தொன்டமானின் இறுதிச் சடங்கில் சட்டத்தை மீற இடமளித்த பொலிஸாருக்கு பௌத்த அமைப்பு எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்று நோயிலிருந்து மக்களை பாதுகாக்க சுகாதார நிபுணர்கள் வழங்கிய ஆலோசனையை புறக்கணித்து, அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்னகளும் அவர்களின் குடும்பத்தினரும் செயற்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ள பௌத்த அமைப்பு ஒன்று, தனிமைப்படுத்தப்பட்ட சட்டத்தின் கீழ் மக்களுக்கு அபராதமாக விதிக்கப்பட்ட பணத்தை மீளத் கையளிக்க வேண்டுமெனவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

முன்னாள் அமைச்சர் அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதி அஞ்சலி நிகழ்வுகள் ஆறு நாட்கள் தொடர்ந்து இடம்பெறுவதற்கு வாய்ப்பளிக்கப்பட்டமை ஊடாக, மக்கள் ஒன்றுகூடவும் இடமளிக்கப்பட்டுள்ளதாகவும், இதன் ஊடாக தனிமைப்படுத்தல் சட்டம் மீறப்பட்டுள்ளதாகவும், ஹெல பொது சவிய அமைப்பு, மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு தனிமைப்படுத்தல் சட்டடங்களை மீறிய அமைச்சர்கள் உள்ளிட்ட அரசியல்வாதிகளுக்கு எதிராக சுகாதாரத் துறையினரோ, பொலிஸாரோ நடவடிக்கை எடுக்காமை தமக்கு ஆச்சரியமளிப்பதாக, அந்த அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் குறித்த கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த காலங்களில் தனிமைப்படுத்தப்பட்ட சட்டங்களை மீறியதாகக் கூறி ஏராளமானோர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகவும், தமது பிள்ளைகளின் பசியைப் போக்க கூலி வேலைக்குச் சென்றவர்களும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

தனிமைப்படுத்தப்பட்ட சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில், அந்த சட்டம் அனைவருக்கும் பாதிப்பினை ஏற்படுத்திவிடவில்லை என்பது முன்னாள் அமைச்சர் ஆறுமுகனின் இறுதி சடங்கு நிகழ்வுகளில் தெளிவாகியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் அமைப்பின் 12/1 இன் படி, சட்ட அமுலாக்கம், சட்ட செயற்பாடு மற்றும் சட்டத்தின் பாதுகாப்பு சமமாக இருக்க வேண்டுமென தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அவர் நினைவூட்டியுள்ளார்.

கடந்த காலத்தில் உயிரிழந்த ஒருவரின் பூதவுடலை ஒரு நாளேனும் வீட்டில் வைப்பதற்கோ அல்லது உயிரிழந்த தமது தந்தைக்கு இறுதி மரியாதையை செலுத்துவதற்கோ பிள்ளைகளுக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும், இதன் மூலம் சாதாரண மக்களுக்கு ஒரு தனிமைப்படுத்தல் சட்டமும், ஆளுங்கட்சியின் அமைச்சர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு ஒரு தனிமைப்படுத்தல் சட்டமும் செயற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஒரு நாடு – ஒரு சட்டம் என்ற கொள்கையுடன், 69 இலட்சம் வாக்குகளைப் பெற்று ஆட்சிக்கு வந்த தற்போதைய அரசாங்கம் அந்த வாக்குறுதியை நிறைவேற்றுவதற்கு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ள ஜவங்ச தேரர், அரசியல் பலம்படைத்தவர்களும், அவர்களின் அதிகாரிகளும் தன்னிச்சியையாக செயற்படுவதால், நாட்டின் அதியுயர் சட்டம் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்படுவதாகவும் வலியுறுத்தியுள்ளார்.

மேற்கூறிய காரணங்கள் அரசியலமைப்பின் 12/1ஆவது பிரிவின் ஊடாக பாதுகாக்கப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறியதாகவே தோன்றுவதாகவும், ஆகவே மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியதாக உத்தரவிடுமாறும், தனிமைப்படுத்தல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்களிடம் அறவிடப்பட்ட தண்டப் பணத்தை அவர்களிடமே மீள கையளிக்குமாறும், ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜனவங்ச தேரர் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Facebook Comments