பிராண்டிக்ஸ் மீது நிபந்தனைகளை விதிக்குமாறு உலக வங்கியிடம் கோரிக்கை

0
Ivory Agency Sri Lanka

தொற்றுநோய் அச்சுறுத்தலின்போது தொழிலாளர்களை ஆபத்தில் ஆழ்த்திய பிராண்டிக்ஸுக்கு கடன் வழங்கப்படுமாயின், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நிபந்தனைகளை விதிக்குமாறு உலக வங்கி விடுத்த வேண்டுகோளுக்கு சாதகமபனபதில் கிடைத்துள்ளதாக தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

சர்வதேச நாணய நிதியம் தற்போது பிராண்டிக்ஸுக்கு 50 மில்லியன் டொலர் கடனை வழங்குவது குறித்து பரிசீலித்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள இலங்கை வர்த்தகம், தொழில்துறை மற்றும் பொதுத் தொழிலாளர் சங்கத்தின் பிரதான மண்டபத்தில் ஏப்ரல் 8 வியாழக்கிழமை நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் நாட்டின் முன்னணி தொழிற்சங்கங்கள் இந்த விடயத்தை வெளிப்படுத்தியுள்ளன.

பிராண்டிக்ஸ் நிறுவனத்திற்கு விடுக்கப்பட்டுள்ள வேண்டுகோளின் ஒரு பகுதியாக, தொழிற்சங்க சுதந்திரத்திற்கான உரிமையை உறுதி செய்வதோடு, சுகாதார பாதுகாப்பை உறுதி செய்வதற்கான சுற்றுச்சூழல் மற்றும் சமூக திட்டத்தை ஏற்படுத்த வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளதாக சுதந்திர வர்த்தக வலைய தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

இந்த வருடம் மார்ச் மாத இறுதியில் ஏற்பட்ட கொரோனா பரவலுக்கு நிறுவனமே காரணம் என குற்றம் சாட்டி, உலக வங்கிக் குழுமத்தின் ஒரு பகுதியான சர்வதேச நாணய நிதியத்தில் தொழிற்சங்கங்கள் முறைப்பாடு செய்திருந்தன.

தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க பிராண்டிக்ஸின் தற்போதைய திட்டம் போதுமானதாக இல்லையென தொழிற்சங்கத் தலைவர்கள் சர்வதேச நாணய நிதியத்திடம் தெரிவித்துள்ளனர்.

“நாங்கள் பணியிடத்தின் ஆரோக்கியம் மற்றும் பாதுகாப்பு குறித்து மாத்திரம் கவலைப்படவில்லை, தொழிற்சங்கங்களில் சேர்வதற்கான உரிமையைப் பாதுகாப்பதும் முக்கியம். கொரோனா ஆலோசனைகளை மீறியமை குறித்து தொழிலாளர்கள் முறைப்பாடு செய்ய இயலாமை பிராண்டிக்ஸ் கொரோனா பரவலுக்கு நேரடியாக பங்களித்தது.
இது சர்வதேச தொழிலாளர் அமைப்பின் சி 87 மற்றும் சி 98 இல் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளை மீறுவதில் பிராண்டிக்ஸ் நிர்வாகத்தின் ஈடுபாட்டைப் பற்றி கடுமையான கேள்விகளை எழுப்புகிறது.”

தமது பிரச்சினைகள் தொடர்பில் கரிசனை கொண்டுள்ள சர்வதேச நாணய நிதியம், இந்த கடன் மதிப்பீட்டில் எழுப்பப்பட்ட பிரச்சினைகள் குறித்து அவதானம் செலுத்துவதாக பதிலளித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

“இந்த கடனைப் பற்றி விவாதிப்பதற்கான ஆரம்ப திட்டமிடப்பட்ட திகதியை நாணய நிதியம் ஒத்திவைத்துள்ளது.”

பிராண்டிக்ஸுக்கு கடன்களை வழங்கும்போது தொழிலாளர்களின் உரிமைகள் முழுமையாக மதிக்கப்படுவதை சர்வதேச நாணய நிதியம் உறுதி செய்ய வேண்டும் என முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சுதந்திர வர்த்தக வலைய தொழிற்சங்கங்கள் சர்வதேச நாணய நிதியத்தின் மூன்று அடிப்படை கோரிக்கைகளை முன்வைத்துள்ளன.

