உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் முஸ்லீம் சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு

0
Ivory Agency Sri Lanka

ஸ்ரீலங்காவில் ஒருவருடத்திற்கு முன்னர் 200 ற்கும் அதிகமானவர்களின் உயிர்களை காவுகொண்ட உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட சந்தேகத்தின் பேரில் இரகசியப் பொலிஸாரினால் முன்னணி முஸ்லீம் சட்டத்தரணி கைதுசெய்யப்பட்டமை, சட்டவிரோதமான, எதேச்சை அதிகார நடவடிக்கை என கண்டனம் வெளியிடப்பட்டுள்ளது.

சட்டத்தரணி ஹெஜாஸ் ஹிஸ்புல்லா, முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் சகோதரர் ரியாஜ் பதியூதீன், பெயர் குறிப்பிடப்படாத சுங்கத் திணைக்கள அதிகாரி உட்பட 6 பேர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் கடந்த ஏப்ரல் மாதம் 14 ஆம் திகதி, புதிய கோணத்தில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ ஆட்சிபீடம் ஏறிய பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட மக்களின் கவனத்தை பெற்ற குற்றங்கள் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டுவந்த குற்றப்புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் ஷானி அபேசேகர உள்ளிட்ட அதிகாரிகள் நீக்கப்பட்டு, புதிய குழுவினரிடம் பொறுப்பளிக்கப்பட்டது.

தாக்குதல்தாரிகளுடன் நேரடித் தொடர்புகளைப் பேணியமை தொடர்பிலேயே ஆறு பேரும் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.

சட்டத்தரணியொருவர் தாக்குதல்தாரிகளுடன் நேரடியாக தொடர்புகளைப் பேணியமை தெரியவந்துள்ளது. அத்துடன் தாக்குதல்தாரிகள் சிலரும் ஒன்றிணைந்து சில நிறுவனங்களின் பதவிகளையும் வகித்துள்ளளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களை திட்டமிட்ட விடயத்திலும் சம்பந்தப்பட்டுள்ளமை தெரியந்துள்ளதாக கொழும்பில் வைத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் ஜாலிய சேனாரத்ன குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்தரணிகள் சங்கத்தின் தலையீடு

ஸ்ரீலங்கா சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான காலிங்க இந்ததிஸ்ஸ, பொலிஸ் பிரதானிக்கு எழுத்தியுள்ள கடிதத்தில், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா, தொழில்முறை ரீதியில் சில நிகழ்வுகளில் பங்கேற்றதன் அடிப்படையில் அவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நாடாளுமன்ற அதிகாரத்தை கைப்பற்றுவதற்கு எதிராக தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் கூல், உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மீதான மனு மற்றும் தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் மீது கடும்போக்குவாதிகள் நடத்திய தாக்குதல் தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான வழக்குகளில் ஹிஸ்புல்லா முன்னிலையாகியிருந்தார் என அவர் கூறியுள்ளார்.

இந்தக் கைது சட்டவிரோதமானதும் தன்னிச்சையானதுமான நடவடிக்கை எனவும் எதிர்ப்பு கருத்துக்களை அடக்கும் நோக்கத்துடன், போட்டித்தன்மையை தணிக்கும் வகையில் தொடர்ச்சியாக அங்கீகாரம் பெற்றுவந்த சட்டத்தரணி ஹிஸ்புல்லா கைதுசெய்யப்பட்டுள்ளதாக அவரது குடும்ப உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக விசனம் வெளியிட்டுள்ளனர்.

தனது சகோதரர் ரியாஜ் பதியூதீன் கைதுசெய்யப்பட்டதன் பின்புலத்திலும் அரசியல் நோக்கமே இருப்பதாக முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தொற்று சூழலில் அரசாங்க அதிகாரிகள் மற்றும் சிங்கள ஊடகவியலாளர்களால் மேற்கொள்ளப்படும் முஸ்லீம் விரோத உணர்வலைகளை தடுப்பதற்கு எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவிடம் ஐ.நா விசேட நிபுணர்கள் கேள்வி எழுப்பியுள்ள சூழலில், குற்றப்புலனாய்வு பிரிவினரின் இந்த கைது நடவடிக்கை இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Facebook Comments