ஸ்ரீலங்காவில் கொரோனா ஒழிப்பு, இராணுவமயமாக்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேசம் கரிசனை

0
Ivory Agency Sri Lanka

யுத்தக் குற்றங்களில் ஈடுபட்டார்கள் என குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவக் கட்டளைத் தளபதிகள், உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தல் எதுவும் வெளியிடப்படாமல், ஸ்ரீலங்காவில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளுக்கான தலைவர்களாக நியமிக்கப்பட்டுள்ளமை குறித்து சர்வதேசம் கவனம் செலுத்த வேண்டும் சர்வதேச மனித உரிமை அமைப்பொன்று வலியுறுத்தியுள்ளது.

தென்னாபிரிக்காவின் ஜோகானஸ்பேர்க்கை தளமாக கொண்ட சர்வதேச உண்மைக்கும் நீதிக்குமான செயற்றிட்டம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில், அனர்த்தமொன்றை எதிர்கொள்ளும் போது இராணுவத்தை முதன்மைப்படுத்தி மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் மனித உரிமைகளைப் போன்று, சட்டம் மற்றும் ஒழுங்கும் ஆபத்தை எதிர்நோக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொற்றை கையாளுவதற்கென உருவாக்கப்பட்ட தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவராக இராணுவத் தளபதியும் பதில் பாதுகாப்பு படைகளின் பிரதானியுமான லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா நியமிக்கப்பட்டுள்ளார்.

பாரிய மனித உரிமை மீறல்கள், குறிப்பாக நீதிக்கு புறம்பான கொலைகளுடன் தொடர்புபட்டமைக்கான நம்பத்தகுந்த ஆதாரங்கள் இருப்பதாக தெரிவித்து, இராணுவத் தளபதி மற்றும் அவரின் குடும்பத்தினர் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா இவ்வாண்டு தடைவிதித்திருந்தது.

ஷவேந்திர சில்வா போர்க் குற்றங்களில் ஈடுபட்டார் என அமெரிக்காவினால் குற்றஞ்சாட்டும் 2008 – 2009 காலப்பகுதியில் அப்போது பாதுகாப்புச் செயலாளராக இருந்த கோட்டபாய ராஜபக்சவிடமிருந்து அவர் நேரடியாகவே கட்டளைகளை பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.

ஜனாதிபதியுடன் ஒரே இராணுவ ரெஜிமெண்டில் பணியாற்றிய யுத்தக் குற்றம் சுமத்தப்பட்ட அவர், ஸ்ரீலங்காவில் கொவிட் 19 ற்கு எதிரான நடவடிக்கைக்கு தலைமை வகிப்பதன் ஊடாக, வெளிப்படைத்தன்மை, பொறுப்புகூறல் மற்றும் மேற்பார்வை ஆகியன தொடர்பில் கேள்விகளை அதிகரித்துள்ளதாக ஐ.ரி.ஜே.பி ஸ்ரீலங்காவின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா கூறியுள்ளார்.

தகவல்களுடனான விளக்கப் படத்துடன் கோவிட் 19 இன் பதில் நடவடிக்கையாக, ஸ்ரீலங்காவில் இராணுவ மயமாக்கல் என்ற தலைமையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுடன் கஜபா ரெஜிமெண்ட்டில் பணியாற்றியவர் என்ற அடிப்படையில் லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, அரசாங்கத்தின் அதிகாரமிக்க பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கொவிட் 19 தொடர்பான அவசர நிலைமையை கையாளும் போது எடுக்கப்படும் நடவடிக்கைகள், சட்டபூர்வதன்மை, முன் எச்சரிக்கை, பொருத்தம் மற்றும் பாரபட்சமற்ற வகையில் அமைய வேண்டும் என நீதிக்கு புறம்பான அல்லது ஏதேச்சை அதிகார கொலைகள் தொடர்பான ஐ.நாவின் விசேட அறிக்கையாளர் கூறியுள்ளதாகவும் ஐ.ரி.ஜே.பி ஸ்ரீலங்கா கூறியுள்ளது.

