள் அல்லது அந்த நேரத்தில் இலங்கையில் வசித்த உறவினர்கள் அல்லது நண்பர்களாக இருந்தவர்கள் அல்லது அன்றிலிருந்து வெளிநாட்டில் இருந்த, விசாரணைக்கு உதவக்கூடிய தகவல்களை அறிந்தவர்களை தொடர்புகொள்ள அதிகாரிகள் தயாராக இருப்பதாக டொமினிக் மர்பி குறிப்பிட்டுள்ளார்.

தகவல்களை வழங்க, போர் குற்றங்கள் குறித்த விசாரணை குழுவிற்கு நேரடியாக மின்னஞ்சல் அனுப்ப முடியும்: [email protected].

அல்லது +44 (0)800 789 321 என்ற இலக்கத்தின் ஊடாக நம்பிக்கையுடன் பொலிஸாரை அழைக்கவும்.

Facebook Comments