தொலைக்காட்சியில் வெறுப்புணர்வை அனுமதித்து, சமூக ஊடகர்கள் கைது

0
ඡායා - ෂෙහාන් ගුණසේකර
Ivory Agency Sri Lanka

கொரோனா தொற்றுநோய் தொடர்பில் சமூக ஊடகங்களில் தவறான தகவல்களை பரப்புவர்களை கைது செய்யும் பொலிஸார் நாட்டின் சாதாரண சட்டத்தை பின்பற்றுவதில்லை என, இணையதள ஊடக ஆர்வலர்கள் குழு குற்றம் சாட்டியுள்ளது.

சந்தேகநபர்களை சிறையில் அடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்தைக் கொண்ட பொலிஸார், சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையைப் பயன்படுத்தி நீதிமன்றங்களில் வழக்குகளைத் தாக்கல் செய்து வருவதாக, இணையதள ஊடக செயற்பாட்டாளர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

தனது கருத்தை பேஸ்புக்கில் பதிவிட்ட, ரமிஸ் ரசீக், கடந்த 9ஆம் திகதி குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட சமீபத்திய உதாரணம் என, அந்த அமைப்பின் ஏற்பாட்டாளர் சம்பத் சமரகோன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கையின் கீழ் ரசீக் மீது குற்றம் சாட்டப்படு, கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளதாகவும், சந்தேகநபரை சிறையில் அடைக்க பொலிஸார் வேண்டுமென்றே மேற்கொண்ட முயற்சியே இதுவென தாம் எண்ணுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எவ்வாறாயினும், இனங்களுக்கு இடையில் வெறுப்புணர்வு, வன்முறை போன்றவற்றை தூண்டும் வகையிலோ, சட்டத்தை மீறியோ எந்தவொரு பதிவையும் ரசீக் வெளியிடவில்லை எனவும், எனினும் ‘சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கை’ சட்டத்தைப் பயன்படுத்தி பொலிஸார் சுமத்தியுள்ள குற்றச்சாட்டின் ஊடாக, கருத்துச் சுதந்திரத்திற்கு பொலிஸார் வேண்டுமென்றே பாதிப்பினை ஏற்படுத்துவதாக அமைந்துள்ளதாக சம்பத் சமரகோன் தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கடுமையான தொற்றுநோய் தாக்கம் இருந்தபோதிலும், இலங்கையிலும் சர்வதேச அளவிலும் பேச்சு மற்றும் கருத்துச் சுதந்திரம் உள்ளிட்ட மனித உரிமைகளைப் பாதுகாக்க இலங்கை அரசு உறுதிபூண்டுள்ளமை உண்மையெனின், இது குறித்து அரசாங்கம் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும் இதுபோன்ற அனைத்து சம்பவங்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதோடு, சட்டமா அதிபர் திணைக்களம், பொலிஸ் மற்றும் பிற நிறுவனங்கள் மக்களின் உரிமைகளைப் பாதுகாக்க கடமைப்பட்டுள்ளதாகவும் அந்த அமைப்பு மேலும் வலியுறுத்தியுள்ளது.

தொலைக்காட்சியின் ஊடாக இவ்வாறான வெறுக்கத்தக்க, மக்கள் மத்தியில் பிரிவினையை ஏற்படுத்தும் கருத்துக்களுக்கு எதிராக பொலிஸார் உள்ளிட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்தும் நிறுவனங்கள் அமைதி காப்பது தொடர்பில் தாம் அவதானம் செலுத்தியுள்ளதாகவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

எந்தவொரு சட்டவிரோத செயல் தொடர்பிலும் சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக ‘பொதுவான சட்டத்தின்’ கீழ், எடுக்கப்படும் எந்தவொரு சட்ட நடவடிக்கையையும் தாம் எதிர்க்கவில்லை எனவும், எனினும் அந்த கைதுகள் கருத்து சுதந்திரத்தை அச்சுறுத்தும் வகையில் அமையக்கூடாது எனவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இந்த கைது நாட்டின் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.

சமூக ஊடகங்களில், கொரோனா தொற்றுநோய்த் தொடர்பில் பொய்யான செய்திகள், வெறுக்கத்தக்க பேச்சுக்களை வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் 17 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஜாலிய சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

Facebook Comments