தனியார் துறை விபத்து இழப்பீடு ‘2 மில்லியன் வரை’

0
Ivory Agency Sri Lanka

கடமையின் போது விபத்துக்களில் உயிரிழக்கும் தனியார் துறை ஊழியர்களுக்கு வழங்கப்படும் நட்டஈட்டை அதிகரிப்பது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

பணியிட விபத்துக்களினால் மரணமடைந்த அல்லது நிரந்தர ஊனமுற்ற தனியார் நிறுவன ஊழியர்களுக்கான இழப்பீட்டுத் தொகையை 20 இலட்சமாக அதிகரிக்க அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, பணியிட விபத்தில் மரணம் ஏற்படும் பட்சத்தில் இதுவரை வழங்கப்பட்ட 550,000 ரூபாவை 2,000,000 ரூபாவாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

அரசாங்கத் தகவல்களுக்கு அமைய, 1934ஆம் ஆண்டின் 19 ஆம் இலக்க ஊழியர்களின் இழப்பீட்டு கட்டளைச் சட்டம் இலங்கையில் தற்போதுள்ள சட்ட ஏற்பாடு ஆகும், இது பணியில் இருக்கும் போது விபத்துக்குள்ளாகும் ஊழியர்களுக்கு நன்மைகளை வழங்குகிறது.

2005ஆம் ஆண்டு 10 ஆம் இலக்க திருத்தச் சட்டத்தின் ஊடாக இச்சட்டத்தினால் அங்கீகரிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகையை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்ட போதிலும், 16 வருடங்களுக்கு முன்னர் நிர்ணயிக்கப்பட்ட இழப்பீட்டுத் தொகை
சட்ட ஏற்பாடுகளும் தற்போதைய சூழ்நிலைக்கு ஏற்றவாறு இல்லாத காரணத்தினால், அதில் சட்டத்தை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிய திருத்தச் சட்டமூலம் விரைவில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுப்பதற்கு தேவையான அதிகாரங்களை அமைச்சரவை வழங்கியமை இந்நாட்டு உழைக்கும் மக்களின் குறிப்பிடத்தக்க சாதனையாகும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

1934ஆம் ஆண்டின் 19ஆம் இலக்க தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டதன் பின்னர், வேலையின்போது ஊழியர்களுக்கு ஏற்படும் விபத்துக்களுக்கு மேலதிகமாக, வசிப்பிடத்திலிருந்து பணிச் செய்யும் இடத்திற்கான பயணத்தின்போது மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியிலும் ஏற்படும் விபத்துக்களுக்கு, இழப்பீடு கோருவதற்கான வாய்ப்பு உழைக்கும் மக்களுக்கு கிடைக்கும் என அரசாங்கம் கூறுகிறது.

“மேலும், இறந்த ஊழியரின் இறுதிச் சடங்குச் செலவுகளுக்கு ஒரு இலட்சம் ரூபாய்க்கு மிகாமல் செலுத்த தொழில் ஆணையாளர் நாயகத்திற்கு அதிகாரம் வழங்குதல், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் நியமிக்கப்பட்ட பதிவாளர் பதவியை அறிமுகப்படுத்துதல் மற்றும் இழப்பீட்டுத் தொகையை மீட்பதற்கான செயற்முறையை விரைவுபடுத்துதல் இந்த புதிய திருத்தப்பட்ட சட்டத்தின் மூலம் எதிர்பார்க்கப்படுகிறது.

தினக்கூலி மற்றும் துண்டு அடிப்படையில் ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகையை கணக்கிடுதல், குறைந்தபட்ச மற்றும் அதிகபட்ச மாத சம்பளத்தை நிர்ணயித்தல், நிரந்தர முழு மற்றும் தற்காலிக ஊனம் ஏற்பட்டால் வழங்கப்படும் இழப்பீட்டுத் தொகை உள்ளிட்ட அனைத்து விடயங்களையும் புதிய திருத்தச் சட்டம் புதுப்பிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Facebook Comments