சடலங்களை கட்டாயம் எரிக்க வேண்டும் என்ற ஸ்ரீலங்காவின் தீர்மானத்தை கேள்விக்கு உட்படுத்தியது ஐ.நா

0
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றினால் உயிரிழப்போரின் உடல்களை கட்டாயம் தகனம் செய்ய வேண்டும் என்ற ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் தீர்மானம், சர்வதேச பரிந்துரைகளுக்கு முரணானது என ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தொற்று நோய் பரவுவதுடன் முஸ்லீம்களுக்கு எதிரான வெறுப்புணர்வு செயற்பாடுகளை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன எனவும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஐ.நா கேள்வி எழுப்பியுள்ளது.

சடலத்தை புதைப்பதற்கு முன்னர் வழங்கப்பட்ட அனுமதியை நான்காவது முறையாகவும் மேற்கொண்ட திருத்ததின் ஊடாக சுகாதார அமைச்சு இரத்துச் செய்துள்ளமை, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பரிந்துரைகளுக்கு முரணானது என ஜனாதிபதிக்கு எழுத்தியுள்ள கடிதத்தில் ஐ.நா சுட்டிக்காட்டியுள்ளது.

மதங்கள், சிறுபான்மையினர், சுகாதாரம் மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு செயற்பாடுகளில் மனித உரிமைகளை பாதுகாக்க வேண்டும் எனவும் நால்வர் அடங்கிய ஐ.நாவின் நிபுணர்கள் குழு , ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

கோவிட் 19 வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லீம்களின் சடலங்களை புதைப்பதற்கு ஸ்ரீலங்கா அதிகாரிகள் அனுமதிக்காமை குறித்து முஸ்லீம் சமயத் தலைவர்களும் உறவினர்களும் முஸ்லீம் அரசியல் தலைவர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

கடந்த மார்ச் மாதம் 31 ஆம் திகதி நீர்கொழும்பில் வைத்து உயிரிழந்த முஸ்லீம் ஒருவரின் சடலம், அவரது உறவினர்களின் அனுமதியுடனோ இல்லாமலோ தகனம் செய்யப்பட்ட பின்னர், நான்காவது முறையாகவும் சுகாதார அமைச்சு தனது வழிகாட்டல்களில் திருத்தம் செய்துள்ளதாக ஐ.நாவின் நிபுணர் குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எழுதிய 6 பக்க கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவரின் சடலத்தை பாதுகாப்பாக கையாளும் போது தொற்றை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவது தொடர்பாக உலக சுகாதார ஸ்தாபனம் உருவாக்கியுள்ள வழிகாட்டல்களுக்கு முரணாக சுகாதார அமைச்சின் வழிகாட்டல்கள் அமைந்துள்ளமை குறித்து கரிசனை கொண்டுள்ளோம்.

அத்துடன் வெவ்வேறு சமூகத்தினர், அவர்களில் மத மற்றும் கலாசார பழக்கவழக்கங்களை ஸ்ரீலங்காவின் சுகாதார அமைச்சு கருத்தில் எடுக்கப்படாமை மற்றும் அதனை பிரதிக்காமை குறித்து கவலை அடைவதாகவும் ஐ.நா நிபுணர்கள் குழு சுட்டிக்காட்டியுள்ளது.

அரசாங்கத்தின் தன்னிச்சையான தீர்மானங்கள்

இனங்களுக்கு இடையில் ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் இந்த தன்னிச்சையான தீர்மானங்கள், ஸ்ரீலங்காவில் வாழும் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதப் பிரிவினரின் அடிப்படை மனித உரிமைகளை சீர்குலைக்க வழிவகுக்கும் எனவும் நோயாளிகளை அடையாளம் காண்பதற்கு இடையூறாக அமையும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை எச்சரித்துள்ளது.

கோவிட் 19 தொற்றுக்கு உள்ளாகி உயிரிழப்பவர்களின் உடல்களை அகற்றும் விடயத்தில், தமது நெருங்கிய உறவினரின் இறுதிச் சடலங்குகளையும் புதைப்பதையும் முறையாக செய்ய முடியாது போகும் என்ற அச்சம் காரணமாக, கோவிட் 19 தொற்று ஏற்பட்டுள்ளமை தொடர்பில் தெரியப்படுத்துவதற்கு உறவினர்களும் அவர்களது சமூகமும் தயக்கம் காட்டக் கூடும் எனவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

இதுபோன்ற விதிமுறைகளைத் திருத்துவதற்கு சம்பந்தப்பட்ட அனைத்து இன மற்றும் மத சமூகங்கள் அதேபோன்று ஏனைய சுகாதார நிபுணர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்புடன் கலந்தாலோசித்து சம்பந்தப்பட்ட சரத்துக்களில் திருத்தம் செய்வதே சிறந்த வழி எனவும் ஐ.நா நிபுணர்கள் குழு வலியுறுத்தியுள்ளது.

ஸ்ரீலங்காவில் கொரோனா தொற்று நோயாளர்கள் தொடர்பில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் தொடர்பான நான்காவது திருத்தத்தை, சுகாதார அமைச்சுடன் இணைந்து பொதுவைத்திய விசேட நிபுணர்களுக்கான கல்லூரி மற்றும் தொற்று நோயியல் பிரிவு ஆகியன மேற்கொண்டிருந்தன.

