கொவிட் 19 பரவலை தடுக்கும் வகையில் இஸ்லாம் மார்க்க செயற்பாடுகளுக்கு கட்டுப்பாடுகள் விதிப்பு

0
Ivory Agency Sri Lanka

ஸ்ரீலங்காவில் இஸ்லாம் மார்க்க செயற்பாடுகளை நிர்வகிப்பதற்காக அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்ட சபையானது, கொரோனா தொற்று நோய் பரவுவதை தடுக்கும் வகையில் முஸ்லீம்கள் மீது கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

அந்த கட்டுப்பாடுகளின் பிரகாரம் ரமழான் நோன்பு காலத்தில் முஸ்லீம்களால் பாரம்பரியமாக செய்துவரும் கூட்டுத் தொழுகைகளை நடத்த வேண்டாம் என இலங்கை வக்ப் சபையின் றமழான் 2020 க்கான பணிப்புரைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று இலங்கை வக்ப் சபையினால் வழங்கப்பட்ட பணிப்புரைகள் றமழான் மாதம் முழுவதற்கும் அல்லது மறு அறிவித்தல் வரை அமுலில் இருக்கும் என அனைத்து பள்ளிவாசல் நிர்வாகங்களுக்கும் அனுப்பியுள்ள அறிவுறுத்தலில் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மற்றும் வக்ப் சபை ஆகியவற்றின் பணிப்பாளரான ஏ.பி.எம்.அஷ்ரப் குறிப்பிட்டுள்ளார்.

இதன்பிரகாரம் ரமழான் நோன்பு காலத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள் மற்றும் முஸ்லீம் மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய நான்கு விதிகள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

முதலாவதாக இமாம்/ முஅத்தின்மார் அல்லாத எந்தப் பொதுமக்களுக்காகவும் பள்ளிவாயல்களைத் திறக்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜும்ஆ தொழுகை, ஐவேளை தொழுகை, தராவீஹ் தொழுகை உட்பட எதுவிதமான கூட்டுத் தொழுகைகளையும் நடாத்த வேண்டாம் என்றும் இலங்கை வக்ப் சபை அறிவுறுத்தியுள்ளது.

இப்தார் நிகழ்ச்சி போன்ற எதுவித ஒன்றுகூடல்களையும் நடாத்த வேண்டாம் என்றும் பள்ளிவாயிலின் உள்ளோ அல்லது பள்ளிவாயல் வளாகத்தின் உள்ளே கஞ்சி காய்ச்சவோ அல்லது கஞ்சி பகிர்ந்தளிக்கவோ வேண்டாம் என்றும் இலங்கை வக்ப் சபை முஸ்லீம் மக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

பள்ளி ஜமாத் அங்கத்தவர்களுக்கு இந்த பணிப்புரைகள் பற்றி முறைப்படி அறிவிக்குமாறும் கொவிட்- 19 தொடர்பான சுகாதார அமைச்சினாலும் பாதுகாப்புத் தரப்பினராலும் வழங்கப்படும் பணிப்புரைகளையும் வழிகாட்டல்களையும் பற்றி ஜமாத் அங்கத்தவர்களுக்கு தெளிவூட்டுவதோடு அவற்றைப் பின்பற்றியொழுகுமாறு மக்களை ஊக்கப்படுத்துமாறும் இலங்கை வக்ப் சபை அனைத்து பள்ளிவாயல் நிர்வாகிகளையும் பணித்துள்ளது.

முஸ்லீம் பள்ளிவாசல் மற்றும் தொண்டு நிறுவனங்கள், வக்ப் சட்டத்தின் பிரகாரம் செயற்படுவதை நோக்காக கொண்டு, முஸ்லீம் கலாசார விவகாரங்களுக்கு பொறுப்பான அமைச்சர் மற்றும் பணிப்பாளர் ஆகியோரால் நியமிக்கப்பட்ட ஏழு உறுப்பினர்களை கொண்ட அமைப்பே இலங்கை வக்ப் சபை என்பதும் குறிப்பிடத்தக்கது.

Facebook Comments