01. ஊழியர்கள் மீது இந்த விரிவாக்கத்தின் குறிப்பிட்ட தாக்கங்களை ஆராய்ந்து அவர்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்துதல்.
02. கையொப்பமிடப்பட்ட அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் தொழிலாளர் அமைப்புகளுடன் விவாதங்களை வெற்றிகரமாகவும் நல்ல நம்பிக்கையுடனும் தொடருதல்.
03. கடனைப் பெற்றுக்கொள்ள அதன் சுற்றுச்சூழல் மற்றும் சமூக செயல் திட்டத்தை திருத்துதல், தொழிலாளர் உரிமைகள் தொடர்பான செயல்திறன் தரம் 2ற்கு இணங்க உடல்நலம், பாதுகாப்பு மற்றும் பணியிடத்தில் கூட்டுறவு சுதந்திரம் ஆகியவற்றை உறுதி செய்தல்.

வியர்வை துளிகள் கூட்டமைப்பு, மனித விடுதலைக்கான அபிவிருத்தி அமைப்பு, இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை ஒன்றியம், வர்த்தக கைத்தொழில் தொழிலாளர் சங்கம் மற்றும் கப்பல் ஏற்றுமதியாளர் தேசிய ஒன்றியம் ஆகியன இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன.

ஆறு மாதங்களுக்கு முன்னர், இலங்கையில் கொரோனா தொற்றுநோயின் இரண்டாவது அலை ஆரம்பமானது. மினுவாங்கொடையில் உள்ள பிராண்டிக்ஸ் தொழிற்சாலையின் 1,400 ஊழியர்களில் 1,000ற்கும் மேற்பட்டவர்களுக்கு தொற்று ஏற்பட்டது.

சுகாதார மற்றும் பாதுகாப்பு அமைப்பின் குறைபாடுகள் குறித்து ஒரு சுயாதீன விசாரணையை ஆரம்பிப்பதாகவும், சுயாதீனமான மூன்று உறுப்பினர்களைக் கொண்ட குழு இதற்கென நியமிக்கப்பட்டுள்ளதாகவும், கண்டுபிடிப்புகள் மற்றும் அவதானிப்புகள் பகிரங்கப்படுத்தப்படும் எனவும், கடந்த வருடம் ஒக்டோபர் 19ஆம் திகதி பிராண்டிக்ஸ் தெரிவித்திருந்ததாகவும், எனினும் அறிவிப்பு வெளியாகி சுமார் ஆறு மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதுத் தொடர்பில் எவ்வித முன்னேற்றமும் இல்லை எனவும் தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன.

பிராண்டிக்ஸ் கொரோனா பரவல் ஆடைத் தொழிலாளர்களை நெருக்கடியில் ஆழ்த்தியுள்ளதாகவும், நாட்டின் பொருளாதாரத்தைத் தக்கவைக்கும் ஆடைத்துறை ஒவ்வொரு நாளும் ஆபத்தில் உள்ளதாகவும் தொழிற்சங்கங்கள் சுட்டிக்காட்டுகின்றன.

ஊழியர்கள் விடுக்கும் அபாயங்களை புறக்கணிப்பதாக பிராண்டிக்ஸ் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

செப்டம்பர் 2020 இல் கொரோனா பரவலுக்கு முன்னர், கொரோனா அறிகுறிகள் மற்றும் தனிமைப்படுத்தல் கோரிக்கைகைள முன்வைத்த தொழிலாளர்களை அவமதித்தமை, அவர்களின் கருத்திற்கு செவி சாய்க்காமை, தொற்று அறிகுறி காணப்பட்டவர்களை தொடர்ந்து பணிக்கு சமூகமளிக்குமாறு பணித்தமை, உதாரணமாக உணவகத்தில் காணப்பட்ட சுகாதார வசதிகளை அகற்றியமை, கொரோனா தொற்று எச்சரிக்கைகளை புறந்தள்ளி
1,400 தொழிற்சாலை தொழிலாளர்களுக்கு விருந்து வைத்தமை, விடுதிகளின் சமூக இடைவெளியை எளிதாக்குவதற்கு அல்லது மேம்படுத்துவதற்கான நடவடிக்கைகளை எடுக்க நிறுவனம் தவறியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் பிராண்டிக்ஸ் ஊழியர்களால் நிறுவனத்திற்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ளது.

Facebook Comments