இரண்டு வருடங்களுக்கு முன்னர் இரண்டு பேர் கொல்லப்பட்டதோடு, குறைந்தது முப்பது பேர் காயமடையக் காரணமாக அமைந்த முஸ்லீம்கள் மீதான கண்டித் தாக்குதலின் போது மத்திய மாகாணத்திற்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரி அரசாங்கத்தின் உயர் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
திகன பிரதேசத்தை மையமாகக் கொண்டு, கடந்த 2018ஆம் ஆண்டு, மார்ச் மாதம் கண்டி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட முஸ்லிம் விரோத வன்முறைகளின் போது, சட்டம் மற்றும் ஒழுங்கிற்கு பொறுப்பாக இருந்த எஸ்.எம் விக்ரமசிங்கவே ”பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் மனக் குறைகளை கேட்டறிந்து உடனடியாக நிவாரணங்களை பெற்றுக்கொடுக்கும்” ஒம்புட்ஸ்மன் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
”நிர்வாக அதிகாரங்களை நடைமுறைப்படுத்தும் போது அரச அதிகாரிகள் பொறுப்பிலிருந்து விலகியிருந்தால் அல்லது அதனை தாண்டி செயற்பட்டிருந்தால் அதன் மூலம் பொதுமக்களுக்கு அசௌகரியங்கள் அல்லது அழுத்தங்கள் ஏற்பட்டிருக்குமானால் அது பற்றி கண்டறிந்து தீர்வுகளை வழங்குவது ஒம்புட்ஸ்மன் அலுவலகம் அமைக்கப்பட்டிருப்பதன் நோக்கமாகும்.” என ஜனாதிபதி செயலகம் அறிக்கை ஒன்றின் தெரிவித்துள்ளது.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவே, வன்முறை குற்றச்சாட்டுக்கு உள்ளான மஹசோன் அமைப்பின் தலைவர் அமித் ஜீவன் வீரசிங்கவை, குழப்பங்கள் ஏற்பட்ட தினத்தன்று இரவு திகனவிற்கு அழைத்ததாக, அந்த நேரத்தில் குற்றம்சாட்டப்பட்டவரின் மனைவியும், பௌத்த தேரரும் முன்வைத்த குற்றச்சாட்டு இதுவரை மறுக்கப்படவில்லை.
“கண்டி சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபரே, அமித் வீரசிங்க இந்த சந்தர்ப்பத்தில் நீங்கள் இங்கு இருக்க வேண்டும் என அவரை இந்த பிரச்சினையில் சிக்கவைத்தார்” என வீரசிங்கவின் மனைவி ஜெயங்கனி சிதும் குமாரி முன்னதாக ஊடக சந்திப்பில் குறிப்பிட்டிருந்தார்.
சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் விக்ரமசிங்க, மோதல்களுக்கு ஆட்களை வரவழைத்ததாக, முஸ்லீம்களுக்கு எதிரான வன்முறை தீவிரமடைந்த மார்ச் 5ஆம் திகதி, மட்டக்களப்பு மங்களாராம விஹாராதிபதி தெரிவித்திருந்தார்.
“சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் முதல், பொலிஸ் பரிசோதகர்கள் வரை அனைத்து முன்னாள் அதிகாரிகளும் என்ன செய்தார்கள் எனின் மாகாணத்தில் உள்ள அனைத்து பௌத்த தேரர்களையும் பொலிஸ் நிலையத்திற்கு அழைத்து, அமித் வீரசிங்க மற்றும் அரசியல் கட்சிகளையும் வரவழைத்து, இந்த மோதலை அந்த பொலிஸ் நிலையத்தின் அதிகாரியே ஏற்படுத்தினார் என, இந்த உலகத்தில் எங்கு வேண்டுமென்றாலும் வந்து சாட்சியமளிக்க நான் தயார்” அம்பிட்டிய சுமன தேரர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.
சர்வதேச கவனம்
கண்டி மாவட்டத்தில் 2018ஆம் ஆண்டு முஸ்லீம் எதிர்ப்பு வன்முறையில் பொலிஸார் நேரடியாக ஈடுபட்டனர் என்பதற்கான நம்பகமான ஆதாரங்களை ஊடகவியலாளர்கள், முஸ்லிம் சமூகத் தலைவர்கள் மற்றும் ஐக்கிய நாடுகள் சபை வெளியிட்டிருந்தாலும், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இதுவரை வெளியிடப்படவில்லை.
இருவர் உயிரிழக்கவும், 28 பேர் காயமடையவும், மதஸ்தலங்கள், வியாபார நிலையங்கள் மற்றும் வீடுகள் பலவும் சேதமடையவும் காரணமாக அமைந்த, மலையக முஸ்லிம்கள் மீதான இனவெறி தாக்குதல்கள் தொடர்பாக இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை, எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு இதுவரை நட்டஈடு வழங்கப்படவில்லை எனவும் இலங்கையின் மத சுதந்திரம் குறித்த, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் 2019ஆம் ஆண்டுக்கான அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் எஸ்.எம். விக்ரமசிங்கவை அவரது காரியாலயத்தில் நேரடியாக சந்தித்து பொதுமக்கள் தமது முறைப்பாடுகள் மற்றும் பிரச்சினைகளை முன்வைக்க முடியுமென ஜனாதிபதி செயலகம் தெரிவித்துள்ளது.
மேலும், ‘ஜனாதிபதி அலுவலகத்தின் ஒம்புட்ஸ்மன், ஜனாதிபதி அலுலவகம், கொழும்பு 01’ என்ற முகவரிக்கு தபால் மூலம் முறைப்பாடுகளையும் மனக்குறைகளையும் முன்வைக்க முடியும். 011-2338073 என்ற தொலைபேசி/தொலைநகல் இலக்கத்திற்கு அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தமது முறைப்பாடுகளை அனுப்பிவைக்க முடியும்.