அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க மதத் தலைவர்கள் வேண்டுகோள்

0
Ivory Agency Sri Lanka

இலங்கையின் வடக்கிலுள்ள மதத் தலைவர்கள் ஒருங்கிணைந்து அரசியல் கைதிகளுக்கு பொது மன்னிப்பு அளிக்க கோரி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.

தமது ஒற்றுமையை வெளிப்படுத்தும் விதத்தில் அவர்கள் இணைந்து எழுதியுள்ள கடிதத்தில் இந்த அரசியல் கைதிகள் மிக நீண்ட காலமாக சிறையிலுள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளனர்.

பொது நோக்கம் ஒன்றுக்காக இணைந்து ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ள இந்து, பௌத்த, முஸ்லிம் மற்றும் கிறிஸ்துவ மதத் தலைவர்கள் அந்தக் கைதிகளின் பெற்றோ, மனைவிமார் மற்றும் பிள்ளைகளின் “கண்ணீர் மற்றும் துயரங்களால்“ தாங்கள் மிகவும் வேதனையடைந்துள்ளதாக கூறியுள்ளனர்.

யாழ் ஸ்ரீ நாக விகாரையின் வண. மீகாஹஜுதர ஸ்ரீ விமல தேரர், சிவகுரு ஆதீனம் தவத்திரு வேலன் சுவாமிகள், நல்லை ஆதீன தலைமை சிவாச்சாரியார் கலாநிதி ஜெகதீஸ்வரக் குருக்கள், வண. அருட்தந்தை ஜோசப்தாஸ் ஜெபரட்ணம் குரு முதல்வர் யாழ் மறை மாவட்டம், எம் என் எம் இர்ஃபான் (நூரி) தலைவர் அகில இலங்கை ஜமாயத்துல் உலமா யாழ்ப்பாணம்/கிளிநொச்சிப் பிரிவு மற்றும் வண. அருட்தந்தை மங்களராஜா தலைவர் நீதி மற்றும் சமாதானத்துக்கான குழு, யாழ் மறை மாவட்டம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் முன்னர் எப்போதையும்விட கொரோனா தொற்று காலத்தில் அந்த அரசியல் கைதிகளின் விடுதலை மிகவும் அத்தியாவசியமானது என்று வலியுறுத்தியுள்ளனர்.

ஜனாதிபதிக்கு மிகவும் உருக்கமாக எழுதியுள்ள அந்தக் கடிதத்தில் அந்தக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் துயரங்கள் குறித்து தமது ஆழ்ந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளனர்.

“குடிமக்களின் ஒரு பகுதியினர், அவர்கள் எவ்வளவு குறைந்த அளவிலிருந்தாலும் சரி, அதீத கொடுமைகளையும் மன அழுத்தங்களையும் எதிர்கொள்ளும் போது, இதர பொது மக்கள் பாராமுகமாக இருக்க முடியாது“ என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆயுள் தண்டனை மற்றும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்கள் கூட நாட்டில் பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்படுகின்றனர் என்று அந்த மத குருமார்கள் தமது கடிதத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.

“இந்த அனுகூலங்கள் துரதிர்ஷ்டமான இந்த அரசியல் கைதிகளுக்கு கிடைப்பதில்லை என்பது குறித்து நாங்கள் மிகவும் வருந்துகிறோம்“ எனவும் அந்த ஆறு குருமார்கள் தெரிவித்துள்ளனர்.

சில அரசியல் கைதிகள் 8-10 ஆண்டுகளும், மேலும் சிலர் 10-15 ஆண்டுகளாகச் சிறையில் வாடுவதையும் சுட்டிக்காட்டியுள்ள அந்த மத குருமார்கள், அவர்களின் குடும்பங்கள் சொல்லொணா துன்பங்களை அனுபவித்து வருகிறார்கள் என்று தமது கடிதத்தில் கூறி, உடனடியாக அவர்களை விடுவிக்கக் கோரியுள்ளனர்.

சிறைகளில் 4000 பேருக்கும் மேலானவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் அதில் ஆகக் குறைந்தது 16 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது என்றும் கூறும் அவர்கள், அதனால் அவர்கள் மிகவும் விரக்தியும் மனச் சோர்வும் அடைந்துள்ளதாக வருந்தியுள்ளனர்.

அரசியல் கைதிகள் விடுவிக்கப்பட்டால் அவர்கள் சமூகத்துடன் நன்றாக இணைந்து கொள்வார்கள் என்று அந்த மதகுருமார்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

“சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டால் அவர்களால் சமூகத்துக்கு எவ்வித தீங்கும் ஏற்படாது என்று நாங்கள் உண்மையாகக் கருதுகிறோம்“.

அரசியல் கைதிகளின் விடுதலை நாட்டில் சமாதானம் மற்றும் நல்லிணக்கத்தை முன்னெடுக்க பெரிதும் உதவும் என்று எண்ணுவதாக அவர்கள் ஜனாதிபதிக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளனர்.

எதிர்வரும் மார்ச் மாதம் ஐநா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான விவாதம் வரவுள்ள நிலையில் அவர்களின் கடிதம் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஐ நா மற்றும் இதர பன்னாட்டு அமைப்புகளின் கண்டனங்களை இலங்கை எதிர்கொண்டுள்ளது.

இலங்கை தொடர்ந்து “மோசமான மனித உரிமை மீறல்களில்“ ஈடுபடுவதாக அந்த அமைப்புகள் குற்றஞ்சாட்டியுள்ளன.

Facebook Comments