தொற்றுநோயின் போது தொழிலாளர் பிரச்சினைகள் குறித்து விசாரிக்கும் குழு 3 மாதங்களாக சந்திக்கவில்லை

0
Ivory Agency Sri Lanka

கொடிய கொரோனா தொற்றுநோயின்போது தொழிலாளர்களின் பிரச்சினைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ள அமைக்கப்பட்ட உயர்மட்டக் குழு, மூன்று மாதங்களாக கூட்டப்படாத நிலையில் இது குறித்து கவலை வெளியிட்டுள்ள, தொழிற்சங்கத் தலைவர்கள், ஒரு வார காலத்தில் குறித்த குழுவைக் கூட்டாவிட்டின் சுயாதீனமான ஒரு தீர்மானத்திற்கு வரவுள்ளதாக அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கொரோனா தொற்றுநோய் மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான முத்தரப்பு நடவடிக்கைக் செயலணி மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவை உடனடியாகக் கூட்ட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி, சுதந்திர வர்த்தக வலயத்தில் உள்ள ஐந்து தொழிற்சங்கங்கள், தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு மே 27 வெள்ளிக்கிழமை எழுத்து மூலமான அறிவிப்பை விடுத்துள்ளன.

தினேஷ் குணவர்தன தொழில் அமைச்சராக இருந்த காலத்தில், அவர் தலைமையில் முதலாளிமார், தொழிற்சங்கங்கள் மற்றும் அமைச்சினை உள்ளடக்கியதாக முத்தரப்பு செயலணி உருவாக்கப்பட்டது.

பெண்கள் பரந்த அளவில் பணியாற்றும், முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்தில், தொழிலாளர் பிரச்சினைத் தொடர்பில் ஆராய்ந்து பார்ப்பதற்காக கொரோனா தொற்றுநோயின் ஆரம்ப நாட்களில் நியமிக்கப்பட்ட முத்தரப்பு செயலணியில், பெண்களின் பிரதிநிதித்துவம் இல்லாமை குறித்து, சுதந்திர வர்த்தக வலயத்தில் ஒரு முன்னணி ஆர்வலரால் அப்போது குற்றம் சாட்டப்பட்டது.

”இதற்கான ஒரே நிறுவனம் செயலணியே. அந்த செயலணியில் பெண்களுக்கு தனித்தனி பிரதிநிதித்துவம் இல்லை. முதலாளிகளின் சங்கங்கங்களைப்போல் பெண்களின் பிரதிநிதித்துவத்தை உறுதிப்படுத்தும் வகையில் இதைப் புதுப்பிக்குமாறு நாங்கள் அவர்களிடம் கேட்டுக்கொள்கிறோம். ஊரடங்கு காலத்திலேயே இந்த செயலணி உருவாக்கப்பட்டது. 14 தொழிற்சங்கங்களில் 4 தொழிற்சங்கங்கள் மாத்திரமே இதனை பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. பெண்களின் பிரதிநிதித்துவம் இதில் இல்லை.” என தாபிந்து அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் சமிலா துஷாரி தெரிவித்திருந்தார்.

தொற்று நோயின் மூன்றாவது அலை விரைவாக பரவுவதற்கு ஆடைத் தொழிற்துறை மாறியுள்ள நிலையில், கடந்த வாரம் ஆடைத் தொழிலாளர்கள் மத்தியில் இரண்டாவது மரணம் நிகழ்ந்ததை தொழிற்சங்கத் தலைவர்கள் தற்போதைய தொழில் அமைச்சர் நிமல் சிரிபாலா டி சில்வாவை நினைவுபடுத்தியுள்ளனர்.

மேலும், சுதந்தில வர்த்தக வலயங்களில் மற்றும் அதைச் சுற்றியுள்ள நூற்றுக்கணக்கான ஆடைத் தொழிற்சாலைகளில் தொற்றாள்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதால், அவர்களில் பெரும்பாலானவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

“உள்ளூர் மக்களின் தலையீடு காரணமாக பல தொழிற்சாலைகள் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.”

கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு மத்தியில், தொழிற்சாலை நிர்வாகம், தொழிலாளர்களை பலவந்தமாக சேவைக்கு அழைப்பது மிகவும் பாரதூரமான விடயமென்பதை சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்கத் தலைவர்கள், தொற்றுநோய் குறித்த தகவல்களை வழங்கத் தவறியதோடு, நோய் பரவாமல் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்காமைத் தொடர்பில், கொக்கலை எஸ்குவல் தொழிற்சாலையின் நிர்வாத்திற்கு எதிராக, சுகாதார பரிசோதகர்களால், காலி மேலதிக நீதவானிடம் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை எடுத்துக்காட்டியுள்ளனர்.