பொதுச் சுகாதார மற்றும் விநியோக ஒருங்கிணைப்பு நடவடிக்கைகளுக்கு பொறுப்பாக சிவில் சேவையில் அனுபவம் உள்ள நிபுணர்களே நியமிக்கப்பட வேண்டும் தவிர இராணுவம் அல்லவென யஸ்மின் சூக்கா குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது எனவும் மிகப் பெரிய அளவிலான நிதி மற்றும் பொருட்கள் அனைவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கொவிட் 19 பதில் நடவடிக்கைகள் தொடர்பில் கைது அச்சுறுத்தல் இன்றி கேள்விகளை எழுப்புவது அத்தியாவசியமானது எனக் குறிப்பிட்ட யஸ்மின் சூக்கா, கொரோனா நெருக்கடியானது, சிவில் சுதந்திரங்களை மேலும் அழிக்கும் ஒன்றாக இருக்க கூடாது என கூறியுள்ளார்.

சிறந்த பொதுச் சுகாதார நடவடிக்கைகள் தொடர்பில் மருத்துவ நிபுணர்களுக்கும் இராணுவத்தினருக்கும் இடையில் ஏற்கனவே மோதல்கள் ஏற்பட்டுள்ளதாகவும் ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா கூறியுள்ளது.

கொவிட் 19 பதில் நடவடிக்கைகளுக்கான தலைவராக இராணுவத் தளபதியை நியமித்துள்ளமை குறித்து அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளது எனவும் ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா மேலும் குறிப்பிட்டுள்ளது.

வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் முகாமைத்துவம் செய்தல், சுகாதர விநியோகங்கள், ஏனைய பொதுச் சேவைகள் ஆகியன புதிதாக உருவாக்கப்பட்ட கொவிட் 19 பரவலை தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தினால் நிர்வகிக்கப்படவுள்ளதாக ஸ்ரீலங்கா அரசாங்கம் கூறியுள்ளது.

கொரோனா நெருக்கடியின் போது நாடாவிய ரீதீயில் தடையின்றி உணவு விநியோகத்தை உறுதிப்படுத்தும் வகையில் ஜனாதிபதி விசேட செயலணி கடந்த மார்ச் மாதம் வெளியிடப்பட்ட வர்த்தமானி மூலம் உருவாக்கப்பட்டது.

தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்படாத ஜனாதிபதியின் சகோதரரான பெசில் ராஜபக்ஸ தலைமையிலான இந்த செயலணியில், ஜனாதிபதிக்கு நெருக்கமான பல ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரிகள் உள்ளடக்கப்ட்டுள்ளதாகவும் ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா கூறியுள்ளது.

சுகாதார நல மற்றும் சமூகப் பாதுகாப்பு நிதியத்தை கடந்த மார்ச் மாதம் 23 ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ உருவாக்கினார் எனவும் ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா குறிப்பிட்டுள்ளது.

நேரடி வைப்புக்கள், ஸ்தாபனங்கள் மற்றும் தனிநபர்களின் நன்கொடைகள் இந்த நியத்தில் இடப்படுகின்ற நிலையில், அந்த நிதியத்தின் பணிப்பாளர் நாயகமாக அவன்காட் ஊழலில் குற்றஞ்சாட்டப்பட்ட ஒய்வுபெற்ற இராணுவ அதிகாரி கே.பி. எக்கொடவெல நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா சுட்டிக்காட்டியுள்ளது.

எனினும் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அந்தக் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்ட கே.பி. எக்கொடவெல, ஜனாதிபதி பணியாளர்களின் பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளார் எனவும் யஸ்மின் சூக்கா தலைமையிலான ஐ.ரி.ஜே.பி.ஸ்ரீலங்கா மேலும் குறிப்பிட்டுள்ளது.

Facebook Comments