தேசிய தொற்று நோயியல் நிறுவகத்தின் பணிப்பாளர் தொற்று நோயியல் விசேட வைத்திய நிபுணர் ஆனந்த விஜய விக்ரம தலைமையில், 14 வைத்தியர்களால் தொகுக்கப்பட்ட 43 பக்கங்களைக் கொண்ட அறிவுறுத்தல்களில் எந்தவாரு சூழ்நிலையிலும் உடலை கழுவக் கூடாது என்பதுடன், சீல் செய்யப்பட்ட பையில் வைத்து சவப் பெட்டியில் வைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதுவும் சர்வதேச தரத்திற்கு முரணானது என்பதை ஐக்கிய நாடுகள் சபை ஸ்ரீலங்கா ஜனாதிபதிக்கு நினைவூட்டியுள்ளது.

மரணித்த ஒருவரின் உடலை தயார் செய்யும் போது , கழுவுதல், சுத்தம் செய்தல், தலைமுடியை சரிசெய்தல், நகத்திற்கு பூச்சிடுதல் மற்றும் சவரம் செய்தல் போன்ற செயற்பாடுகளில் உறவினரோ மதத் தலைவரோ ஈடுபடுவதற்கும் உலக சுகாதார ஸ்தாபனம் தடுக்கவில்லை எனவும் ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது.

எந்தவொரு நபர், தமது பழக்க வழக்கங்கள் அல்லது சடங்குகளின்படி இறுதிக் கிரியைகளை செய்வதற்கு தீர்மானித்தால், அதற்கு தேவையான பாதுகாப்பு மற்றும் சுகாதார ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் ஐ.நா நிபுணர்கள் குழு, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிற்கு எழுதியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.

வெறுப்புணர்வு பேச்சு

கோவிட் 19 தொற்றினால் மரணித்த முஸ்லீம் ஒருவரின் உடலை, குறைந்தபட்ச மத சடங்குகளுடன் புதைப்பதற்கு முஸ்லீம்கள் விடுத்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளதுடன், தொற்றுக்குள்ளான மற்றும் உயிரிழந்த சிறுபான்மையினரை கேவலம் செய்யும் வகையில் சில அதிகாரிகள் இனத்தை வேறுபடுத்தி அடையாளப்படுத்துகின்றமை தொடர்பிலும் ஐக்கிய நாடுகள் சபை கவனம் செலுத்தியுள்ளது.

எந்தவொரு இன மற்றும் மத சமூகத்தினரும் கோவிட் 19 தொற்றுக்கு பொறுப்பு என குற்றஞ்சாட்டுவது அல்லது பழி சுமத்துவதன் ஊடாக இன மற்றும் மத ரீதியான மோதல்கள் அல்லது வன்முறையை தூண்டும் வெறுக்கத்தக்க செய்திகளை பரப்புவதற்கு அல்லது பரப்ப முயற்சிக்கும் எவருக்கும் உங்களின் அரசாங்கம் கடுமையாக கண்டனம் வெளியிட வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்துவதற்கான வாய்ப்பாக இதனைப் பயன்படுத்துவதாகவும் ஐக்கிய நாடுகள் சபை சுட்டிக்காட்டியுள்ளது.

தொற்று நோயினால் முஸ்லீம்கள் இருவர் மரணித்ததாக கொவிட் 19 வைரஸ் தொற்றை முகாமைத்துவம் செய்யும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவரும் இராணுவத் தளபதியுமான லெப்ரினன் ஜெனரல் ஷவேந்திர சில்வா, ஊடக சந்திப்பில் அடையாளப்படுத்தியிருந்ததுடன், இதன்மூலம் முஸ்லீம்களே நோயை பரப்புகின்றார்கள் என குறிப்பிட நன்கு அறியப்பட்ட ஊடகவியலாளர்கள் மற்றும் முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட பிரபலமான நபர்கள் மேற்கொள்ளும் முயற்சிகளை பலரும் கண்டித்திருந்தனர்.

கோவிட் 19 நோயாளர்கள் மற்றும் அதனால் மரணித்தவர்களின் அடையாளத்தை பாதுகாப்பது உட்பட ஸ்ரீலங்கா வாழ் முஸ்லீம் மக்கள் உள்ளடங்கலாக இன மற்றும் மத சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான வெறுப்புணர்வுப் பேச்சுக்கள் அதிகரிப்பதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை தெரியப்படுத்துமாறும் விசேட நிபுணர்கள் குழு ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

ஐக்கிய நாடுகள் சபையின் கடிதத்திற்கு வழங்கப்படும் பதில் அல்லது பிரதிபலிப்பாக புதிததாக ஏற்றுக்கொள்ளப்பட்ட சட்டங்கள், ஒழுங்குமுறைகள் அல்லது கொள்கைகள் 48 மணி நேரத்திற்குள் ஐக்கிய நாடுகளின் இணையத்தளத்தில் பிரசுரிப்பதுடன், மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்படும் அறிக்கையிலும் இந்த விடயங்கள் உள்ளடக்கப்படும் எனவும் ஐ.நாவின் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் சபை இந்த கடிதத்தை அனுப்பி மூன்று நாட்களின் பின்னர் கோவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் உடல்களை தகனம் செய்வது கட்டாயமானது என சுகாதார அமைச்சினால் வெளியிடப்பட்ட சிறப்பு வர்த்தமானியில் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.

Facebook Comments