தொழில் ஆணையாளர் நாயகம், தலைமையிலான விசாரணைக் குழு, முத்தரப்பு செயலணியின் தீர்மானங்களை மீளாய்வு செய்ய வாரந்தோறும் சந்திக்க தீர்மானித்திருந்ததாகவும், எனினும், 2021 மார்ச் 3 முதல் சந்திப்பு இடம்பெறவில்லை எனவும் தொழிற்சங்கத் தலைவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

“இந்த சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, உங்கள் தலைமையின் கீழ் உள்ள முத்தரப்பு செலணியை உடனடியாகக் கூட்டுமாறு கோரப்பட்டது, ஆனால் அது 2021 மார்ச் 3ற்குப் பின்னர் சுமார் மூன்று மாதங்களாக கூட்டப்படவில்லை. தொழிற்சங்க செயற்பாட்டில் உள்ள உறுப்பினர்களாக, நாங்கள் எங்கள் கவலையை இங்கே வெளிப்படுத்துகிறோம்.” என அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு

தனியார் துறை மற்றும் தோட்டத் துறையின் பணியாளர்களைப் பாதிக்கும் ஓய்வூதிய வயதை விரிவாக்குவது மற்றும் ஊதியக் கட்டளைச் சட்டத்தின் 59ஆவது பிரிவு “ஏ” திருத்தப்பட்டதைப் பற்றி விவாதிப்பதற்கான ஒரே அமைப்பான, தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழுவும் கடந்த மார்ச் 18ஆம் திகதிக்கு பின்னர் இரண்டு மாதங்களுக்கு மேலாக இதுவரை கூட்டப்படவில்லை என தொழிற்சங்கத் தலைவர்கள் தெரிவிக்கின்றனர்.

நாடு கொரோனா தொற்றுநோய் அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ள இவ்வாறான சந்தர்ப்பங்களில் இதுபோன்ற கூட்டங்கள் சாத்தியமில்லை என சில அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக தெரிகின்ற போதிலும், 225 உறுப்பினர்களுடன் நாடாளுமன்றக் கூட்டங்களும், கிட்டத்தட்ட 30 அமைச்சர்களுடன் அமைச்சரவைக் கூட்டங்களும் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டியுள்ள தொழிற்சங்க பிரதிநிதிகள்
செயலணி மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டங்களை கூட்டாமைக்கு என்ன காரணம் என அமைச்சரிடம் கேள்வி எழுப்பியுள்ளனர்.

“தனியார் துறை ஊழியர்களைக் கையாளும் ஒரே அமைச்சு மற்றும் தொழில் திணைக்களத்தின் இயலாமை குறித்து எங்களது அதிருப்தியை வெளிப்படுத்துகின்றோம்.”

இந்த கடிதத்தைப் பெற்ற ஏழு நாட்களுக்குள் முத்தரப்பு செயலணி குழு மற்றும் தேசிய தொழிலாளர் ஆலோசனைக் குழு கூட்டப்படாவிட்டால், தமது பிரச்சினைகள் குறித்து சுயாதீனமான தீர்மானத்தை மேற்கொள்ளப்போவதாக, தொழிற்சங்கத் தலைவர்கள் தொழில் அமைச்சரிடம் லியுறுத்தியுள்ளனர்.

தொழில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தின் பிரதி, தொழில் ஆணையாளர் நாயகம், மற்றும் தொழில் அமைச்சின் சர்வதேச உறவுகள் சிரேஷ்ட உதவி செயலாளர் – பி.வசந்தன் வசந்த ஆகியோருக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் லெஸ்லி தேவேந்திர, சுதந்திர வர்த்தக வலயம் மற்றும் பொதுச் சேவை ஊழியர் சங்கத்தின் இணைச் செயலாளர் அன்டன் மார்கஸ், இலங்கை மாலுமிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பாலித அத்துகோரல, இலங்கை வர்த்தக மற்றும் தொழில்துறை பொதுச் செயலாளர் சில்வெஸ்டர் ஜெயகொடி மற்றும் ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் லினஸ் ஜெயதிலக உள்ளிட்ட தொழிற்சங்கத் தலைவர்கள் இந்த கடிதத்தை அனுப்பி வைத்துள்ளனர்.

Facebook Comments